ஆசாமி - சிறுகதை

“ஆசாமி “ -சிறுகதை
வேர்வை சிந்த ஒழைக்கிறறோம், சோத்துக்கே வழியில்லை.
ஆசாமிக்கு...”எல்லாமே தேடிவருது, என்ன தகிடுதத்தம் பண்றாரோ” தனக்கு தானே புலம்பி கொண்டான். இராஐவேல்.
என்னதான் பண்றாரு, ஆசாமி, வேவு பார்த்தான்.
அதிகாலை எழுந்திருப்பார், காலைக்கடன் முடித்து, குளித்தபின் ”கிழக்கே பார்த்து ஒரு கும்பிடு.. மரத்தடியில் உட்கார்ந்து கண்மூடிக் கொள்வாளர். வேற ஒண்ணும் பெரிசா செய்யறதுமில்லே.
கண்விழிப்பார், அவருக்கு முன்னால் பழவகைகள் தட்டுத்தட்டாய்... சுற்றிலும் ஒரு பார்வை. சற்று நேரத்தில் யாராவது ஒருவர் ” இதைச் சாப்பிடுங்க” என ஏதாவது கொடுப்பார்கள். அதில் ஒரு நாலு வாய். பழத்தட்டில் இருந்து ஒரு பழம் சாப்பிட்டு... மீண்டும் கண்மூடிக் கொள்வார் அவ்வளுவுதான்.
ஆச்சர்யம்! இராஐவேலுக்கு.. ஒண்ணுமே செய்யாத ஆசாமிக்கு உபசரிப்பா? .
நேர்ல கேட்டுட வேண்டியதுதான் என தீர்மானித்து ”என்னப்பா ஆசாமி, காலைல குளிக்கிற, சும்மா ஒக்காந்து கண்ணை மூடறே.. அதுக்கே இவ்வளுவு உபசரிப்பா?
நானும் பண்றேன், எனக்கு உபசரிப்பு கிடைக்காதா என்ன? என்று கேட்டான்..
உட்கார விடாதுப்பா உன்னை, ஓடிடுவே” என்றார் ஆசாமி.
பார்க்கலாமே. என இராஐவேலுவும் அதேபோல் கண்மூடி ஒரிடத்தில் உட்கார்ந்தான்.
”அப்பா, நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு ஒன்னைய கூட்டி வரச்சொன்னாரு வாத்தியார்” மகனின் கோரிக்கைக் குரல்.
”ஒன்னைய வெட்டாம விடமாட்டேன், ஒண்ணு நீ இருக்கோணும், இல்ல நான் இருக்கோணும்” பங்காளி ஒருவனின் மிரட்டல். இப்படி எண்ண குப்பைகள் வர...வர திடுக்கிட்டான். மறுபடியும்.
. ”துப்பு கெட்ட மனுஷா, சோத்துக்கு அரசி வாங்கியா, இல்லேன்னா ராத்திரி பட்டினிதான், மனைவியின் குரல்.
எழுந்து ஓட ஆரம்பித்தான். அவனைத் தடுத்த ஆசாமி, என்ன ஓடறீயே...ன்னு கேட்டார்.
”வீட்ல,அரிசிக்காக பொண்டாட்டி காத்திருப்பா, இல்லேன்னா, இராத்திரிக்கு சோறு கிடையாதாம் ”சாமி” என்றான்.
ஆசாமி என்றவன் வாயில் இருந்து, ”சாமி” என்றதைக்கேட்டு மௌனமாக சிரித்தபடியே மறுபடியும் கண்மூடி அமர்ந்தார் அந்த ஆசாமி. ...
— கே. அசோகன்