தலைவனும் தலைவியும்

கோலத்தில்
மூன்று புள்ளி
வைக்கவே
அனுமதி என்றால்
என் செய்வாய் ?
தமிழின்
ஆயுத எழுத்தை
இடுவேன் .....
வானின்
நட்சத்திரங்களை
எண்ண சொன்னால்
என் செய்வாய் ?
முடிவிலி
என்று
சொல்வேன்
உன்னையும் (என்னையும்)
சேர்த்து ...
ஓடும்
நீரை
பிடிக்க சொன்னால்
என் செய்வாய் ?
ஓடும்
நீரை
விடுத்து
என் கண் எதிரே
நிற்கும்
நீரை பிடிப்பேன் .....
வைகறை நேரம்
வானம் மூடும்
தொடரு
என்றால்
என் செய்வாய் ?
இளந்தென்றல் வீசும்
மல்லிகை தோட்டம்
மாராப்பு ஓரம்
கசியும் பாலும் (சேய்க்கு தாய் பால் வார்க்கிறாள்)
கையும் கண்ணும்
மறந்தது யாவும் (தலைவனை கண்ட தலைவி மூர்ச்சையானாள்)
நண்பனாய் நான்
காதலனாய் நான்
கணவனாய் நான்
விவரி என்றால்
என் செய்வாய் ?
கணவனான என் உயிரே.....
கணவன் ஆன பின் தான்
என் காதலனாய்.....
என் நண்பனாய்.....
ஆகினாய் ஆதலால்
கணவனுக்குள்
மற்ற இரண்டும் (காதலன்,நண்பன்)
அடக்கம்
என்பேன் நான் ....
என்னை பற்றி மட்டும்
யோசிக்கையில்
நீ என் நண்பன் .....
நம்மை பற்றி மட்டும்
யோசிக்கையில்
நீ என் காதலன் .....
நம் குழந்தைகளையும்
நம்மையும்
நம் குடும்ப வாழ்க்கையையும்
பற்றி யோசிக்கையில்
நீ என் கணவன் .....
அகரம் வந்தால்
உகரம் ஓடும்
என்பதை நம்
வாழ்க்கையோடு
ஒப்பிட்டு கூறு
என்றால்
என் செய்வாய்?
நீங்கள்
வாங்கி தந்த
பட்டு ஆடையை
நம் மொட்டு
பட்டாடை புடவையால்
தூளி கட்டி
தூங்குகிறாள்
தூரத்தை குறைத்திட .....
எப்படியோ !
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே .....
உங்களுக்கு தெரியாதா...
உங்களுக்கா தெரியாது ...
என் உயிரை
இந்த உடல் எனும் மாயை
ஒன்றுவது எப்பொழுது ...
என்றும் ஒன்றோடு ஒன்று
பிரிக்க முடியாத ஒன்றை ...
அந்த ஒன்றை இதுவரை
யாரும் தங்கள் வாழ்க்கையோடு
ஒன்றி கூறி இருக்க கூடாது ...
அதை நம் வாழ்க்கையோடு
இணைத்து கூறு
என்றால்
என் செய்வாய்?
நெடுக்கையும்
கிடக்கையுமாய்
நாம் வாழ வேண்டும் .....
ஏன் எனில்
நெடுக்கை என்று ஒன்று
வந்தால்
கிடக்கை வந்தே தீரவேண்டும் .....
கிடக்கை என்று ஒன்று
வந்தால்
நெடுக்கை வந்தே தீரவேண்டும் .....
நம்மை போலவே .....
நீ என்று சொன்னால்
அதில் நான் .....
நான் என்று சொன்னால்
அதில் நீ .....
பொருள் சரிதானே!.....