சென்னை மழை
சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் பலருக்கு பலவிதமான பாடங்களை புகட்டி இருக்கிறது. இந்த வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதை ஒரு சாக்காக பயன்படுத்தி, மிகவும் கீழ்தரமாக செயல்பட்ட ஒரு சில அரசியல் வியாதிகளையும், ஃபோட்டோ பிரியர்களையும், வீடு புகுந்து திருடிச்சென்ற அயோக்யர்களையும் விமர்சிக்கவோ, திட்டவோ கூட தகுதியற்றவர்களாக கருதி, அது மட்டுமல்லாமல் அவர்களைப் பற்றி நினைப்பது கூட தாய் தமிழ் நாட்டிற்கு அவமானம் என்பதால் ஏனையோரை இந்த பதிவில் புறந்தள்ளுகிறேன்.
முதலாவதாக மனிதனும், மனிதமும் மட்டுமே வாழ்க்கை என்று சற்றே வலுவாக சொல்லித் தந்த மாபெரும் மழைக்கு சிரம் தாழ்த்தி வணக்கங்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருமழை தொடங்கிய நாள் முதலாய், பல இடங்களிலும் மக்களுக்கு சேவை புரிந்த தமிழக காவல் துறையினரையும், தன்னைப் பற்றி கவலை படாமல் பயணிகளை பாதுகாத்த பேருந்து ஓட்டுனர்களையும் மற்றும் நடத்துனர்களையும், பெருமையுடனும், பணிவுடனும் வணங்குகிறேன்.
எல்லா இடர்களிலும் பாரதம் எங்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும் இராணும், கப்பற்படை போன்ற அனைத்து சஹோதரர்களுக்கும் என் நன்றிகள்.
இதைத் தவிர்த்து மழையை விட அதிக அளவில் வெள்ளமாய் திரண்டு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அனைத்து மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்துணை காலம் இன்றைய இளைஞர்கள் ஸ்மார்ட் ஃபோனிலும், வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ் புக்கிலும் மட்டுமே காலத்தைக் கழிக்கிறார்கள். அவர்களுக்கு சமூக சிந்தனையோ, அக்கறையோ பெரிதாக இருப்பதில்லை என்று நினைத்த பலரில், நானும் ஒருவன் என்பதை மனவருத்தத்துடனும், மிகுந்த வெட்கத்துடனும் ஒப்புக் கொள்கிறேன். இந்த பேரிடரில் இளைஞர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அவர்களுக்கு இருக்கும் சமயோஜித புத்தியும், வெறும் வாய்ப் பேச்சு இல்லாமல் காரியத்தில் இருக்கும் முனைப்பும் வேகமும் என்னுள் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் பல மடங்கு உண்டாக்குகிறது. (பெரியவர்களுக்கான பின் குறிப்பு: ஃபோட்டோ பிரியர்களான இன்றைய இளைஞர்கள் நிவாரண பணியின் போது ஃபோட்டோவிற்கு ஃபோஸ் கொடுக்கும் தேவையற்ற செயலை செய்யவில்லை)
இந்த சமூகத்தில் அன்பும், பரிவும், மத ஒற்றுமையும் இன்னும் உயிரோட்டத்தோடுதான் இருக்கிறது. அயோத்தியில் டிசம்பர் 6ம் தேதி பலத்த பாதுகாப்பு போடப் பட்டது. ஆனால் சென்னையில் மட்டும் மதச்சண்டைக்கு நேரம் இல்லாமல் இந்துவும் இஸ்லாமியனும் இல்லாதவர்களை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
தமிழகத்தில் பெருமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பிறகுதான் மாணாக்கர்கள் பலவிதமான வாழ்க்கைப் பாடங்களைக் கற்றிருக்கிறார்கள் என்பதை ஒரு ஆசிரியனாக மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறேன். இயற்கையைப் பற்றி நாம் நடத்தும் பாடங்களை விட இயற்கை நமக்கு நடத்தும் பாடங்களில் வலிமை அதிகம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே.
இறுதியாக, வயதில் மட்டுமே மூத்தவர்களாக இருக்கும் ஒரு சில பெரியவர்களுக்கு என் செய்தி, இன்றை இளைஞர்களுக்கு அவசிய மற்றும் அவசரத் தேவை “வழிகாட்டுதல் மட்டுமே, அறிவுரை அல்ல”.
சில நாட்களாக எனக்கிருந்த மன ஓட்டத்தை வெளியேற்றும் வடிகால் தான் இந்த பதிவே அன்றி யாருடைய மனத்தையும் புண் படுத்தும் நோக்கம் கொண்டதல்ல.
நன்றி
அன்புடன்
வாசன்