போகாமலே புண்ணியம்

தினமும், ஒரு குறிப்பிட்ட குளத்தில் குளித்து விட்டு, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்ட பத்மநாப முனிவர் என்பவர், பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார்.

12 ஆண்டுகள் கடந்தன. ஒருநாள், பிரகாசமான ஒளி அவர் முன் தோன்றியது. அங்கே வெங்கடாஜலபதி காட்சியளித்தார்.

"பத்மநாபா! இந்த குளக்கரையில் தங்கியிருந்து தினமும் என்னை வழிபட்டு வா. உரிய காலத்தில் என்னை சேரும் பாக்கியம் பெறுவாய்,'' என்று வரம் அளித்து மறைந்தார்.

ஒருநாள், அவர் குளக்கரையில் நின்ற போது, மனிதர்களை பிடித்து தின்னும் ஒரு அரக்கன் அவரைத் துரத்தினான்.

"வெங்கடேசா! என்னைக் காப்பாற்று'' என்று கதறினார் முனிவர். பெருமாள் தன் சக்கரத்தை ஏவினார். அது அரக்கனின் தலையைப் பறித்தது.

சக்கரத்தின் மகிமையை அறிந்த முனிவர், "என் உயிர் காத்த சக்கரமே! இன்று முதல் இந்த குளத்தில் எழுந்தருளி, இதில் நீராடுவோரின் துன்பம் தீர்க்க வேண்டும்,'' என்று வேண்டினார்.

அதன்படியே, அந்த குளத்திற்கு சக்கர தீர்த்தம் என்று பெயர் வந்தது. திருப்பதி மலையில் இந்த தீர்த்தம் இருக்கிறது. பத்மனாப முனிவரின் வரலாற்றைப் படிப்போருக்கு, திருப்பதி போகாமலேயே சக்கர தீர்த்தத்தில் தீர்த்தமாடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (19-Dec-15, 8:42 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : pokaamale punniyam
பார்வை : 361

மேலே