சிந்தனைச் சிதறல்கள்20-12-15

ஒன்றிச் செயல்செய்! உனக்குள் மகிழ்ச்சியும்
நின்று நிலை8க்கும், நிசம்!

இயற்கையை மீறி எதுசெயினும் உந்தன்
செயற்கையால் கேடு,சே ரும்!

அறனும் ஒழுக்கும் அமையாத வாழ்வின்
திறனும் உயர்வும் எதற்கு?
-------
ஓ! புதுத்தமிழே!

மெல்ல மெல்ல உயர்ந்து
நிமிர்ந்து நிலைகுத்திய உனது பார்வை
அந்த ஒரு நொடியிலேயே கீழிறங்கி
மரபுக் கவிதைப் பொருளினைப்போல மறைந்தது
நிலைமாறி,
எப்பொழுது,நீ
இப்படி மாறிப்போனாய்...
கட்டுடலைக் காட்டும்
சிக்கென்ற உடைகளைப் போன்ற
வார்த்தைகளை அணிந்தும்,
கடைவிழியோரத்தில் அலைபாய்ந்து
வெட்டும் விழிகளைப்போன்ற
பார்வையைக் கொண்டவளுமான ஒரு
புதிய நடைக்காரியாக..?
=====
வெறுமையாய் ஆகும்
திறமையை அறிந்தால்
வேதனை அடைந்திட மாட்டாய்!
பொறுமையாய் வாழப்
புரிந்துமே கொண்டால்
பொங்கி,நீ அழிந்திட மாட்டாய்!
=====
நீடிய பொறுமை
கூடியே வந்தால்
தேடிட வேறோர் பொருளுண்டோ?
மூடிய கைகளைத்
தேடியே வரினும்
கூடிய நன்மைகள் இங்குண்டோ?
=====

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (20-Dec-15, 5:51 pm)
பார்வை : 197

மேலே