சாதீ

ஒன்றாக தான் மிதிவண்டியில்
இரண்டு மையில் கடந்து
மூவரும் பள்ளி சென்றோம்..
மூவரது மிதிவண்டியும்
என் நண்பர்கள் இருவரது
சொந்தக்காரரான ஒருவரது வீட்டில்
மிக நெருக்கமாக நிறுத்தி
பூட்டி விட்டு சென்றோம்..
ஒரு நாள் மாலை
பள்ளிவிட்டு வந்து மூவரும்
மிதிவண்டி எடுக்க முயலுகையில்..
'தம்பி, நீ இங்கயே நில்லு' என்று
அவர்களை மட்டும் வீட்டிற்குள்
அழைத்து சென்றார்
அந்த சொந்தக்காரர்..
சிறிது நிமிடங்கள் கழித்து
கையிலொரு பாத்திரத்தோடு வந்து
'உன் டிப்பன் பாக்ஸை திற' என்று
எதையோ ஊற்றி சென்றார்...
சுடச்சுட பாயாசமும்
இரண்டு வடையும் அதிலிருந்தன..
சட்டென்று
யாரோ பொடனையில்
அடித்தது போலிருந்தது..
அப்போதுதான்
ஆறாம் வகுப்பு படிக்கும்
என் மரமண்டைக்கு
'என்ன எளவு கண்றாவி டா இந்த சாதி'
என்று தோன்றியது.