டெங்குவும் நானும் மீள்பதிவு

.....................................................................................................................................................................
அதுவும் ஒரு ஆகஸ்டு மாதம். திருவண்ணாமலையில் குளிர் ஊட்டியை பீட் அடித்து அக்கினி க்ஷேத்திரத்தை ஐஸ் கட்டி க்ஷேத்திரமாக மாற்றி கொண்டிருந்தது. நான் அரசுத் துறையின் பெண் அதிகாரி. கணவரும் குழந்தைகளும் திருவண்ணாமலையில் இருக்க, நான் திருப்பூரில் வேறொரு துறையின் கீழ் அல்லாடிக் கொண்டிருந்தேன். அதனாலேயே ஆறு மாதங்களாக சம்பளம் வரவில்லை. திருவண்ணாமலைக்கு மாற்றல் கேட்டு விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் டைரக்டரிடமிருந்து போன் வந்தது. சம்பிரதாய விசாரித்தல்கள் முடிந்து தூத்துக்குடிக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு அலுவலராக போகச் சொன்னார்.

‘என்ன சார் நீங்க, ரியல் எஸ்டேட் புரோக்கர் மாதிரி பேசுறீங்க; திருவண்ணாமலைக்கு வெகு அருகாமையில் எப்ப தூத்துக்குடி வந்துச்சு?’ நான் மூக்கால் அழுததை பொருட்படுத்தாமல் ‘சரி, போங்க ஜெயசீலி’ என்று மொபைல் போனிலேயே கழுத்தைப் பிடித்து தள்ளியதில் நேரே தூத்துக்குடியில் போய் விழுந்தேன்.

உப்புக் காற்றும், தலைக்கு மேல் வட்டமிட்ட அரை டஜன் கிருஷ்ண கழுகுகளும், பிளாஸ்டிக் அடையாத புதர்களுமாய் தூத்துக்குடி. வெள்ளந்திப் பெண்டுகள்- “எம் மருமகப் புள்ளைக்கு ‘அல்சேசன்’ பண்ணித்தான் கொளந்தைய எடுத்தாவ. தாய்ப்பால் ஊறலம்மா”. அப்போது தென் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் கதகளி ஆடிய நேரம். குழந்தைகள் சாவு தமிழ்நாட்டையே உலுக்கி எடுக்க, பல அரசு அதிகாரிகளையும் விரக்தியின் விளிம்பில் தள்ளியது டெங்கு.

முதலில் நான் பார்த்தது தூத்துக்குடி கலெக்டர் திரு. விக்னேஷ் அவர்களை. அரை சென்டிமீட்டர் நீளப் புன்னகையை பிடிடின் போட்டு ஒட்டி வைத்த முகபாவம்.

கலெக்டர் என் கதை கேட்ட பிறகு “ நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் விரைவில் சேர பிரார்த்திக்கிறேன்”, என்றார். அது எனக்குள் ரசாயன மாற்றத்தை உண்டாக்கியது. அதற்கப்புறம் அவர் பேசிய வார்த்தைகள் முக்கியமல்ல. அந்த தோரணை- ‘வீட்டுல மூத்த பையன் பரவாயில்ல, கடைசிப் பையனுக்கு சகவாசம் சரியில்ல, பொண்ணுக்கு வரன் வருது, கைல காசில்ல ’ என்பது போல நெற்றி சுருங்க ரேசன் கார்டில் போட்டோவுடன் இருக்கப்பட்டவர்கள் பேசுவார்களே, அதே தோரணையில் தூத்துக்குடியின் சவால்களைச் சொன்னார்.

“சார், நான் இதற்கு முன் இது போன்ற சூழ்நிலைகளைக் கையாண்டிருக்கிறேன். இனி தூத்துக்குடி என் ஊர்”. என் ‘பலியாட்டுத் தனம்’ அவரைக் கவர்ந்திருக்கலாம். பிற்பாடு அவர் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது.

தூத்துக்குடியை கோடிட்டு பாகம் குறித்த பின் ப்ரசினையின் எண்பது சதமானம் வல்லநாட்டில்தான் என்று கண்டு கொண்டோம். ஒரு ஸ்பெஷல் டீமுடன் வல்லநாட்டின் மேல் படையெடுத்தோம். முதல் நாள் சில பல தடங்கல்கள். பிறகு நூல் பிடித்தாற் போல் வேலைகள் நடக்க, ஐந்து நாட்களில் வல்லநாடு வீழ்ந்தது. டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் பகலில் கடிக்கும். ஓரிருவரை வல்லநாட்டில் நிறுத்தி விட்டு பகலில் குழந்தைகள் அதிகம் புழங்கும் இடங்களான பள்ளிக்கூடங்கள் பக்கம் கவனத்தை திருப்பினேன்.

தெரியாத இடத்தில் புதிய மனிதர்களுடன் வேலை செய்வதில் சில ஆரம்ப சங்கடங்கள் உண்டு. ஒரு முறை திருநெல்வேலி மருத்துவமனையில் அட்மிட் ஆன ஒரு குழந்தையின் டெங்கு பரிசோதனை ரிப்போர்ட் தேவைப்பட்டது. நான் கல்லூரி முதல்வரை மொபைல் போனில் தொடர்பு கொண்டேன். “சார், நான் டாக்டர் ஜெயசீலி, புதிதாய் வந்த டெங்கு ஆபிசர். உங்கள் மருத்துவமனையில் அட்சயா என்ற ஏழு வயதுப் பெண் குழந்தை டிசம்பர் ஏழாம் தேதி அட்மிட் ஆகி ஒன்பதாம் தேதி டிஸ்சார்ஜானது. அதற்கு டெங்கு பரிசோதனை செய்தீர்களா, ரிசல்ட் என்ன என்று எங்கள் கலெக்டர் அறிய விரும்புகிறார்” என்றேன். ஒரு மணி நேரம் கழித்து டீன் அழைத்தார். “ ஸாரி மேடம், ஜெயசீலி என்ற பெயரில் இங்கு எந்த குழந்தையும் அட்மிட் ஆகவில்லை” . எளா மக்கா, ஜெயசீலி எம் பேருளா.

கொசுப்புழுக்கள் மலிந்த நீரை கீழே கொட்ட வேண்டியிருந்தது. “தண்ணிய தொட்டா கைய வெட்டுவோம்ல” என்றவர்களுக்கு விளக்கம் சொல்லி புரிய வைத்தோம். எங்களுடன் ஒரு பெண்மணி கூடவே வந்து எங்கள் பணியிலும் உதவியாக இருந்தார். நாங்கள் சொல்லி கேட்காத கூட்டம் அவர் சொன்னால் கேட்டது. சமீபத்தில் டெங்கு காய்ச்சலுக்கு தன் ஆறு வயதான ஒரே மகனை பறி கொடுத்த தாயாம் அவர். தன் நிலை இன்னொரு பெண்ணுக்கு வர வேண்டாம் என்று பாடுபடுகிறார்!

வாரக்கணக்காக, மாதக்கணக்காக ஏன் வருடக்கணக்காக கழுவாத தண்ணீர்த் தொட்டிகளை கழுவி ஊற்றச் செய்தோம். மீனவ மக்களின் கிணறுகளிலேயே மீன் வளர்க்கச் செய்தோம். மீன்கள் கொசுப்புழுக்களை சாப்பிடக் கூடியவை. ஆனால் குழம்பு கொதிக்கிற சமயம் மீனை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு இந்த மீனை சாப்பிட்டா டெங்கு வராதாமா என்று பிபியை எகிற வைத்தனர் மக்கள். கொசு மருந்து ஊற்றினோம். டயர்களை கடாசினோம்; உரல்களை கவிழ்த்துப் போட்டோம். புகை போட்டு கொசுக்களோடு நாங்களும் ஓடிப் போனோம். ‘சாக்கடை கொசுங்க அவிங்களுக்கு சம்பந்தி மொறை போல. எத்தனை புகார் பண்ணாலும் கண்டுக்க மாட்டேங்கிறாவ’ என்றபோது கண்டுக்கிட்டோம். இத்தனைக்கும் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் சாக்கடையில் இனப்பெருக்கம் செய்யாது. கொஞ்சம் நம்புங்க பாஸ்.

உபயோகப்படாத சின்டெக்ஸ் தொட்டியின் ஓரளவு நீரில் கணக்கற்ற கொசுப்புழுக்கள். அவை கொசுக்களாக மாறிய பின்னர் வெளியே பறந்து போக முடியாதபடி தொட்டியின் வாய்ப்ப்புறம் கனமான நூலாம்படை. ஆக கொசுக்கள் தொட்டியிலே உற்பத்தியாகி, தொட்டியிலேயே முட்டையிட்டு அங்கேயே மடிய வேண்டியதுதான். என்ன வேண்டுதலையோ, ஊருக்கு ஒரு சின்டெக்ஸ் தொட்டி இப்படி இருந்ததைப் பார்த்தேன். டெங்குவை தடுத்துப் போட்ட சிலந்திகள்!

ஓரிரு நாட்களில் எங்களுக்கும் பப்ளிக்குக்கும் அலாதிபட்ட அண்டஸ்டாண்டிங் வந்தது. ‘என்ன இம்புட்டு தாமசமா வாரீய, இப்பத்தேன் கருவாட்டுக் கொழம்ப காலி பண்ணோம்’ என்பார்கள். தனியாய் நின்றிருந்தால் தங்கள் ஆதங்கம் சொல்வார்கள். அப்படி ஒரு பெரியவர் சேவலைப் பற்றி சொன்ன சங்கதி இது.

‘‘இந்த சேவலுப்பயலுக கொக்ககோ கூவுறாவளே, அதுல எத்தனை வகையுண்டு தெரியுமா தாயி?’’

‘‘அதுல கூட வகையிருக்கா என்ன?’’

பெரியவர் சொல்லத் தொடங்கினார்.

“காலங்காத்தால சூரியனை வரவேற்கோனும். நெஞ்சு நிறைய காத்தை ரொப்பிகிட்டு ரக்கைய படபடன்னு அடிச்சிகிட்டு, உசரமான இடத்துல நின்னு எட்டூரு கேக்க கூவோனும். இல்லாட்டி விடியாதுல்லா? அடுத்து பெட்டைய கவர் பண்ண கூவுறது. ராகமா அதுக்கு மாத்திரம் கேக்கற மாதிரி கூவுக, கொக்கக கோஓஒ ன்னு. விருந்தாளியோ, நாயோ வந்துட்டா விரட்டிட்டு கூவுறது இன்னொரு வகை. கொக்க கொக்க..கொக கோ கோ. கூவிகிட்டே தரையிலேர்ந்து எழும்புங்க. சாயந்தரம் பெண்டு புள்ளைய கூடடைய வைக்கிறதுக்கு. ஒரு தெரு கேக்கற அளவு நீளக் கூவல், அப்பறம் மெல்..ல்..லிசா கொக்கரிப்பு, பெறகால நீளக் கூவல். கொக்..கொக்...கொக்க கோ. கொக்..கொக் கொககோ- இப்படி போகும். வீரமான பயலுவ. என்னைப் பொருத்த வரைக்கும் சேவலை வெட்றதும் ஒண்ணு, தலைப்புள்ளய வெட்றதும் ஒண்ணு”.

எனக்கும் சக பணியாளர்களுக்கும் இடையே ஒரு புரிதல் ஏற்பட்டது. கிட்ட வந்து பார்த்த பின், “மேடம், இது செந்தூரமா, நா நெத்திச் சுட்டின்னுல்ல நினைச்சேன்” என்று களுக்’ கென்று சிரித்தோடும் செவிலிகள். ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே”, மெட்டில் “ஸ்டாக் ரெஜிஸ்டர் காட்டுங்க பார்க்கலாம்-எந்தப் பக்கம்?”, என்று நிறுத்தினால், “இந்தப் பக்கம்” என்று பக்கங்களை புரட்டியபடி பி.பி.ஶ்ரீநிவாஸ் ஆகும் க்ளார்க். இன்னும்... “மேடத்துக்கு பிடிக்குமில்லா”, என்று டேபிளுக்கு வரும் காளான் உணவு; அறைப் பெண்மணியின் கைங்கரியத்தில் காலையில் எழுந்திருக்கும் போது கைகளில் பூத்திருக்கும் மெகந்தி, ஈரத் துணியில் மணக்கும் பவழ மல்லி...

தூத்துக்குடியும் கோவில்பட்டியும் ஒரே கலெக்டரின் கீழ் வருவதால் எனக்கும், கோவில்பட்டியில் என்னைப் போலவே பணியாற்றும் சக அதிகாரி டாக்டர் மனோகருக்கும் இடையே ஒரு ரெட்டை பிள்ளைத் தனம் இயல்பாக இருந்தது. சேர்ந்து பணியாற்ற மட்டுமல்ல, மனம் விட்டுப் பேச, சிரிக்க, ஒன்றாக உணவருந்த எனப் பல வகையில் அது உதவியது. “கோவில்பட்டியில அந்த வேலைய செஞ்சு முடிச்சுட்டாங்களாம்; நாம ஏன் இன்னும் செய்யல?” என்று தூத்துக்குடியை வேலை வாங்கும் அதே சமயம் அதே டெக்னிக் கோவில்பட்டியிலும் ஓடும். சில இடங்களை குறிப்பிட்டு “இங்கெல்லாம் கூழ் காய்ச்சி ஊத்தணுமே” என்பேன். கூழ் என்பது நில வேம்புக் குடிநீரின் செல்லப்பெயர்; வைரஸ் காய்ச்சலுக்கான மூலிகை மருத்துவம். அதெல்லாம் கோவில்பட்டி சார் ஏற்பாடு பண்ணிட்டாவ” என்பார்கள்.

காய்ச்சல் காம்ப் நடத்தினோம். எவ்வளவு செய்தாலும் மேலிடத்தில் திட்டு வாங்குவோம். போனில் கட்டளைகள் தூள் பறக்கும். நான் “எஸ் சார், எஸ் சார்” சொல்லிக்கொண்டே போவேன். இடையில் “என்னை என்ன முட்டாளென்று நினைத்தாயா” என்பார்கள். அதற்கும் “எஸ் சார்” சொல்லி வழிந்திருக்கிறேன்.

ஏரியா ஏரியாவாய் ‘லோ லோ’ என்று அலைவோம்.மாலை மயங்க மயங்க பணியாளர்கள் “போயாச்சா, போயாச்சா, போயாச்சா” என்பார்கள். நான் கிளம்பி விட்டேனா என்று விசாரிக்கிறார்களாம். பிறகு “எடுத்தாச்சா, எடுத்தாச்சா” என்பார்கள். ‘கார் எடுத்தாச்சா’ என்று அர்த்தம். அதற்கு மேல் அங்கிருந்தால் சமாதி கட்டும் சாத்தியக்கூறு உண்டென்பதால் உடனே கிளம்புவேன்.

வீட்டையும், குழந்தைகளையும் நினைத்தாலே கண்ணில் நீர் கட்டுவதும், மார்பில் பால் கட்டுவதும் இடம், பொருள் ஏவல் கடந்த அவஸ்தை. அப்போது என் மகளுக்கு நாலரை வயது. மகனுக்கு ஒன்றரை வயது. அம்மா அம்மா என்று மருகினர் குழந்தைகள். மாமியார் அவர் மாமியாரை பார்த்துக் கொள்ளும் பொருட்டு திருவாரூரில் முடங்க, குழந்தைகள் கணவரின் பராமரிப்பில். வீடு முழுக்க தூசி, ஒட்டடை, பிய்ந்த செருப்பு, கிழிந்த துணிகள். அழுக்குப் போகாமல் துணி துவைப்பது, சாம்பார் ரசம் கூட்டு எல்லாமே வெந்நீரை போல் ஒரே டேஸ்டில் (?) இருப்பது, நாற்றமெடுத்தால் குழந்தையின் டயாப்பரை செக் செய்யாமல் எலி செத்துக் கிடக்கிறதா என்று மூலை முடுக்கில் தேடுவது- இவை எல்லாம் தந்தைகுலத்துக்கு மட்டுமே தெரிந்த டெக்னிக்குகள். அவரும் பாவம். துறு துறு குழந்தைகள்! அவர் குளித்து முடித்து வருவதற்குள் பூஜையறை சாமான்களை சமையலறையிலும், சமையலறை சாமான்களை பூஜையறையிலும் அடுக்கி விடுவார்கள்- அதுவும் தலைகீழாக. அசந்த நேரம் கேட் சாவியை ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் பத்திரப்படுத்தியதால் சொந்த தகப்பன் சொந்த வீட்டுக்கு வர சுவரேறிக் குதிக்க வேண்டியதாயிற்று!

கூப்பிடு தூரத்தில் பெண் பணியாளர்கள் இருந்தாலும் என்னிடம் நெருங்கிப் பணியாற்றியது ஆண் அதிகாரிகள்தாம். என்னைப் பொருத்த வரை என் எதிரில் நிற்கும் ஆண் மக்களும் பர்தா அணிந்தவர்களே. அவசியம் நேரிட்டாலன்றி முகம் கை தவிர என் பார்வை வேறெங்கும் படியாது. இப்படியாக இவர்களுடன் பழகிப் பழகி என் கணவரை கணவராகப் பார்க்க மறந்தேன். அன்று புஷ்டியான நிலவொளியில் விழுப்புரம் ரயிலடியில் முத்துநகர் எக்ஸ்பிரசுக்கு காத்திருந்த போது கணவரின் உருண்ட தோள்களும், திரண்ட மார்பும் கண்ணில் பட்டன. நான் சட்டென்று கண்களைத் திருப்பிக்கொண்டேன். பிறகுதான் உறைத்தது, அவர் என் கணவர் என்பது.

மதியம் மூன்று மணிக்கு சாப்பிட போவோம். பத்து நிமிடம் ஹோட்டலில் பழி கிடப்போம். அப்போதெல்லாம் மேலிடத்திலிருந்து ஒரு துணுக்கு போன் கால் வராது. முதல் கவளம் சாதம் அள்ளி வாயில் வைத்தவுடன் போன் வரும், “மேடம், ரிப்போர்ட் அனுப்பியாச்சா?” வாயில் சாதத்தை குதப்பியபடி“ழெண்டு ழிபோத் ஹாஃப் ஆர் கைச்சி அப்புதோம்” அதாவது ரெண்டு ரிப்போர்ட் ஆஃப் அன் அவர் கழிச்சி அனுப்பறோம், என்பேன்.

சில சமயம் நானே ரிப்போர்ட் தயாரிப்பேன். டிரகான் நேச்சுரலி ஸ்பீக்கிங் சாப்ட்வேர் போட்டு டிக்டேட் செய்வேன். ‘குரூப் டிஸ்கஷன் அட் கலெக்டரேட்’ என்றால் ‘கோ டு ஹெல் அண்ட் கொலாபரேட்’ என்று தப்படிக்கும். ரிப்போர்ட் முடித்து பென் டிரைவில் சேமித்து தூங்கும் போது மணி அதிகாலை ஒன்றாகி இருக்கும்.

தூத்துக்குடியின் மையப்பகுதி வேறொரு சீனியர் அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கே நிலைமை திருப்திகரமாய் இல்லை. அதை எப்படி அவர் கவனத்துக்கு கொண்டு போவது என்று கையை பிசைந்து கொண்டிருந்தோம். டெங்கு காய்ச்சல் நெருப்பை போல. ஓரிடத்தில் மட்டும் நெருப்பு அணையாமல் இருப்பது ஆபத்துதானே. அது தவீர வேறு சில பிரசினைகளும்... எல்லாமே மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் மறைந்தன. காரணம், எங்கள் செயலாளரின் நேரடித் தலையீடு. பந்தா பார்க்காமல் பிரசினையின் ஆழத்தில் ஒரு சுறா மீனைப் போல பாய்ந்தார். "ஆகா, சார் செங்கோல் தூத்துக்குடி வரை நீளுதே" என்றேன் பரவசத்துடன். "விட்டா முள்ளி வாய்க்கால் வரை கூட நீளும்", என்றார் மனோகர். ‘மாதரார் தங்கள் மகனென்று பார்த்திருக்கும்’ தோற்றம், அப்படியே டாலடிக்கும் தோழமைத்தனம், கொட்டும் தண்ணீரைப் போல பேச்சு. சாப்பிடுவதெல்லாம் பேசுவதற்கே சரியாகி விடுமோ என்று கவலை கவலையாக வருகிறதா- அதுதான் எங்கள் செயலாளர்!

இப்படியாக என் மன மொழி மெய்யெல்லாம் டெங்கு டெங்கூ என்றாகி விட்ட நிலையில் பாங்க் மானேஜர் ரத்னதாஸ் போன் செய்தார். எனக்கு ஹோம் லோன் வாங்கிக் கொடுத்தவர். என் கணக்கில் பணமே வராததாலும், அசல் ஒரு பைசா கூட கட்டாததாலும் என் வங்கிக் கணக்கை முடக்கப் போவதாகச் சொன்னார். நான் நாலு பேர் முன் மேலாடை இழந்தது போல் உணர்ந்தேன்.

மானேஜர் மேலும் பேசினார். அவர் குரல் மிருதுவாக இருந்தது.

“மேடம், ஒரு நாலு இஎம்ஐக்கான பணம் கணக்குல இருக்கு. நான் ரெண்டு நாள் கழிச்சுதான் உங்க அக்கவுண்ட ஃப்ரீஸ் பண்ணுவேன். அதுக்குள்ள உங்களுக்கு வேண்டிய பணத்தை ட்ரா பண்ணிக்குங்க. ரெண்டு இஎம்ஐ, வேணாம், ஒரு இஎம்ஐக்கான பணத்தை விட்டு வச்சிருங்க. சரியா?”

“இவ்வளவு சலுகை கொடுக்கறீங்க, பின்ன ஏன் கணக்கை முடக்கணும்கிறீங்க?” என் குரல் ஆழ் குழாய் கிணற்றுக்குப் போய் விட்டது.

“கணக்கை முடக்கணும்ங்கிறது ரூல்ஸ். அதனால முடக்கறேன். நீங்க முடங்கக் கூடாதுங்கிறது மனிதாபிமானம். அதனால பேசறேன்.”.

‘வேணாம் சார், நீங்க இப்பவே முடக்கிடுங்க. என் வீட்டுக்காரர் அக்கவுண்ட் இருக்கு, நான் பார்த்துப்பேன்.’

"உங்க வீட்டுக்காரருக்கும் போன் பண்ணி சொல்லிட்டேம்மா".

நான் ஆச்சரியப்பட்டேன். அவர் தொடர்ந்தார்.

“நீங்க சொன்னதைத்தான் அவரும் சொன்னார். அதெப்படி ஒரே மாதிரி?”

எனக்குப் புரிந்தது. என் மூடை மாற்றும் முயற்சி இது. அதெப்படி இவரால் மொபைல் போன் வழியாகப் ‘பார்க்க’ முடிகிறது? நான் பேசும் நிலையில் இல்லை.

“எதுக்கும் ரெண்டு நாள் கழிச்சே அக்கவுண்ட ஃப்ரீஸ் பண்றேன். தாங்க்ஸ்மா”. அவர் போனை வைத்து விட்டார்.

அருமையான ராகம் போன்ற மனிதர்! சிறியவரோ பெரியவரோ ஒவ்வொருவர் மேலும் தனிப்பட்ட கவனம். விதிகளை மீறாதவர். லஞ்ச லாவண்யம் என்றால் வெறுப்பவர் அல்ல; அருவருப்பவர். ‘மேடம்’ என்பது ‘வாம்மா போம்மா’ என்றாகி விட்டதை கவனித்தேன். அழுது கொண்டே சிரித்தேன்.

அடுத்த இரண்டு நாட்கள் இயந்திரத் தனமாய் வேலை செய்தேன். நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பட்டது. கொசுக்கள் குறைவதையும், காய்ச்சல் மறைவதையும் நேருக்கு நேர் கண்டனர் மக்கள்.
டெங்கு வந்து மாண்டு போன குழந்தைகள் விவரம் ஊருக்கே தெரியும். பிழைத்த பிள்ளைகள் விவரம் எங்களுக்கு மாத்திரம் தெரியும். பல தரப்பட்ட மக்களின் ராப்பகல் உழைப்பு குழந்தைகளை விச்ராந்தியாக வீதியில் விளையாட வைத்தது. இருபது நாட்களில் ஒரே ஏரியாவிலிருந்து நான்கு குழந்தைகள்! அபாய நிலையில் அட்மிட் ஆகி உடல் தேறி தத்தம் தாய்மார்கள் அரவணைப்புக்குப் போனதில் என் பங்கும் உண்டு.

அன்றைக்கு ஆய்வுக்கூட்டம் முடித்து கிளம்பும் தருவாயில் கலெக்டர் அழைத்தார். “ஆர் யு ஆல்ரைட்?” என்றார்.

அவர் எதைப் பற்றி பேசுகிறார் என்று எனக்குப் புரியவில்லை.

“ஆல்ரைட்னா என்ன?” அவரிடமே கேட்டேன்.

கலெக்டர் சிரித்தார். “உங்கள் குடும்பத்தினர் நலமா?”

“ம்..”

"சம்பளம் வாங்கி விட்டீர்களா? "

"இல்...லை"

"எங்கே பென்டிங்? "

“திருப்பூரில்..”

“நீங்கள் ஏன் ஒரு முறை திருப்பூர் போய் வரக் கூடாது?”

நான் அதிர்ந்தேன், இன்ப அதிர்ச்சி! நன்றி சொல்வதற்குள் நாலாய் உடைந்து போனேன்.

அப்படி போய் கையெழுத்து போட்டு வந்ததில் பழைய சம்பளம் ஒன்று கிடைத்தது. முடக்கப்பட்ட பாங்க் கணக்கில் சேர்ந்தாலும் அதை எடுத்து செலவழிக்க முடிந்தது.

ஒரு மதிய நேரம். நானும் மனோகரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். குட்டி குட்டி கப்புகளில் பொரியல் ஐட்டங்கள். நான் சுண்டல் கப்பை எடுக்கப் போன சமயம் மனோகர் அவர் இடக்கையை குறுக்கே நீட்டி என் இடக்கையை தடுத்தார். ‘‘அது எதிர் சீட்டு ஆளோட வெஞ்சனம்’’ காதுக்கருகில் சொன்னார். நான் சிரித்தேன். அந்த ஆள் மொபைல் போனில் கலாசியபடி இருந்ததால் இதை கவனிக்கவில்லை.

மனோகர் என்னையே பார்த்தார். "நீங்க கஷ்டப்படுறீங்க, வெளியே காட்டிக்காம சிரிக்கிறீங்க".

செயலாளரைப் போய் பார்த்து மாற்றல் கேட்கச் சொன்னார். கேட்கலாம்தான். இங்கு துன்பப்படுவதும் என் குழந்தைகள் வயதுக் குழந்தைகள் இல்லையா? நான் பதில் சொல்லாமல் சாதத்தில் கோலம் போட்டேன். சூழ்நிலையின் கனம் அவருக்கும் தெரியும்.

“சரி, அப்ப உங்க ஊர்ப் பெரியவரை பாருங்களேன்?” கேட்டுக் கொண்டே என் தட்டுப் பொரியலை அவர் போட்டுக் கொண்டார்.

“அப்படி யாரு அங்க இருக்கா?”

அவர் சிரித்தார். “அங்கதான் இருக்கார். அடி முடி அறியவொண்ணா... அல்டிமேட் பெரியவர். அவரை ஒரு தரம் கிரி வலம் போய்ப் பாருங்க”

நான் அசூயையாய்ச் சிரித்தேன். நான் திருவண்ணாமலையில் இருப்பதே வாரத்துக்கு பன்னிரண்டு மணி நேரம்தான். காலை ஏழு மணி முதல் மாலை ஏழு வரை. இதில் கிரி வலம் எப்படி?

அன்றிரவு கிரி வலம் போவது போல் கனவு கண்டேன். காலையில் குளித்து முடித்து வெளியில் வந்த போது செய்தி வந்தது, “மேடம், உங்களை திருவண்ணாமலைக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாங்க”

எங்கள் அல்டிமேட் பெரியவர் எப்போதும் அல்டிமேட் பெரியவர்தான்!

அருணை ஜெயசீலி

எழுதியவர் : அருணை ஜெயசீலி (29-Dec-15, 7:41 pm)
பார்வை : 162

புதிய படைப்புகள்

மேலே