வலி
வலி
----------------
இரா.ச.மகேஸ்வரி
----------------
“எல்லாவற்றையும் கடந்து போகத்தானே வேண்டும்?” என்று செல்வி தன் மகள் மலரிடம் கூறினார்.
மலர் “இல்லை அம்மா, எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது.நீயும் என்னுடன் வர வேண்டும். இல்லாவிட்டால் நான் போகவே மாட்டேன்” என்று தன் தாயிடம் அடம் பிடித்தாள்.
செல்வி,” நான் வராமல் இருப்பேனா? கண்டிப்பாக வருகிறேன். உன் கணவர் உன்னுடன் கூட இருக்க சம்மதித்து விட்டாரா?”, என்றார்.
மலர்,”அவர் என்னை விட மிகவும் பயப்படுகிறார். ரத்தம் என்றால் அவருக்கு பயமாம் அம்மா. எதற்கும் மருத்துவரிடம் கேட்கலாம் என்கிறார்”, என்றார்.
செல்வி,” சரியாய் போச்சு போ. ஆண் மகன் பயப்படலாமா? நான் அவரிடம் பேசுகிறேன்” , என்றார்.
மலர்,”ரொம்ப வலிக்கும் இல்லையா?”, என்று பயத்துடன் கேட்டாள்.
“வலிக்காமல் எந்த காரியம் தான் நடக்கும். வலிக்கத்தான் செய்யும். பெண் பிள்ளைக்கு தைரியம் வேண்டாமா? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றால் எப்படிமா? அது அது அந்த அந்த வயதில் நடந்து விட்டால் தான் நல்லது. நாட்களை கடத்தினால் இன்னும் கோளாறு தான். எனக்கு நடக்க வில்லையா? என் அம்மாவிற்கு நடக்க வில்லையா? நீ வேண்டுமானால் பார்,உன் முகமே பிரகாசமாகிவிடும்.” என்று கூறி தொலைபேசியை அணைத்தார்.
தன் செல்ல மகள் செல்வியுடன் தான் இந்த வாக்குவாதம்.
கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. தம்பனீசில் கணவருடன் வசிக்கிறாள்.
“பாருங்க உங்க பெண்ணை !!! கல்யாணமான பெண் மாதிரியா பேசுகிறாள். இன்னும் சின்ன குழந்தை என்கிற நினைப்பு. அவளுக்கே இன்னும் சிறிது நாளில் குழந்தை பிறந்து விடும். இப்படி பயப்படுகிறாள்” என்று செல்வி தன் கணவரிடம் முறையிட்டார். அவர் குரலில் கொஞ்சம் பெருமிதமும் நிறைய பாசமும் இருந்தது.
அந்த நாளும் வந்தது.
செல்வி மகளையும் மருமகனையும் பார்த்தாள். கண்களில் கொஞ்சம் பயம் தெரிந்தது. உள்ளே செல்லும் முன் மலர் தன் அம்மாவின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். அங்கே இருந்த பெண்மணி,”நாங்க பார்த்துப்போம். தைரியமா வாங்க,” என்று மலரையும் அவள் கணவரையும் அழைத்துச் சென்றார். செல்வி வெளியிலேயே நின்றுக் கொண்டார். அதுவரை இருந்த தைரியம் மறைந்தது. மலர் வலியால் அலறுவது காதில் கேட்டது. தானாக கண்களில் நீர் வழிந்தது.
சிறிது நேரத்தில் மலரும், அவள் கணவரும் செரங்கூன் சாலையில் உள்ள “மூக்குத்தி கார்னர்” கடையில் இருந்து வெளியே வந்தார்கள். மலர் தன் அம்மாவைப் பார்த்து சிரித்தாள். மலர் முகத்தில் அப்பொழுது குத்திய மூக்குத்தியும் சேர்ந்து சிரிப்பது போல் செல்விக்கு தோன்றியது.
நன்றி ;திண்ணை