நீ போதுமடி
இருவிழி எய்திடும்
காதல் பாணம்
இதயத்தை கொல்லுதடி...
இரண்டற இதயம்
கிழிந்திடும் தருணம்
நின் பெயர்
சொல்லுதடி...!
விழியில் விழுந்த
உன் பிம்பம்
இதயத்தில் எழுந்தடி...
விழுந்திடும் கல்லடி
ஒவ்வொன்றும்
பூவாயானதடி...!
இதுவரை மீட்டிய
முராரியின்று
பைரவியானதடி...
உன் விழியின் ஒளியில் இன்றெனது
வாழ்க்கை துலங்குதடி...!
விழிகள் உதிர்த்த உவர்நீர் துடைத்து சோர்ந்தே போனேன்
நானன்று...!
பொருள் விளங்கா
கிறுக்கல் வாழ்வும்
அர்த்தம் கொண்டது...
உன்னாலின்று...!
இதயமறுக்கும் காயமினி
வந்தால் வரட்டும்
எனக்கென்ன?
இதுவரை சூழ்ந்த
உறவுகளெல்லாம்
விலகிச் சென்றால்
எனக்கென்ன?!
பூவினிதழாய்
உன் விரல்கள்
என் கை
கோர்த்திடும்
அத்தருணம்
தோல்விகளிங்கே
தெறித்தோடி
மண்ணில் சொர்க்கம்
காண்பேனே...! எனக்கே தெரியா
என் திறனை
அறிந்தேனின்று
உன் வரவால்...!
என்னுள் புதைந்த
ரசனையெல்லாம்
உயிர்ப்பெற்றெழுந்தன
உன் விழியால்...
இதுவரை சூழ்ந்த
காரிருளதுவும்
அகன்று சென்றது
உன் ஒளியால்...!
என்னை வதைத்த
ரணங்கள் யாவும்
மாயமானது
உன் சிரிப்பில்...!
பொருளறியா
வழிப்போக்கன் வாழ்வில்
மெய்ப்பொருளெனவே
வந்தவளே...!
கள்ளமிலா மெய்யன்பில்
பிணைத்து
ஆளும் நீயும்
என் தாயே!!!...
********************