உன்னத கலாச்சாரங்கள்-1

கலாச்சார புரட்சிக்கு வித்திட்ட ஃபிரெஞ்சு நாகரீகம்-2

நான்காயிரம் ஆண்டுகளாக மக்கள் விரும்பி வாழும் பாரிஸ் நகரம், இன்றும் உலகின் முக்கியமான காலை மற்றும் வணிக மையமாக விளங்குகிறது. உலகின் காலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொருளாதாரத்திக்கு பாரிஸின் தொண்டுகள் பொன் எழுத்துக்களால் பொரிக்கப்பட வேண்டியவை. வடக்கு பிரான்ஸ் நாட்டில் செயின் நதிக்கரையில் அமைந்துள்ள பாரிஸ், இரண்டு தீவுகளையும், சில குன்றுகளையும் உள்ளடக்கியது.
ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய மாநகரமான பாரிஸின் மக்கள் தொகை ஒரு கோடிக்கும் மேல்! பாரிஸ் நகர மக்கள் பாரிஸியன்கள் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். தட்பவெப்ப நிலை சீரானது. அதிக வெப்பம், அதிக குளிர் என்று ஒருபோதும் தவிப்பதில்லை.

எலிஸிஸ் சாலை :

“உலகின் மிக அழகான சாலை” எனப் பெயர் பெற்ற சாலை இது. பதினேழாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. கிரேக்கப் புராணங்களின் படி எலுசியா என்பது, வீரர்கள் இளைப்பாறும் இடமாகும். திரை அரங்குகள், கவிண்மீகு கடைகள், உணவகங்கள், அலங்கார அரண்மனைகள், இளைப்பாற பச்சை உடைப் பூங்காக்கள் என இந்தச் சாலை சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது. கொண்டாட்டங்கள், கேலிக்காக்கைகள் ஆகியவற்றில் அதிக விருப்பம் கொண்ட பாரிசியன்கள், புத்தாண்டையோ, கால்பந்தாட்ட வெற்றியையோ இந்தச் சாலையில்தான் கொண்டாடுகிறார்கள். இரண்டாம் உலகப் போர் வெற்றிக் கொண்டாட்டத்தைக் கண்ட சாலையும் இதுதான்.

வெற்றி வளைவு :

போர்கள் பல புரிந்து, வெற்றிகள் பல கண்டவன் மாவீரன் நெப்போலியன். என்றென்றும் பாரிஸ் நகர மக்களின் கதாநாயகனாக விளங்குபவன். ஆயிரத்து எண்ணூற்று ஆறாம் ஆண்டு, தான் கண்ட வெற்றிகளின் நினைவாக அவன் காட்டிய வளைவுதான் இது. நெப்போலியனின் ஆட்சிக் காலத்தில் அவன் அடைந்த வெற்றிகள் மற்றும் அவனது தளபதிகளாக இருந்தவர்களின் பெயர்கள் இதில் பொறிக்கப் பட்டிருக்கின்றன. பாரிஸ் ஒரு பூங்கா நகரமும் கூட, காதலர்களின் கோட்டையான பாரிசில் வயது வித்தியாசமில்லாமல் மக்கள் இந்தப் பூங்காக்களுக்கு அடிக்கடி வந்து இளைப்பாறவும், இயர்க்கையை ரசிக்கவும் தவறுவதில்லை.

லக்ஸம்பர்க் பூங்கா :

மிகப் பெரியதாக இரண்டு லட்சத்து இருபத்து நான்காயிரத்தி ஐநூறு சதுர மீட்டர் பரப்பளவில், ஆயிரத்து அறுநூற்று பன்னிரண்டாம் ஆண்டு இந்த பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவின் மத்தியில் வெட்டப்பட்டுள்ள குளத்தைச் சுற்றி புல்வெளிகளும், பாதைகளும் ஓடுகின்றன. பல சிலைகள் பூங்காவை அலங்கரிக்கின்றன. இரண்டு அழகான நீர்த்தாறைகள் பூங்காவிர்க்கு பெருமை சேர்க்கின்றன.

சௌமாண்ட் பூங்கா :

இது ஒரு குன்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நீர்வீழ்ச்சியில் முப்பத்திரண்டு அடி உயரத்திலிருந்து நீர் விழுந்து, வட்ட வடிவமான ஏரி ஒன்றைச் சென்றடைகிறது. புல்வெளிகளும், மரம், செடி, கொடிகளும் நிறைந்து, இயற்க்கை வரைந்ததோர் உன்னத ஓவியமாய் இந்த பூங்கா காட்சியளிக்கிறது.

கல்லறைக் காடுகள் :

பாரிஸ் ஆயிரக்கணக்கான வருட சரித்திரம் கொண்டது. அதனால் அங்கு புகழ்பெற்ற பலரின் கல்லறைகள் உள்ளன. அவைகளில் சுற்றுலாப் பயணியர் அதிகம் செல்லும் கல்லறை லச்சைஸ் கல்லறையாகும். நூற்று ஒன்பது ஏக்கர் பரப்பளவுள்ள இந்தக் கல்லறையில் பாரிஸின் புகழ் வாய்ந்த கலைஞர்கள், விஞ்ஞானிகள், பாடகர்கள், ஓவியர்கள் மற்றும் அறிஞர்கள் மீளாத்துயிலில் ஆழ்ந்துள்ளனர். இந்தக் கல்லறையில் அழகான கற்சிலைகளும் பல நிறுவப்பட்டுள்ளன. கலைகளையும், கலைஞர்களையும் ஆதரிக்கும் நகரமான பாரிசில் ஏராளமான திரை அரங்குகளும், பாடல் அரங்குகளும், நடன அரங்குகளும் உள்ளன. வாழ்க்கையை ரசிக்கும் பாரிஸியன்கள் விட விதமான உணவு வகைகளை உண்ண விரும்புவதால் ஏராளமான உணவு விடுதிகளும் இங்கு உண்டு. புகழ் மிக்க புராதனக் கட்டிடங்கள், தெய்வத்தன்மை மிக்க தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள், பச்சைப் பட்டாடை உடுத்திய பூங்காக்கள் என, தனக்குள் பல ரகசியங்களைப் புதைத்து வைத்துள்ள பாரிஸ், நகரத்தை ஃபிரெஞ்சு கலாச்சாரத்தின் ஒரு கண்ணாடி என்றே கூறலாம்.


நன்றி : காஸ்யபன்

எழுதியவர் : மு. குணசேகரன் (5-Jan-16, 10:15 am)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 1377

சிறந்த கட்டுரைகள்

மேலே