வெட்டிப் பேச்சு
காலை எழுந்ததும்
அவனவனுக்கு
ஆயிரம் வேலைகள்
ஆயிரம் யோசனைகள்
ஆயிரம் பிரச்சனைகள்
எதையோ தேடி
எங்கோ ஓடிக்கொண்டே...
சும்மா இருப்பதும்
ஒரு பிரச்சினை தான்
நேரம் நம் வசம்
நாளும் நம் வசம்
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
எல்லாமே நம் இஷ்டம்
இருந்தாலும் என்ன நஷ்டம்?
வாழத் தெரிய
வாழ்க்கை புரிய
வாழ்ந்து தான் பார்க்க வேண்டும்...
என்ன பண்ண வென்று
தெரியாத நொடிகளை
என்ன பண்ணுவது?
வினோதமான பிரச்சினை தான்...
நேரம் இல்லாமல்
திண்டாடும் பலர் இருக்க
நேரத்தைக் கையில் வைத்து
திணறுபவரும் இங்கிருக்க
நேரமும் ஒரு சொத்து தான்...
வீணாக பொழுதுகளோடு
விளையாட்டாய்க் கழிப்பது?
தேவை தான் சிலநேரம்...
எதுவுமே வீண் இல்லை
சிந்தனைகள் பல ஓட
வேலை செய்து சோர்ந்திருக்க
காசு பணம் தேடி இருக்க
கலை கல்வி பயின்றிருக்க
சும்மா பேசி இருப்பதால்?
லாபம் என்ன இதனால்
என்று பார்க்க ஆரம்பித்தால்
கணக்கே வாழ்க்கையாகிவிடும்...
அவரவருக்கு எது பிடிக்குமோ
அப்படி அப்படி அவர் குணம்
இதில் வீணாக்கிறார் பொழுதை என்று
வீணான விவாதம் எதற்கு?
பேசுவதும் ஊர் சுற்றுவதும் கூட
ஒரு விதத்தில் வேலை தான்
நன்றாக நாசுக்காக பேச வேண்டும்
உறவுகளை வளர்க்கக் வேண்டும்
விரோதங்களை ஒழிக்க வேண்டும்
எத்தனை பாடம் பேச்சினிலே
யாரும் எதுவும் வீண் இல்லை இங்கே...
கற்றுக் கொடுப்பதும் கற்றுக் கொள்வதும்
மட்டும் இல்லை தினப் பாடங்கள்
வெட்டிப் பேச்சிலும் விவாதங்களிலும்
கூட இருக்கும் குணாதிசயங்கள்...
எழுதுபவருக்கு பேசத் தெரியவில்லை
பேசத் தெரிபவருக்கு எழுத்து புரிவதில்லை
எத்தனை நிறங்கள் இந்த உலகத்தில்...
காணும் மக்களோடு சிரித்துப் பேசவே
லாபக் கணக்கு நோக்கினால்
என்ன செய்ய மனித இனம்?
உபயோகமானால் மட்டும் தான்
இங்கே ஒரு மரியாதை என்றால்
உயிர்களால் என்ன உபயோகம்
இந்த பூமிக்கு?
அத்தனையும் ஒரு விளையாட்டு தான்...
சோறூட்டும் உடம்பு கூட
ஒரு நாள் மண்ணாகும்...
கற்றுக் கொள்ளும் மனம் கூட
ஒரு நாள் காணாமல் போகும்...
வீணாய்ப் போகும் உயிர்களுக்கு
உபதேசம் கூட வீண் தானே?
வீண் என்று ஒன்றில்லை
வீழ்ந்து தான் போவோம் என்று தெரிந்தும்
வாழ்க்கையில் ஓடுவதும் குற்றமில்லை...
ஓடாமல் ஓய்வதும் தவறில்லை...
ஒவ்வொரு அசைவிலும் சக்தியின் அம்சம்
கண்டு விட்டால்
வைரமும் கால் தூசியும் ஒன்று தான்...
உழைப்பதும் வெறுமே இருப்பதும் ஒன்று தான்...