தாய் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த
தாய் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த குருசேவக்சிங்கின் கடைசி நிமிடங்கள்
-------
பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பஞ்சாப் மாநிலம் பதன் கோட்டில் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களில், ஹரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்த இளம் வீரர் குருசேவக்சிங்கும் ஒருவர். 'திருமணமாகி 45 நாட்களிலேயே தாய்நாட்டுக்காக தன் உயிரை அர்ப்பணித்த அந்த மாவீரனை பெற்றதற்காக பெருமிதம் கொள்கிறோம்' என நெகிழ்கின்றனர் குருசேவக்சிங்கின் பெற்றோர்.
ஹரியானா மாநிலம், அம்பாலா அருகே உள்ளது ஹர்நாலா கிராமம். இது பஞ்சாப் மாநில எல்லையையொட்டியது. இக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி சுசாசிங், தன் 2 மகன்களையும் நாட்டுக்காக ராணுவத்துக்கு அர்ப்பணித்துவிட்டார். சுசாசிங்கின் இளைய மகன் குருசேவக்சிங்தான் பதன்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர். இளம்வயதில் இருந்தே அறிவுக்கூர்மை படைத்த குருசேவக் சிங், விமானப்படையில் சேருவதற்கான தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர். குருசேவக்சிங் தமது வழிகாட்டியாக மாவீரன் பகத்சிங்கை ஏற்றுக் கொண்டவர்.
பெங்களூருவில் பொறியியல் படிப்பை முடித்து, கடந்த 6 ஆண்டுகளாக விமானப்படையில்கருடா கமாண்டோ பிரிவில் கார்ப்போரல் தரத்தில் சேவையாற்றி வந்தார் குருசேவக் சிங். அவருக்கு 45 நாட்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றது.
தன் மகனின் வீரமரணம் குறித்து கூறிய சுசாசிங், " என்னுடைய மகன் இந்த நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்திருக்கிறான். இதற்காக நான் பெருமிதப்படுகிறேன். இது அவனுடைய கடமை. எங்களுக்கு இது துயரமான சம்பவமும் கூட. என்னுடைய மூத்த மகனும் நாட்டுக்காக சேவையாற்ற ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். என்னுடைய மகன் தன்னுடைய வழிகாட்டியாக, முன்னோடியாக பகத்சிங்கைதான் பின்பற்றினார்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
குருசேவக்சிங்கின் மனைவியான 26 வயது ஜஸ்பிரீத் கவுர் கூறுகையில், "வெள்ளிக்கிழமை மாலை அவருக்கு நான் போன் செய்தேன். ஆனால் என்னுடைய போனை கட் செய்துவிட்டு பின்னர் அழைப்பதாக எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தார். அதன் பின்னர் நான் தூங்க சென்றுவிட்டேன். ஆனால் கடைசிவரை எனக்கு போனே செய்யாமல் அவர் உயிரிழந்துவிட்டார்" என கண்ணீர் மல்க கதறினார்.
மேலும், "குருசேவக்சிங்கின் வீர மரணத்தை அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்த போது அதை நம்ப முடியாமல், டெலிட் செய்யுமாறு முதலில் கூறியிருந்தேன். பின்னர் அவரது சகாக்களிடம் பேசியபோது அவர் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார்கள். ஆனால் காலைதான் இந்த துயரச் செய்தி எனக்கு வந்தது" என்கிறார் கதறல் அடங்காமல்.
திருமணமாகி 45 நாட்கள்தான் ஆகிறது என்பதால் திருமணத்தின் போது அணிவித்திருந்த வளையல்களைத்தான் இன்னமும் ஜஸ்பிரீத் அணிந்திருக்கிறார்.
பிப்ரவரி 5-ம் தேதி வரும் மனைவி ஜஸ்பிரீத்தின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, ஜனவரி 13 முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை விடுப்புக்கும் குருசேவக்சிங் விண்ணப்பித்திருந்திருக்கிறார் என்பதையும் குடும்பத்தினர் கண்ணீருடன் நினைவு கூறுகின்றனர்.
இதனிடையே நாட்டுக்காக தன்னுயிரை இழந்த குருசேவக்கின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.