கவி தாகம்
எப்பொழுது புலரும்
கற்பனை?!
எந்நொடி மலரும்
கவிமலர்?!
தேகம் சிதைத்திடும்
வலி மறந்து
ஆத்ம வேதனையில்
தனை கலந்து..
ஆம்பலவிழும்
நொடிக்காய் காத்துக்
கிடக்கும் பித்தனாய்
பருவ மங்கையின்
கொலுசொலியிலும்...
வாளை குமரியின்
சிணுங்கலிலும்...
புலப்படா
கவி முகவரி
தேடி தேயும்
என் நாட்கள்...!
கண் துயிலும்
இராப்பொழுதில்
கனவெனவே
தோன்றிடுமோ?!
மழைப் பொழியும்
மகரந்த நொடி
வானவில்லாய்
மறைந்திடுமோ?!...
நறு முகத்தாள்
குறுஞ்சிரிப்பில்
கண்ணாமூச்சியாடிடுமோ?!
கண் விழித்து
பார்க்கும் கணம்
கானல் நீராய்
ஓடிடுமோ?!...
நீரணை முக்கியெழும்
மரக்கிளையில்
குளித்திடுமோ?
நிதம் நிதம்
நிந்தனையெண்ணும்
நீசரிடை
உறங்கிடுமோ?!...
கதிரவன் தழுவலில்
கார்த்திகைப் பனியாய்
சிந்தையில் சில்லிட்டு
புணரும் நொடி
கரைந்திடுமோ?!...
ஞான விளக்கங்களில்
பிடிபடா
வேத வெளிச்சமது...!
எழுதுகோலின்
பசிக்கெனவே
இரையாகும் உணவது!...
யாரறிவார்?!
அந்த ஜாலக்கடல்
பொங்கிவிழும்
கோடி சிதறல்களில்
தெறிக்கும்
யுக தாகத்தை!!!
********************