தமிழால் ஒன்றானோம் மரபுக்கவிதை
எங்கோ பிறந்து தமிழால் ஒன்றானோம்.!
~~~~~~~~~£~~~~~~~~
பிறப்பிடம் வேறாய் எங்கோ
பிறந்திடும் அருமை நட்பே
திறனுடன் தமிழில் சொல்லும்
திறமைகள் மேலும் கூட்டி
பிறமொழிப் புலமை பெற்றும்
பிழையிலாத் தமிழில் பேசி
அறமுடன் வாழும் வாழ்வை
அழகுற மிளிரச் செய்வோம்
அள்ளியே பருகும் தேனாய்
ஆவலும் தமிழில் வேண்டும்
தெள்ளிய ஓடைப் போலே
தெளிந்தநற்ச் சிந்தை வேண்டும்
கள்ளமே இல்லா தன்மை
கனிந்திடும் தமிழில் வேண்டும்
உள்ளமே கவரும் வண்ணம்
ஊக்கமும் தமிழில் வேண்டும்
கொஞ்சிடும் தமிழில் பேச
கொஞ்சமும் தயக்கம் வேண்டாம்
அஞ்சியே பேசும் நாவில்
ஆற்றலும் வளர்க்க வேண்டும்
பிஞ்செனும் மழலை கற்கும்
பிழையிலா மொழியைக் காப்போம்
நஞ்செனும் மொழிக்க லப்பை
நசுக்கிட வேண்டும் இன்றே!
விஜயகுமார் வேல்முருகன்