14 ஆதாமின் அப்துல்லா பொள்ளாச்சி அபி

கைவேலையாய் இருந்த பாத்திமா வீட்டுக் கதவு தட்டப்பட்ட சப்தம் கேட்டு,சமையலறையை விட்டு வெளியே வந்தாள்.வாசலில் இளம்பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.முக்காடிட்டிருந்த கறுப்புவண்ணத் துணியால் முகத்தையும் பாதி மறைத்திருந்தாள்.குறுகுறுவென்று மின்னிக் கொண்டிருந்த கண்களைக் கொண்டிருந்த அவளது முகம் கறுப்புத்துணியையும் கடந்து எடுப்பாகத் தெரிந்தது.அவளைப்பார்த்தவுடனே பாத்திமாவிற்கு மிகவும் பிடித்துப் போயிற்று. என்னம்மா வேணும்..யாருன்னும் தெரியலையே..?

ஸலாம் அலைக்கும்.எம் பேரு மெகரூன்.நாங்க நேத்து ராத்திரிதான் எதிர்வீட்டிற்கு குடிவந்திருக்கோம்.கொஞ்சம் சாமானெல்லாம் மேலே அடுக்கணும்.உங்க வீட்டுலே ஏணி இல்லாட்டி நாற்காலி மாதிரி ஏதாவது இருந்தா வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்.

“ஓ..அப்படியா..?” என்றவாறு விசாலமான வீதியைக் கடந்து எதிர்வீட்டின் மீது பார்வையை ஓடவிட்ட பாத்திமாவின் கண்களில்,வந்திருப்பவளை விட ஓரிருவயது மூத்தவளாய் ஒரு பெண்ணும்,ஒரு ஆணும் நிற்பது தெரிந்தது.வாசலை ஒட்டி வெளியே ஒரு குதிரை பூட்டிய வண்டியும் நின்றிருந்தது.

“அது என்னோட அக்கா ஜுலேக்காவும்,மச்சான் ஷரீப்பும்.அது எங்க குதிரை வண்டிதான். மச்சான்தான் வாடகைக்கு ஓட்டிகிட்டு இருக்காரு.” மெகரூனின் பேச்சும் இனிமையாக இருந்தது.

“சரிம்மா இந்த நாற்காலிதான் இருக்கு.இது ஆகும்னா எடுத்துட்டுப் போ..எல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு மெதுவாக் கொண்டு வா..போதும்..பாத்திமா எடுத்துக் கொடுத்த நாற்காலியை வாங்கிக் கொண்டு சென்றாள் மெகரூன்.

மறுநாள் மதியம் நாற்காலியை திருப்பிக் கொடுக்க வந்த மெகரூன்,சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தாள்.தனக்கு நிக்கா முடிந்த சில நாட்களிலேயே நெஞ்சுவலியால் கணவன் இறந்துவிட்டதாகவும்,அதற்குப்பிறகு அக்காவுடனே வசிப்பதாகவும்,பாய் முடையும் வேலை தெரியுமாதலால்,அதற்கான தறி போடும் இடவசதியுடன் இருக்கும் இந்தவீட்டிற்கு தாங்கள் குடி வந்ததாகவும் தெரிவித்தாள். பாத்திமாவும் தனது குடும்ப விபரங்களை அவளிடம் பரிமாறிக் கொண்டாள். அவள் இருந்த நேரம் வரையும் குழந்தை அப்துல்லா அவள் மடியை விட்டு இறங்கவில்லை.அவளும் சளைக்காமல் அவனைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.நேரம் போனதே தெரியவில்லை.

‘‘மெகரூன்..” நீட்டி முழக்கும் ஜுலேக்காவின் குரல் கேட்டது.

“அக்கா கூப்பிடுறாங்க..நான் அப்புறமா வர்றேன்..” என்று சொல்லியபடியே அப்துல்லாவை கீழே இறக்கிவிட்டு அவனது கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்தபடியே வெளியே துள்ளிக் கொண்டு ஓடினாள்.

அதற்குப் பிறகுவந்த சிலநாட்களில் அவ்வப்போது வந்து கொண்டிருந்த மெகரூன், இப்போதெல்லாம் அவள் அக்காள் வந்து கூப்பிடும்வரை நேரம் போவது தெரியாமல் பாத்திமா வோடு பேசிக் கொண்டிருப்பதும், வீட்டுவேலைகளில் சிறுசிறு உதவிகள் செய்வதும், அப்துல்லாவை எடுத்து வைத்துக் கொஞ்சுவதுமாக நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள்.

அப்படித்தான் ஒருநாள், “சாயத்துலே முக்குன கோரையெல்லாம் காய்ஞ்சு ரெண்டு நாளாச்சு. பாய் முடையற வேலையைக் கூட செய்யாம இங்க வந்து என்னதாண்டி பண்ணுவே..?” ஜுலேக்கா வாசலில் வந்து கத்தும்வரை பாத்திமாவிற்கும் இது உரைக்கவில்லை. சொந்த வேலையை விட்டுவிட்டு, இங்கு வந்து நேரம் கழிக்கிறாள் எனில்,காரணம் இல்லாமலா இருக்கும்..?

பாத்திமாவிற்கு கடகடவென்று சில நினைவுகள் பின்னோக்கி ஓடியதில்.., 'இயல்பானது' என்று அவள் இதுவரை கருதியிருந்த சம்பவங்கள் எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கிறது என அவள் வெகு சுலபமாகக் கண்டுபிடித்துவிட்டாள். ஆம்..தனது அக்காள் கைருன்னிசாவின் மகன் சுக்கூர் மீது,மெகரூன் காதல் வசப்பட்டிருக்கிறாள்.

ஆனால்,சுக்கூரின் மனநிலை என்னவென்று தெரியவில்லையே.கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதைத் தவிர வேறு எதற்கும் வாயைத் திறக்கமாட்டானே.., பசித்தால்கூட,உணவை தான் விளம்பி வைக்கும் வரை அமைதியாக இருப்பானே தவிர,பசிக்கிறது என்று கேட்க மாட்டானே..,அவனும் காதலிக்கிறானா..? இதனை எப்படி அவனிடம் வெளிப்படையாகக் கேட்பது..?’ பாத்திமாவிற்குள் வரிசையாய்க் கேள்விகள் எழுந்தன.

மெகரூன் அழகானவள்தான்.சுக்கூருக்கு ஏற்ற நல்ல ஜோடி கூட., கூடமாட உதவுகிறேன் என்று சொல்லி,அவள் செய்து கொடுக்கும் சிறுசிறு வீட்டுவேலைகளும் வெகுசுத்தம். அவளின் கடந்த காலம் சுக்கூருக்கும் தெரியும்.அது தெரிந்தும் அவளை அவன் நிக்கா செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தான் எனில்,ஆகா..அந்த அபலைப் பெண்ணுக்கு அதைவிட வேறு ஏது நல்ல வாழ்க்கை..?’

அன்றைக்கு இரவு நாகூர்மீரானுக்கு உணவை விளம்பியபடியே, “சுக்கூருக்கு நிக்கா பண்ணி வெச்சுடலாம்னு நெனைக்கிறேன்..!” பொதுவாகப் பேச்சைத் துவங்கினாள் பாத்திமா.

பாத்திமா ஏதேனும் புதிய விஷயத்தைத் துவங்கினாள் எனில்,அதன் முடிவையும் அவள் ஏற்கனவே தீர்மானித்துவிட்டாள் என்றுதான் அர்த்தம் என்பது,நாகூர்மீரானின் அனுபவத்தில் புரிந்து வைத்திருந்தார். “ம்;..ம்..நீயென்ன முடிவு பண்ணிவச்சிருக்கே..?”

மெகரூனின் குடும்ப நிலை,அவளது நடவடிக்கை குறித்தும் சொல்லிய பாத்திமா, “சுக்கூருக்கு அந்தப் பொண்ணைத்தான் கேக்கலாம்னு இருக்கறேன்..”

அந்தக் குடும்பம் குறித்து அவ்வப்போது பாத்திமாவின் வாயிலாக அறிந்திருந்த நாகூர்மீரான், “அதுக்கென்ன.. தாராளமாக் கேளு..அவங்க சம்மதத்தை தெரிஞ்சுகிட்டு, அப்புறமா ஜமாத்துலே பேசி நிக்கா முடிவு செஞ்சுடலாம். அதுக்கு முன்னாடி சுக்கூரையும் ஒரு வார்த்தை கேட்டுரு.!”

பாத்திமாவின் எண்ணப்படியே எல்லாம் நடந்தது. சுக்கூரும், மெகரூனும் தம்பதிகளாகி விட்டனர்.

இரண்டு மாதமும் ஓடிவிட்டது.

நாகூர்மீரானின் பழக்கடையில் அன்றைக்கு காலையிலேயிருந்து பெரிதாக வியாபாரமும் இல்லை.ஏதோவொரு பழைய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த நாகூர் மீரான், “அஸ்ஸலாமு அலைக்கும்..! என்ற குரல்கேட்டு நிமிர்ந்தார்.

ஜுலேக்காவின் கணவன் ஷரீப்,நாகூர் மீரானின் பழக்கடை அருகில் வந்து தனது ஜட்கா வண்டியை நிறுத்தி இறங்கிக் கொண்டிருந்தான்.

பதில் முகமன் கூறியபடி அவனை வரவேற்றார் நாகூர் மீரான். “என்ன..அதிசயமாய் நம்ம கடைப்பக்கம்..? பழங்கள் எதாவது வேணுமா..?”

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் பாய்..சும்மா உங்களைப் பார்த்துட்டு,அப்படியே ஒரு விஷயம் பேசிட்டுப் போகலாம்னுதான் வந்தேன்..” ஷரீபின் தொனியில் பலமான ஒரு பீடிகை இருப்பதுபோலத் தோன்றியது நாகூர்மீரானுக்கு.

‘சுக்கூரின் நிக்கா பற்றிப் பேச்சு எடுத்ததிலிருந்து,நிக்கா முடியும் வரையும் தங்களிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசாத ஷரீப்,இன்றைக்கு தேடிவந்து தானாய்ப் பேசுவது என்றால்..ஏதாவது முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும்.எதுவும் சிக்கல் இல்லாமல் இருந்தால் சரி..’

“ம்..எதுவா இருந்தாலும் சொல்லுங்க பாய்..இன்ஷா அல்லா என்னாலே முடிஞ்ச உதவியைச் செய்றேன்..!”

“ஒண்ணுமில்லே பாய்..சுக்கூருக்கு நிக்கா முடிஞ்சதிலேருந்து பொண்ணும் மாப்பிள்ளையும் நம்ம வீட்டுலேயே இருக்கறாங்க.. நீங்களும் அழைச்சுக்கிற மாதிரித் தெரியலை. நிக்கா முடிஞ்சாச்சுன்னா,மாப்பிள்ளை வீட்டுலே பொண்ணு இருக்கறதுதானே மொறை..?”

‘திக்’கென்றானது நாகூர் மீரானுக்கு..,ஆமாம்..இது ஏன் நமக்குத் தோணவேயில்லை.நமக்கு சரி..பாத்திமாவும் ஏன் பேசாமலேயே இருந்துவிட்டாள்..?, தம்பதிகளை இப்போது வீட்டிற்கு அழைத்து வந்தால்,அவர்கள் எங்கே தங்க முடியும்..? அந்த வீட்டில் மொத்தமே இரண்டு அறைகள்தான்.

அதில் சிறியது சமையலறையாகவும்,சற்றே பெரியது அனைவருக்குமான படுக்கையறை யாகவும் உள்ளது. வாசலையொட்டியுள்ள,இட்லிக்கடையாக முன்னர் இருந்த திண்ணை போன்ற சிறிய திட்டு,வீட்டுக்குப் பின்னால் தகரத்தால் தடுக்கப்பட்ட குளியலறை, கழிப்பிடம்.. அவ்வளவுதான் அந்த வீட்டின் மொத்த இடவசதியும்.இப்போது இவர்களை அழைத்து வந்தால்.., நாங்கள் எங்கே தங்குவது..? உறங்குவது.? இதனால்தான் பாத்திமாவும் தம்பதிகளை அழைத்துக் கொள்ளவில்லையோ..? அப்படித்தான் இருக்கும்..மேலும் ஷரீப்பின் வீடு சற்றே பெரியது. மெகரூன் கோரைப்பாய் முடைந்து கொண்டிருந்த அறையே தம்பதிகள் தங்குவதற்கு போதுமானது.இடையூறு இல்லாதது..அதனால் அப்படியே இருக்கட்டும் என்று விட்டிருப்பாளோ..? ஆனால்..ஷரீப் இப்போது கேட்பதற்கு என்ன பதில் சொல்வது..? எப்படி சமாளிப்பது..?’

“என்ன பாய்..நான் கேட்டதற்கு பதிலே காணோம்..?” சிந்தனைகள் தந்த நெருக்கடிகளுக்கு விடை தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த நாகூர்மீரானை,ஷரீப்பின் குரல் உசுப்பியது.

“அது வந்து..,சரி பாய்..இன்னைக்கு நம்ம பீவிகிட்ட பேசிட்டு,ஒரு முடிவு பண்ணிடலாம்..” இதனை சொல்வதற்குள் நாகூர்மீரானுக்கு லேசாக மூச்சிறைப்பது போலிருந்தது.

ஷரீப் கிளம்பினான்.சில ஆப்பிள்களையும்,ஆரஞ்சுகளையும் ஒரு வலைப் பையில் போட்டு அவனிடம் நீட்ட,இப்போது மறுப்பு எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டுபோனான்.

--------- தொடரும்

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (11-Jan-16, 8:49 pm)
பார்வை : 141

மேலே