வாழ்வியற் குறட்டாழிசை 18 செயல் உறுதி

வாழ்வியற் குறட்டாழிசை. 18
செயல் உறுதி
ஊஞ்சலாடும் மனமும், உடைந்த மனமும்
உறுதியான செயலை உருவாக்காது.
மன உறுதியும், மனத் துணிவுமே
செயலின் உறுதிக்கு உரம்.
கட்டிடத்திற்கு அத்திவாரம் போன்று நல்ல
திட்டமிடல் செயலை உறுதியாக்கும்
இடம், பொருள், ஏவல், காலம்
அறிந்த செயலே உறுதியாகும்.
உடலுறுதியால் மனவுறுதி, செயலுறுதிக்கு
இயல்பாகக் கடத்தப் படுகிறது.
முயல் போன்று வேகம் இல்லாவிடிலும்
செயலுறுதி சாதனைக்கு உயர்த்தும்.
தன்னம்பிக்கை கொண்ட செயலுறுதியின் ஆதாரத்திற்கு
நம்பிக்கை ஏணி துணை.
நேர்மை ஒரு கர்ம சிரத்தையான
செயலிற்கு உறுதி தரும்.
நேர்மையற்ற செயலைச் செய்யும் போது
கூர்மையான மனவுறுதி வழுகிடும்.
கூட்டுறவும் ஒருவிதமாக வீரிய செயலுறுதிக்குக்
காட்டுகிறது தன் பங்கை.
சொல் வேறு செயல் வேறென்றால்
செயல் உறுதி குறையும்.
சொற் பந்தலுரம் போன்று உறுதியான
செயற் பந்தலும் தேவை.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ் டென்மார்க்.
7-11-2011.