எட்டி மிதித்திடடி

என்ன குற்றம் செய்தேனென்றும் புரியல
ஏன் இந்த நிலையென்றும் தெரியல
நல்லாத்தான் படிச்சேன் அந்த பள்ளியில - காரணம்
சொல்லாமலே சேர்த்துட்டாங்க வேற பள்ளியில
பழகிய நண்பனெல்லாம் என் தெருவுல
பயந்து ஓடுறான் காரணம் விளங்கல

பல பேரு பரிதாபமாய் பார்க்கிறாங்க
சில பேரு ச்சீயென்று தூற்றுறாங்க
அப்பாவ தப்பானவன் என்று திட்டுறாங்க
அப்பாவி இவன் அம்மா என்றும் சொல்றாங்க

தப்பென்ன செய்ததிந்த புள்ள - அப்பன்
தப்பால வந்ததிந்த தொல்ல
பத்தினியாய் இவன் அம்மா வீட்டிலதான் இருக்க
பரத்தையத்தான் தேடி போனான்
பாழாய் போன கிறுக்கன்
பரத்தையிடம் பணம் கொடுத்து
படுக்கை சுகம் தேடித்தான்
பரலோகம் பறந்திடவே
பயண சீட்டும் வாங்கிட்டான்

பயணத்தில் கூட வர
பாவிமகளையும் சேர்த்துகிட்டான்
இலவச இணைப்பாக
இந்த பையனையும் இணைச்சிகிட்டான்

என்னென்னமோ சொல்றாங்கமா
எனக்கொண்ணும் புரியல
ஏன் இப்படி ஏசுராங்கன்னு
எள்ளளவும் விளங்கல
கால் பிடிச்சி கேட்குறேன்
காரணத்தை சொல்லிடம்மா

பதிலேதும் சொல்ல இயலா
பாதகத்தி ஆனேனடா
அப்பன் சண்ணம் வழியா
அண்டத்திலே உனை விதைக்கும் போதே
ஆயுள் ரேகையை அழிசிட்டோமடா
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புறநானூறு காலம் தொட்டு
புடிச்ச சாபமிது
திருக்குறள் படிச்சாலும்
திருந்தாத வம்சமிது
மாற்றாளுடன் மஞ்சத்தில்
மையல் கொண்ட மணவாளனையும்
மனமிரங்கி மன்னித்தாள்
மானமுள்ள தமிழச்சி
மாதவியுடன் மகிந்திருந்த
கோவலனையும் மன்னித்து
மறுவாழ்வு கொடுத்திட்டாள்
கண்ணகியென்ற பெண்ணொருத்தி

அடி தமிழச்சி.....
இது போன்ற கொடுமைக்கு
முற்றுபுள்ளி வைத்திடடி
இனியொருவன் தவறு செய்தால்
எட்டி மிதித்திடடி......

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (24-Jan-16, 11:55 pm)
பார்வை : 121

மேலே