திரெளபதிஅம்மன் துதி

விளந்தையிலே வீற்றிருக்கும் திரெளபதியே தாயே!
-----வேண்டுவோர்கள் குறைதீர்த்து அருள்தருவாய் நீயே!
அளவில்லாத அருள்கொடுத்து அன்புசெய்யும் அம்மா!
-----அன்னைசெய்யும் அன்பும்கூட உன்முன்னே சும்மா!
காட்சிதந்து எங்களூரைக் காத்துநிற்பாய் நாளும்
-------கருணையினால் உன்பெருமை உலகமெலாம் நீளும்
ஆட்சிசெய்து அனைவருக்கும் அருள்கொடுக்க வேண்டும்
-------அகிலமெலாம் உன்புகழை என்றும்போற்ற வேண்டும்

தேடிவந்து துதிப்பவர்கள் துயரனைத்தும் துடைப்பாய்!
------தேவையறிந்து வணங்கிடுவோர் வேண்டியதைக் கொடுப்பாய்!
ஓடிவந்து உதவும்தெய்வம் உனைப்போல் யாருண்டு?
------ஒறுத்திடுவாய் பிழைகளையே எனும்பேர் உனக்குண்டு
எம்மைநீயும் ஏறெடுத்துப் பார்த்திடாத போதும்
------எங்களுள்ளம் உன்பெயரை தினந்தோறும் ஓதும்
உம்மைவிட்டால் ஊர்காக்கும் தெய்வமிங்கு இல்லை
-------ஊர்மக்கள் உயர்ந்திடஉன் அன்பொன்றே எல்லை

நெற்றிகொண்ட குங்குமத்தை நிலைநிறுத்த வேண்டும்!
-------நெஞ்சிலுள்ள வஞ்சகத்தை நீக்கிடுவாய் யாண்டும்!
சுற்றிவந்து வணங்குவோரின் துன்பங்களைக் களைந்து
- ------சுகவாழ்வை அள்ளித்தந்து வளமளிப்பாய் கனிந்து
மஞ்சளோடு மலர்களோடு மங்கையர்கள் வாழ்வில்
--------மங்கலமாய் வாழ்ந்திருக்க வரமளிக்க வேண்டும்!
நெஞ்சினிலே உந்தன்நாமம் உச்சரிக்கும் மக்கள்
--------நிலைஉயர்த்தி நலம்தந்து குலம்காப்பாய் தாயே!

பாவலர்
சொ. பாஸ்கரன்

எழுதியவர் : சொ.பாஸ்கரன் (25-Jan-16, 9:58 pm)
பார்வை : 68

மேலே