நிலவு பெண்பாலா ஆண்பாலா
நிலவைப் பற்றிப் பாடாத கவிஞனும், நிலவைத் தன் காதலிக்கு ஒப்பிடாத காதலனும் இல்லை. இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. 'இராமு' என்ற திரைப்படத்தில் P.B.ஸ்ரீனிவாஸ்,
'நிலவே என்னிடம் நெருங்காதே!
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை!' என்றும்,
'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற திரைப்படத்தில் 'T.M.சௌந்தரராசன்,
'என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே!
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே!' என்றும்,
பலப்பல விதமாகப் பாடியிருக்கிறார்கள். நிலவை நிலா என்றும் சந்திரன் என்றும் சொல்வதுண்டு. நிலா என்றால் பெண்பால் என்றும் சந்திரன் என்றால் ஆண்பால் என்றும் சொல்வதுண்டு. நேற்று நான் தொலைக்காட்சியில் பாடல் காட்சிகள் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எம்.ஜி.ஆர் - மஞ்சுளா நடித்த உலகம் சுற்றும் வாலிபன் (1960) என்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதி, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து, டி.எம்.சௌந்தரராஜன் பாடிய ’நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ’ என்ற ஒரு அருமையான பாடலை நான் கேட்டேன்.
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ
புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையைத் தான் குழைத்து
கொடுத்ததெல்லாம் இவள் தானோ
பவளமென விரல் நகமும்
பசும் தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இரு புறமும்
தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீள்கழுதது அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ
செந்தழலின் ஒளி எடுத்து
சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன்பதத்தில் வார்த்துவைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன் (நிலவு)
இப்பாடலில்,
’நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ’
என்று நிலவைப் பெண்பாலாகப் பாவித்து காதலன் காதலியை வர்ணிக்கிறார். பாடலை யு ட்யூபில் பார்த்தும், கேட்டும் ரசிக்கலாம்.
அடுத்து, ஜெயசங்கர் - ஜெயலலிதா நடித்த முத்துசிப்பி (1968) என்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதி, எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்து, டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா பாடிய ’ஒரு நாள் பழகிய பழக்கமல்ல’ என்ற இன்னொரு அருமையான பாடலை நான் கேட்டேன்.
ஒரு நாள் பழகிய பழக்கமல்ல
மறு நாள் மறப்பது என் வழக்கமல்ல
நீயென்றும் நானென்றும் இருவரல்ல
நிழல்தான் உடலை பிரிவதல்ல (ஒரு நாள்)
கல்லில் எழுதிய எழுத்தாக
காலத்தை வென்று நிலையாக
கண்களில் உன்னை எழுதி வைத்தேன்
என் குலவிளக்காக ஏற்றி வைத்தேன்
குழந்தை என்றிருந்தேன் தாய் மடியில்
குமரி என்றிருந்தேன் எழில் வடிவில்
மனைவி என்றானேன் உன் மடியில்
கலந்து விட்டேன் உன் உயிர் வடிவில் (ஒரு நாள்)
இளமையில் தொடங்கிய காதலிது காதலிது
முதுமை வந்தாலும் மாறாதது
ஊரென்ன உறவென்ன பேசுவது
யாருக்கு பயந்து வாழுவது
வானத்தில் இருந்தாய் நிலவாக
பூமியில் கிடந்தேன் மலராக
ஓடி வந்தாய் என் துணையாக
ஒருவர்க்கு ஒருவர் இணையாக (ஒரு நாள்)
இப்பாடலில் கணவனைப் பார்த்து,
’வானத்தில் இருந்தாய் நிலவாக
பூமியில் கிடந்தேன் மலராக
ஓடி வந்தாய் என் துணையாக’
என்று மனைவி பாடுகிறார். இங்கு நிலவு ’ஆண்பால்’ ஆகிவிட்டது.
இப்பாடலையும் யு ட்யூபில் பார்த்தும், கேட்டும் ரசிக்கலாம்.