சூரியன்

சூரியனே
நீ இருக்கும் வரைதான்
என் நிழல்கூட என்னோடு
ஒட்டிக்கொண்டிருக்கின்றது
ஒளியற்ற மனிதனோடு
நிழலும் துணையிருப்பதில்லை
பாமரர்கள் பருப்புக் குழம்பைச்
செய்துகொண்டிருக்க
பகலவன் மட்டும்
நெருப்புக் குழம்பைச் செய்துகொண்டிருந்தான்
சமூக அவலம் கண்டு
சூரியன் தூ எனத் துப்பி எறிந்த சொல்
மண்ணில் விழுகின்றது எரி கல்
நீ மரப் பிள்ளைகளுக்கு
ஒளியால் உணவூட்டும் தாய்
நீ இரவையும் பகலையும்
மாறி மாறி தந்துகொண்டிருப்பது
இன்பமும் துன்பமும்
மாறிமாறி வருவதே வாழ்க்கை
எனத் தத்துவம் சொல்லவோ
மக்களெல்லாம் அண்ணார்ந்து பார்க்க
நீ மட்டும் அண்ணாவைப் பார்த்தாய்
அவரை அரியணையில் சேர்த்தாய்
நீ கர்ணனுக்குத் தந்தை என்பதை
ஏப்ரல் மேவில் தான் காட்டுகின்றாய்
கல்யாணம் முடிந்த பிறகு
அழகான பெண்களைப் பார்த்து ஏங்குவது
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்
சூரியனே நீ
வெளிச்சத்தையும் தருகின்றாய்
வைட்டமின் டி
என்னும் உடலுக்கு
வெளி சத்தையுமல்லவா தருகின்றாய்
உனக்கு தாகமெடுக்கும் போதெல்லாம்
கடலில் நீர் குறைகின்றது கானலாய்
எங்கள் உடலில் நீர் நிறைகின்றது
கனலாய்
மலைகளுக்கு நடுவே உயர்கின்றாய்
மாலையின் நடுவே அயர்கின்றாய்
பொங்கல் நேரத்தில் போற்றுகின்ற
வாயெல்லாம்
புழுங்கல் நேரத்தில் தூற்றுகின்றன
ஆயிரம் கைகள் மறைத்தும்
நீ மறைவதில்லை
ஆயிரம் ஆண்டு மறைந்தும்
அது மனிதனுக்குப் புரிவதில்லை
உன்னை நம்பி
எங்கள் பயிர் மட்டும் அல்ல
எங்கள் உயிரும்தான்