மத்தியானம் ஒரு மணி

“Shall we go for lunch?”

வெளியே திரண்டிருந்த கருமேகங்களை ரசித்து, காதலின் நினைவுகளோடு கைகோர்த்துகொண்டிருந்த என் நினைவுகள் சட்டென்று சிதறியது ..

பின்னால் நின்று கொண்டு பசியுடன் கேட்டாள் உடன் பணிபுரியும் தோழி ...

“Ok, please wait for few seconds”

நிகழ்கால நினைவுக்குள் வந்தவனாய் , மதிய உணவை எடுக்க ஆயத்தமானேன்

மத்தியானம் ஒரு மணி.

.. என்னதான் பணிச்சுமை இருந்தாலும் , நினைவுகள் பல கடந்தாலும் , இந்த ஒரு மணி நினைவு மட்டும் நெஞ்சை விட்டு நீங்கவே இல்லை ..

நினைக்க நினைக்க , ஒரு விதமான மனச்சுமையுடனே திரும்புகிறது அந்த நினைவு..

எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த பொழுது , ஊரில் ஒரு கல்யாணம் ..

விளையாட்டும் , வெள்ளந்தி பேச்சுமாய் போய்க்கொண்டிருந்த பகல் வேலை வகுப்பறையில் , திடீரென்று நினைவு வந்தவனாய் செல்வம் சொன்னான் , "இன்னைக்கு மதியானாம் கல்யாண வீட்டுல சாப்பிட சொல்லி இருக்குடா எங்க அம்மா "

காலையிலேயே அம்மா சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது .."நடவுக்கு போறேன் , தங்கசிகள பாத்து பத்திரமா பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டு போ . மதிய சாப்பாட்டுக்கு கல்யாண வீட்டுக்கு போயிரு ..நேத்தே ராத்திரி விருந்துல மொய் எழுதியாச்சு ..""

அப்பாடா, இன்னைக்கு ஒரு நாள் சத்துணவுல இருந்து தப்பிக்கலாம்,நினைத்து கொண்டு இருக்கும் போதே ..



"டின் டின் டின் டின் டின் "



ஒரு மணி பெல் அடிச்சிருச்சு . உடனே சுறுசுறுப்பா கெளம்பியாச்சு ..நான் , சரவணன் செல்வம் .எங்க போனாலும் இந்த மூணு பேரும் தான் ஒன்னா போவோம்..லீவுல நொங்கு வெட்ட போனாலும் சரி ..வீட்டுல பொய் சொல்லிட்டு மஞ்சுவிரட்டுக்கு , நைட் ஸ்டடிய கட்டடிச்சுட்டு பக்கத்துக்கு ஊரு கச்சேரி , இப்புடி எங்க போனாலும் ஆறு காலும் ஒன்னதான் ஓடும் . .."சீக்கிரம் வந்துரனும்டா..மதியம் செல்வி டீச்சர் டெஸ்ட் வச்சுருக்கு " சொல்லிக்கொண்டே மூச்சு வாங்க ஓடினோம் ஊர் நோக்கி.. இன்னும் கொஞ்ச தூரம் தான் , கண்மாய தாண்டுனா ஊர் வந்துரும் ..



ஊருக்குள்ள ஒரே கல்யாண கோலம் ..இளையராஜா பாட்டு பள்ளிக்கூடம் வரைக்குமே கேக்குது ..கம்மா கரைய தாண்டும் போதே கறிக்குழம்பு வாசன வந்துருச்சு .

"மணமகளே மணமகளே வா வா ..உன் வலது காலை எடுத்து வைத்து வா வா " மணமக்களின் வரவை ஊருக்கு உரக்க சொல்லிகொண்டிருந்தது ஒலிபெருக்கி ..

அடி பம்பில் கை கழுவிக்கொண்டிருந்த நான் நிமிர்த்து பார்த்தேன் .." பொண்ணு , மாப்பிள்ளை வந்துட்டாங்க போலடா, சீக்கிரம் போலாம்டா " சரவணன் அவசரபடுத்தினான்...பாதி கழுவியும் கழுவாமையும் பந்தி நோக்கி விரைந்தோம் ..

" சினிமா நடிகை மாதிரில்ல இருக்குது பொண்ணு ..வடிவேல் புடிச்சாலும் ரதி மாதிரி பொண்ணதான் தேடி புடிச்சுருக்கான்" ஊருக்கே கேக்கும்படியா சொல்லிக்கிட்டு போகுது பொண்ணையும் மாப்பிள்ளையையும் பாத்துட்டு போற கிழவி...

"வடிவேல் - செண்பகவல்லி " கலர் காகிதங்களால் அழகாய் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது மணமக்களின் பெயர்கள் ..

வடிவேல் அண்ணன் நல்லா மாடுபிடிக்கும் ..எப்பேர்பட்ட காளையா இருந்தாலும் அடக்கி விடும்..அதனாலே சின்ன வயசு முதல் வடிவேல் அண்ணன் மேல ஒரு தனி ஈர்ப்பு ..

எப்பவும் அண்ணன் சுத்தி ஒரு கூட்டம் இருக்கும் ..மாடுபிடி வீரர்களுக்கு தெற்கு சீமையில் இருக்கும் மரியாதையே தனி தான்.

எங்களது கவனம் முழுவதும் பந்தி மேலேயே இருந்ததானால் பெரிசா கண்டுக்கல .. பந்தி முழுக்க ஒரே கூட்டம் ..

"இப்போதான் மொத பந்தி ஆரம்பிக்கிறாங்க போலடா " செல்வம் குரலில் ஒரு ஏமாற்றம் நிறைந்தது ..

"இருடா, அடுத்த பந்தியில சாப்பிட்டுக்கலாம்" சொல்லியபடியே அடுத்த பந்தியில் இடம் பிடிக்க தயாரானோம் ..மொத பந்தி முடிச்சு அடுத்த பந்தியில இடம் புடிச்சு உக்காந்த போது தான் அது நடந்தது..

"இந்தா! பள்ளிகூடத்து பசங்கல்லாம் அடுத்த பந்தில உக்காருங்கடா, பொண்ணு தாய்மாமன் வைகையராவுக்கு உக்கார இடம் இல்லையாம் " மிரட்டும் தொனியில் சொன்னான் பந்தி வைப்பவன் ..

என்ன சொல்றதுன்னே தெரியாம இன்னும் உக்காந்துகிட்டே இருந்தோம் .

இலை வேற போட்டாச்சு .. எங்கள் ஆறு கண்களும் யாராச்சும் நமக்காக பேச மாட்டாங்களான்னு சுத்தி முத்தி பாத்துகிட்டு இருக்கும் போதே " தம்பிகளா, உங்களைத்தான் சொல்றேன் " தூக்கி விடாத குறையா எங்களையே குறி வச்சி நிக்குறான் கைல சோத்து சட்டியோட ..



மூணு பேருமே கிட்டதட்ட அழுகுற நிலைமை..மொதல்ல எந்திரிச்சது சரவணன்தான் ...பின்னாடியே நாங்களும் பேசாம போனோம் ..திரும்பி அதே அடி பம்பில் வந்து உக்காந்தோம் ..

"இப்போ என்னடா பண்றது?" பாவமாய் செல்வம் கேக்க , திரும்பி என்னைய பாத்தான் சரவணன் ..

"பேசாம வீட்டுலே போய் சாப்பிடலாம்டா "ஆத்திரமும் ஏமாற்றமும் ததும்பிய குரலில் சொன்னேன் ..

"யாரு வீட்டுல?, எங்க அம்மா வீட்ட பூட்டிட்டு களை எடுக்க போயிருச்சுடா" இயலாமையுடன் சொன்னான் சரவணன் ..

"எங்க அம்மாவும், அத்தை கூடதாண்டா போயிருக்கு" எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொன்னான் செலவம் ..

"எங்க வீட்டுக்கு போகலாம்டா" சாவி எப்போதுமே ஓட்டு தாவாரத்தின் அடியில் இருக்கும் நம்பிக்கையில் சொன்னேன் நான் ..அதை விட்டாலும் வேற வழியில்லை எங்களுக்கு ... சாப்பிடாட்டியும் பரவால்ல. நாலாம் பிரியட் டெஸ்ட்க்கு போகலன்னா செல்வி டீச்சர் பின்னி எடுத்துரும்..

வேகமாய் எங்கள் வீட்டை நோக்கி நடை போட்டோம்.என் நம்பிக்கை வீண் போகவில்லை ..நல்லவேளை , சாவிய வீட்டு தாவரம் அடிலதான் வச்சுட்டு போயிருக்கு அம்மா ..

வீட்ட தொறந்து நேரா அடுப்படிக்கு விரைந்தேன் நான் .. "பழைய கஞ்சியும் , கருவாட்டு குழம்பும் தான் இருக்குடா " சொல்லிக்கொண்டே இரண்டு சட்டியையும் தூக்கிக்கொண்டே திண்ணை நோக்கி சென்றேன் ..

செல்வம் தட்டு எடுத்து வந்தான் .அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதுதான் " இவங்கிய நல்லாவே இருக்க மாட்டங்கிய்டா " கறிச்சோறு கிடைக்காத ஆத்திரத்தில் கருவினான் செல்வம் ...

கோவம் ,அழுகை ஏமாற்றம், பசி எல்லாம் ஒன்று சேர " இந்த கல்யாணம் உருப்படவே உருப்படாது "சாபமாய் சொன்னேன் நான் ..

சரவணன் கருவாடு எதாச்சும் கிடைக்குமான்னு கரண்டில தேடி பாத்துகிட்டு இருந்தனே தவிர எதுவும் சொல்லல ..



மணி 1.40 ..



2 மணிக்கு டெஸ்ட் ஆரம்பிச்சுரும் ..லேட்டா போனா செல்வி டீச்சர் அடி பிச்சு எடுத்துரும் ..

ஓட்டமும் நடையுமாக , பள்ளி வந்து சேரவும் மணி அடிக்கவும் சரியாக இருந்தது ..



மூன்று மாதங்கள் கழித்து, சித்திரை திருவிழா களைகட்ட தொடங்கி இருந்தது ..பத்து நாள் திருவிழா .. தினமும் கூத்து , கச்சேரி திரைப்படங்கள் என ஆட்டமும் பாட்டமுமாய் சென்று கொண்டு இருந்தது ..

பள்ளி முடிந்து வீடு திரும்பிய நாங்கள் ஊருக்குள் எதோ ஒரு விசித்திரமான அமைதியை உணர்ந்தோம்..

எப்போதும் தண்ணி இறைத்து கொண்டிருக்கும் ஊர் பொது நல்ல தண்ணி கெணறு சும்மா கிடக்கு ...

கதிரடிதுக்கொண்டிருக்கும் களத்து மேடு சும்மா கெடக்கு, நெல்லு தூத்த ஆளு இல்லாம ...

ஆடு மாடு கூட ஆள் அரவமில்லாம அமைதியா நடந்து போய்கிட்டு இருக்குது ...



"என்னாச்சுடா" கேட்டுக்கொண்டே கண்மாயை விட்டு இறங்கி ஊருக்குள் நடக்கலானோம்..

" கண்டிப்பட்டி மஞ்சுவிரட்டுல நம்ம வடிவேல மாடு குத்தி புடுச்சாம்டா, கொடல் சரிஞ்சு அங்கனையே உசிரு போயிருச்சாம் ..பாவம் அந்த புள்ள ..இப்போதான் உண்டாகி ஆத்தா வீட்டுக்கு போயிருக்கா..பாவி மக ,ஹ்ம்ம் அவளுக்கு இங்கன வாழ கொடுத்து வச்சது அவ்ளோதான் .. போன மாசமே வெளிநாடு போறேன்னு சொன்னனே , அப்படியாச்சும் போயிருக்க கூடாது..எமன் யாரை எப்போ கொண்டு போவான்னு யாருக்கு தெரியும்" ஆற்றாமையோடு எங்கள் தலையில் இடியை போட்டு விட்டு சென்றது பெரியாத்தா ....

நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவன் கலவர கண்களோடு பார்த்து கொண்டோம்..

ஊருக்குள் ஒப்பாரி சத்தம் அதிகமாய் கேட்க ஆரம்பித்தது..

அழுகையும் கண்ணீருமாய் அந்த வருடம் திருவிழாவே தள்ளி போனது ..நடக்க வேண்டிய அனைத்து சடங்குகளும் நடந்து முடிந்தது ..

பாவம் செண்பகவல்லி அக்கா, அதுக்கு அப்புறம் யார் கூடவும் பேசவே இல்லை ..கொஞ்ச நாள்ல அவங்க பொறந்த ஊருக்கே கூட்டிட்டு போய்ட்டாங்க ..

எல்லாம் முடிந்து எல்லோராலும் மறக்கப்பட்டு விட்டது ..



ஆனா , நாங்க விட்ட சாபம் தான் பலிச்சிருச்சு..அதனாலான தான் வடிவேல் அண்ணன் மாடு குத்தி செத்து போச்சுன்கிற நினைப்பு மட்டும் இன்னும் போகல ..

வாழ்கையில நெறைய மாறுதல்கள், நிறைய சந்திப்புகள், பல்வேறு மனிதர்கள் , பல மொழிகள் , சில தேசங்கள் , பலதரப்பட்ட வாழ்க்கை முறைன்னு நெறையவே மாறிடுச்சு

ஆனால், அந்த மத்தியானம் ஒரு மணி மட்டும் மாறாமல் , மறக்க முடியாமல் , நெருஞ்சி முள்ளாய் நெஞ்சில் குத்தி கொண்டே இருக்கிறது ..



நினைவுகளுடன்

ஜெயராஜ் சேது

எழுதியவர் : ஜெயராஜ் சேது (11-Feb-16, 4:21 pm)
சேர்த்தது : Jeyaraj Sethu
பார்வை : 228

மேலே