அங்கீகாரம்

கிளியும் காக்கையும் காதல் கொண்டன
ஊடகங்களில் தான் எத்தனை ஆதரவு
சிறுபட்சி முதல் பருந்து வரை
பறவைக் கூட்டமெல்லாம் ஆரவாரம் செய்தன
ஆசி கூறி ஒப்புதல் அளித்தன

சிறுத்தையும் சிங்கமும் காதல் கொண்டன
முகநூலில் தான் எத்தனை பகிர்வுகள்
சுண்டெலி முதல் யானை வரை
தள்ளி நின்று ஆசீர்வாதம் செய்தன
வனமே வந்து வாழ்த்துக்கள் சொன்னது

பஞ்சநாகமும் கீரியும் காதல் கொண்டன
கண்கொட்டாமல் ரசித்தவர் எத்தனை பேர்!
ஊர்வன வெல்லாம் உடனிருந்து ஆதரித்தது
பாம்புகள் எல்லாம் படம் எடுத்து
காதலுக்கு பச்சைக் கொடி காட்டின

வண்ணத்துபூச்சியும் வெட்டுக்கிளியும் காதல் கொண்டன
அதில்தான் எத்தனை ஆனந்தம் பார்த்தீரோ!
சில்வண்டு முதல் சிலந்தி வரை
தன் பாணியில் காதலை அமோதித்தது
வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளது

ஆணும் பெண்ணும் காதல் கொண்டனர்
எங்கிருந்து முளைத்தது இத்தனை எதிர்ப்புகள்?
சாதி மத இன வேட்கையா?
மானுட காதல் மரணத்தில் இணைந்தது
ஊடகங்கள் அனைத்தும் இரங்கல் தெரிவித்தன!

பட்சிகள், விலங்குகள், ஊர்வனவை, பூச்சிகள்
மனிதனை கண்டு எள்ளி நகைத்தன
இல்லாத சாதியை என்று மறப்பாய்?
மதமேனும் திரையை என்று அகற்றுவாய்?
முதன்முதலாய் மனிதன் ஊமை ஆனான்

மூடர் இனம் அழிய வாழ்த்தி
விலங்குகளும் பறவைகளும் பாடம் புகட்டின
மனித காதல் அங்கீகாரம் பெற
வேற்றுமை மறந்து காதல் மலர
இனிதாய் காதல் வளர்ப்போம் என்றன

எழுதியவர் : அருண்மொழி (14-Feb-16, 6:50 pm)
Tanglish : ankeekaaram
பார்வை : 187

மேலே