மறதியே நீ வரமா இல்லை சாபமா

மறதியே நீ வரமா
இல்லை சாபமா !
மனிதனுக்கே உண்டான
வாழ்கை நெருக்கடிகள்
உறவில் மோதல்கள்
சுற்றத்தில் சிக்கல்கள்
வேலை அழுத்தங்கள்
நடுவிலே நாட்டுநடப்புகள்
இதில் எதை கவனிப்பது
எதை விட்டு விடுவது ?
தமிழீழ படுகொலைகளும்
எழுவர் விடுதலையும்
காவேரி தண்ணீருக்கும்
முழக்கமிட்டு உரக்க சொல்லி
நீதிக்கேட்டு நெடும் போராட்டம்
சோர்வடைய செய்யும் நீண்ட
ஆயுள் வாழும் வழக்கினை
எதிர்பார்த்து வருடக்கணக்கில்
காத்துநிற்கும் சமூகத்திற்கு
தீர்ப்பு என்று கிடைக்கும் ?
சாதிய வன்மத்தின் ஆணவக்
கொலைகள் கண்ட போதும்
மதம் பிடித்து அரங்கேறிய
கோத்ரா படுகொலைகளும்
கல்புர்கி மரணங்களும்
அரசியல் பழிதீர்த்த இறப்புகளும்
அப்பாவிகளின் உயிர்காவுகளும்
நீதி மழுங்கிட மன்றத்திலே
நேரம் கடத்தியே செல்கிறதே !
இதில் எதை நினைப்பது ?
2ஜி ஊழல் வழக்குகளும்
சொத்துக்குவிப்பு வழக்குகளும்
தொடர் கதையாகி போனதே
குழந்தை பள்ளிப்படிப்பு முடித்ததே
குவாரி கனிம சுரண்டலுடன்
புது செய்தி ஒன்று பரபரப்பாக சேர
காற்றாடி திசைமாறிய கதையாக
நம் கவனம் சிதறி போகுதே
பழைய நிகழ்வும் மங்கியதே
மீண்டும் மறதியில் நாம் !
மணிகண்டன் @ Manifaro