ஏழ்மையின் எதிர்பார்ப்பு
ஏழ்மையின் எதிர்பார்ப்பு:
பாவலர் கருமலைத்தமிழாழன்
By dn
First Published : 22 February 2016 10:19 AM IST
வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு
வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு
தாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத்
தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை
வீழ்ந்திடாமல் தலைநிமிர்ந்து நிற்ப தற்கு
விளங்குகின்ற அடிப்படையாம் இந்த மூன்றே
ஏழ்மையிலே தவிக்கின்ற மக்கள் எங்கள்
எதிர்பார்ப்பாம் இவைகிடைத்தால் வாழ்வோம் நாங்கள் !
பிச்சையாக இலவசங்கள் தேவை யில்லை
பிறக்கின்ற கருணையதும் தேவை யில்லை
முச்சந்தி தனில்நின்று கையை ஏந்தி
மூச்சுவிடும் வாழ்க்கையினை விரும்ப வில்லை
கச்சிதமாய் மதிப்பளித்துப் பணிகொ டுத்துக்
கரங்களிலே உழைப்பதற்கு வழியை செய்தால்
நிச்சயமாய் ஏழ்மையினை ஓட வைத்து
நிறைவாழ்வு வாழ்ந்திடுவோம் வாய்ப்ப ளிப்பீர் !
மாளிகையின் வசதிகளைக் கேட்க வில்லை
மகிழுந்து சொகுசுதனைக் கேட்க வில்லை
கேளிக்கைப் பொழுதுபோக்கைக் கேட்க வில்லை
கேள்விக்கு விடைதேடும் எங்க ளுக்கு
வாலியினை மறைந்திருந்து கொன்ற போல
வளங்களினை சுருட்டுகின்ற கரமி ருந்து
கூலிக்காய் உழைக்குமெங்கள் உழைப்பிற் கேற்ற
கூலிதந்தால் போதுமெங்கள் ஏக்கம் தீரும் !