வேறு நிலாக்கள் 24 - Mano Red

வெட்டியான்!
--------------------
மயான அமைதி!
இங்கே தியானமிருக்க
யாரும் வரப் போவதில்லையென
வெட்டியானுக்குத் தெரியும்.
கேவலமாக இறந்தாலும்
கூச்சம் ஏதுமின்றி
ஊர்வலமாக வருவதை
நினைத்துச் சிரிப்பான்.
மாலை மரியாதை செய்து
சொந்த பந்தமெல்லாம் கூடி,
அடங்கியவனை அழைத்து வர
மனதிற்குள்
திருவிழாக் கொண்டாடுவான்.
உங்களின் பாவ, புண்ணியங்கள்
எனக்குத் தேவையில்லை.
கால் பணம் முழத்துண்டுடன்
மிச்சமிருக்கும்
வாய்க்கரிசி போதும் என
வியாக்கியாணம் பேசுவான்.
அடக்கமானவரின்
அரும்பெரும் கதைகளை
தீயிட்டு எரித்து
காற்றெல்லாம் பரப்பி
காட்டின் காதை நிரப்புவான்.
வேக வேகமாக
உடல் வேகத் தொடங்க,
கொண்டது கொடுத்தது
உண்டது உடுத்தது என
எல்லாவற்றையும்
அடித்து நொறுக்குவான்.
முடி சூடியவனோ
முடி வெட்டுபவனோ
இங்கே வந்தால் சாம்பல்தான்.
நியாயம் சொல்லியபடி
நாளைய பிணத்தை
பாடலுடன் வரவேற்க
ஆயத்தமானான் வெட்டியான்!