அதைத்தவிர வேறில்லை

அதைத்தவிர வேறில்லை
ஆதியில் ஒன்றுமில்லை
ஒன்றுமில்லாததில் இருந்துதான்
அனைத்தும்
உருக்கொண்டிருக்கின்றன.
உண்டாகிப் பல்கி
விரிந்துகொண்டிருப்பது
எப்போது முடியுமென்று
எவருக்கும் தெரியாது.
ஜடத்திலிருந்து இயக்கம் வந்தது
இயக்கம்தான்
விரிவுக்கும் உயிருக்கும் காரணம்.
இயற்கை விதிகளால்
இயங்கிக்கொண்டிருக்கிறது
உடலும் உயிரும்!
உயிருக்குக் காரணம்
இயற்கையென்றால்
இயற்கைக்குக் காரணமெதுவோ
அதுவே நிரந்தரம்.
அது
பொருளாய் ஆற்றலாய்
பிரபஞ்சம் தாண்டியும்
பரவிக் கிடக்கிறது!
தானே தோன்றி
தானே இயங்கும்
பூஜ்ஜியமாய் அது
நிலைத்து நிற்கிறது.
இருப்பதும் இல்லாததும்
அதுவாகவே இருக்கிறது.
ஆம்
ஆதியில் ஒன்றுமில்லை
அந்த
ஒன்றுமில்லாததைத் தவிர!