இதை யாரும் படிக்காதீர்கள்

புகை பிடிப்பது தீங்கு விளைவிக்கும்;
நலம் கருதி வெளியிடுவது
சிகரெட் நிறுவனம்.

குடி குடியைக் கெடுக்கும்;
நல்ல பழமொழி
அறிவுறுத்தியது மதுபாட்டில்.

மரத்தை வெட்டாதீர்கள் சுற்றரிக்கை;
தயாரிக்கப்பட்டது
மரம் தந்த காகிதத்தில்.

வேட்பாளர்கள்-மக்களின் சேவகர்களாம்
மன்னர்கள் நிற்கிறார்கள்
சேவகர்களிடம் கையேந்தி..

வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
காலியிடம்-ஆனால் வேலையில்லை;
பரிந்துரை வேண்டுமாம்.

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"
பாடம் நடத்தினான் பள்ளியில் மகன்;
பெற்றோர்-முதியோர் இல்லத்தில்.

அனாதை ஆன பூங்கா ஊஞ்சல்;
ஆட ஆள் இல்லை
குழந்தைகள் கையில் அலைபேசி.

அழகான மலர்க்கொத்து
ஆசையுடன் அள்ளி எடுத்தேன்;
வாசனையில்லை.
பல்லை இளித்தன பிளாஸ்டிக் பூக்கள்.

மார்கழி மாதம்-மாக்கோலம் போடணுமாம்
தெருவை நிறைத்தது வண்ணெய்க்கோலம்;
வாடை தாங்காமல் ஓடினாள் லட்சுமி.

பள்ளிக்குப் பயணம்.
புத்தகச்சுமையுடன் கூன் விழுந்த பெயரன்;
நிமிர்ந்து நடந்தார் தாத்தா.

அம்மா என அழைத்தாள்
தம்பியின் மகள்;
ஆனந்தக்கண்ணீரில் முதிர்கன்னி.

முரண்பாட்டிற்கு ஏற்றபடி வாழ
பழகிவிட்டது உலகம்;

உதாரணம்,
' இதை யாரும் படிக்காதீர்கள்'
தலைப்பிட்ட கவிதையை
படித்தமைக்கு நன்றி!!!!

எழுதியவர் : இனியகவி (4-Mar-16, 12:58 pm)
பார்வை : 96

மேலே