நேரம்போக்கி
நேரம்போக்கி
============
அதிக இடைவெளிக்குப்பிறகு
ஒரு இடைநேரத்தில்
அவள் கஞ்சப்பார்வைக்கு அடகுபோன
என் முன்னைய காலங்களை
மதுக்கோப்பையில்
நிரப்பிக்கொள்வது என்பது
நல்ல நேரம்போக்காகத்தான் இருந்தது
பேருந்து தரிப்பில்அமர்ந்திருக்கும் நான்
இறவாப் பூங்காற்றிடம்
என் குறுயிழை அசைவை
அதோ சுவரொட்டி பாப்பாவின்
கன்னங்களுக்கு ஒற்றியனுப்பினேன்
சற்று முன்னால்தான்
அடுப்பங்கரி ஒன்றால்
சுவர்மேலே எழுதிக்கொண்டிருந்தாள்
பட்டுப்பூச்சியிறகின்
தழுவல் என்றால்
அவளுக்குப் மெத்தப்பிடிக்குமென்று
எதிரே வரும்
சன்னல் திறந்த மகிழூந்துகளுக்குள்
இலக்கு மாறாமல்
குறுங்கற்களை வீசி
என் ரசனை தின்கிறாள்
அன்றொருநாள்
பேருந்து முன்னிருக்கையில்
கூட பயணித்த
குறும்புக்கார தேவதையொருத்தி
கையிருப்பு தீர்ந்ததும்
கூந்தல் பிசிறு
மேற்கன்னத்தில் இடர
உதடு பிசைந்து முகஞ் சாய்கிறாள்
நானோ இல்லாத கற்களை இங்கே தேடுகிறேன்
பகல் முழுவதும்
எவ்வளவுதான் நாகரீகத்தைப் பூசிக்கொண்டாலும்
படுக்கப் போகிறவழியில்
அந்த இராப்பிச்சைக்காரனின்
தட்டடித் தாளத்திற்கு
கால்கள் தடுமாறவேதான் செய்கின்றன
இந்நேரம் எனக்கு
பட்டப்பெயர் வைத்திருப்பான்போல
நான் நாகரீக கோமாளியென
இதோ
அந்த தெருமுனையில்
வலைக்குள் அகப்பட்ட பூக்களின்
காஸ்ட்லி பார்வைகள்
என்னைப் பற்றிதான்
முணுமுணுக்கின்றனவாக இருக்கும்
என்ற நப்பாசையும்
ஒரு தினசரி ஊக்கமருந்துதான்
"பூக்காரன் கவிதைகள்"