நித்திரைப்பூக்கள்
வட்டமிட்டுக்கொண்டிருக்கும்
வறுமையை
விரட்ட
ஒலி எழுப்பியபடி
வீதியில் அலைகிறேன்
ஒரு வெயிலென
தூக்கம்
புதைத்த இடத்தை
மறந்த விழிகள்
மண்ணுளிப் பாம்பாக
இரவை நெம்புகிறது
கனவைச்சுமந்தபடி..
சாலையெங்கும்
சாமம் வழிந்தோட
நான் செய்த
தூக்கக்கொலைகள்
கொட் "ஆவி"யாய்
தொடர்ந்தபடி
இருந்ததென்னை
நகரத்தின்
பேரமைதியை
ருசித்தபடி
நகர்ந்துபோகின்றது
மாடொன்று
அண்ணாசாலையில்.
திருநங்கைகள்
உலவும்
திருப்பமொன்றில்
விருப்பமின்றி
கடக்கின்றேன் இந்த
வாழ்வை.
வீதியொளிரும்
சோடியம்
விளக்குகளுக்குக் கீழ்
நீங்கள்
நிலாவென்று
சொல்லப்படுகிறவன்
வாழ்கிறான்.
தலைகீழாகத்
தொங்கியாவது
வாழ்ந்தாகவேண்டும்.
எனக்கு
விதிக்கப்பட்ட
இந்தவாழ்வை
ஒரு
வௌவாலைப்போல!
- நிலாகண்ணன்