கவியரங்கம் படித்தது
கடவுள் வாழ்த்து!
நம்பிக்கை வைத்தே நவின்றே துதிக்கின்றோம்
தும்பிக்கை நாதன் துணை
ஐந்துக ரத்தொடும் ஆனைமு கத்தொடும்
ஆணைபு ரிந்திடும் அரசேநல்
இந்தின் இளம்பிறை போன்றநின் கொம்பினால்
இமயத்தில் எழுதிடும் புலவோனே!
சந்தமி குத்திடும் செந்தமி ழவ்வைசொல்
தன்னையு ணர்ந்தருள் புரிவோனே
சிந்தைம கிழ்ந்திடச சேரனை முந்தியத்
திருக்கயி லைதனில் திகழ்வோனே!
இந்தபுத் தாண்டினில் எங்கள்வி ருப்பங்கள்
எய்திடக் கவிமலர் இடுகின்றோம்!
சந்தவ சந்தத்தின் சாதனை ஆண்டெனச்
சாற்றும்பு கழெம்பா லெய்திடவே,
தந்தனத் தானனச் சந்தமு ணர்ந்துடன்
தாண்டவ மாடிடுஞ் சற்குருவே!
''வந்தருள் தந்தருள்'' என்றுவ ணங்கியெம்
வாயுரை கையுறை ஆக்குவமே!
'''ஜய''வென்னும் நல்வெற்றி சாதனைக்கோர் புத்தாண்டாய்
நயம்செய்க எங்கும் நலம்!
அமுதுண்ட விண்ணோர்கள் அனைவருமே மாய்ந்துவிட
ஆலகா லத்தை உண்டே,
அழியாமல் எந்நாளும் அடியாரை வாழ்விக்க
அரங்கத்தில் ஆடு கின்றாய்!
கமுகோடு தென்னையும் கடம்பும்வ ளர்ந்திடும்
கானகப் பொதிகை மலையில்
கவினார்ந்த தமிழ்தனை அகத்தியர்க் கருளியே
காலத்தை வென்று நின்றாய் !
தமிழான அமுதுண்டு தளிர்த்திட்ட புலவோர்கள்
தருபே ரிலக்கி யத்தின்
தரங்கண்டு பாராட்டும் முருகனின் உபதேசம்
தாழ்ந்தே பணிந்துகேட் டாய்!
உமியான எனக்குள்ளும் ஒளியான கனல்மூட்டி
யோகம் பயிற்று வித்தே,
ஒருசிறிய மின்னலை உருவாக்கி உலகிற்கே
ஒளிகூட்ட வேண்டு வேனே!
தமிழ் வாழ்த்து
நீரில்நெ ருப்பினில் நீந்தினாய்! கரையிலே
நின்றவர்க் குறுதிசொன் னாய்!
நின்னருட் பெருமையை நெஞ்சாரப் போற்றினோர்
நிம்மதி கொள்ள வைத்தாய்!
பாரில் தமிழ்நலம் பாலித்த பாங்கினைப்
பலமுறை பார்க்கவைத் தாய்!
பரிவதன் உருவான பரமனின் ஆணை
பலித்ததைப் பார்த்து விட்டோம்!
தேரிலே ஏற்றியும் தெருவிலே போற்றியும்
தெய்வமாய் நின்னை எண்ணி
தெரிசனம் வேண்டினோர் சிந்தித்த யாவையும்
செயலில்நி றைவேற்றி னாய்!
காரிய சித்தியைக் கண்முனே காட்டுவாய்!
கைகூப்பிப் போற்று கின்றோம்!
கடலை போற்பல உடல்கொண்ட அன்னையே
கன்னித் தமிழ்த் தெய்வமே!
புத்தாண்டு வாழ்த்து
வையம் செழித்திட வானம் பொழிந்திட
வந்தது புத்தாண்டு! - இனி
மகிழுவம் பல்லாண்டு!- நம்
ஐயமும் அச்சமும் அகன்றிடத் தந்தனன்
ஆனந்தப் பூச்செண்டு - பெரும்
ஆவல் மிகக் கொண்டு !
கைகள் உழைத்திடக் கண்களில் நீர் ஏன்?
கவலையைத் தள்ளுங்கள்! - புதுக்
கனவுகள் காணுங்கள் ! - உங்கள்
செய்கையில் இன்பமே சேர்ந்திடும் நல்லன
தினம்தினம் செய்யுங்கள் - நல்ல
செந்தமிழ் நெய்யுங்கள்!
நேற்றிருந்த வாழ்க்கைதனில் நிறைவே இல்லை
இன்று வந்த புத்தாண்டோ எழிலின் சோலை!!
நாளையிந்த சோலையிலுன் நகலும் இல்லை
நாட்டிடுவாய் உன்புகழை, நரனடா நீ!
ஆற்றுவெள்ளம் ஓடிவரும் நாளைக் காலை
ஆயிரமாய்ப் பூப்பூக்கும் அன்று மாலை!
சேற்றுவயல் நாற்றுகளில் கதிரின் வேலை
செய்திடும்நல் லோவியத்தின் காட்சிச் சாலை!
தலைப்பைப பற்றி...
இந்தபுத் தாண்டிலே எனக்குப் பிடித்த...வர் ,
எல்லாரும் போற்றுபவர்
சொந்தத் தலைவராய்த் தோத்திரம் பெறுபவர்
சூராதி சூரரா வார்!
வெந்திடும் போதிலும் நொந்திடும் நிலையிலும்
வந்தே மாதரத் தை
அந்தமும் சிந்திட ஆயிரம் முறைசொலும்
ஆடவர் ''சிதம்பர னார்''!
அவரைப் போற்றியே ஆறுதல் கொண்டிடல்
யாவர்க்கும் உரிமை யன்றோ?
இவருக் கிணையாய் எவரைச் சொல்லலாம்?
இவரே இவர்க்கிணை! ஆம்!
சுவரும் எதிரொலி சொல்லச் சிறைதனில்
சுதந்தர தேவிபுகழ்
தவறில் லாமல் வெள்ளையர்க் குணர்த்திய
சாதனை மன்னர் அவர்!
செக்கிழுத்த செம்மல் வ.உ. சி
இருபா இரு ப.:. து!
**************
தூத்துக் குடிநெல்லை ஏத்தும் வழக்கறிஞர்
கூத்தன் திருவடியே கும்பிட்டார் - ஏற்றமுடன்
தென்னா டுடையானைத் தேறும் சிதம்பரம்போல்
எந்நாளில் காண்போ மினி? 1 1.
இனிதாகும் இல்லறத்தின் மாண்பைப் போற்றி
இணையற்ற மழலைகளைப் பெற்ற தந்தை
தனியாகத் தாம்பயின்று ''வக்கீல்'' ஆகித்
தாய்நாட்டுக் காய்வாதம் செய்த சான்றோர்
கனிவான மனங் கொண்டே நாட்டு மக்கள்
கடைத்தேறப் போர்க்கொடியை உயர்த்தும் தீரர்!
மனையாளின் இன்குரலால் இறுதிநாளில்
மகாகவியின் பாக்கேட்டே மகிழ்ந்தார் அன்பர்!2
அன்புமிக பாரதியை ''மாப்பிள்ளை'' என்றழைத்தே
இன்புற்ற ''மாமா'' சிதம்பரனார் -- முன்புற்ற
வெள்ளையன் ''விஞ்ச்''சை உரையாலே வீழ்த்தியுளம்
கொள்ளைகொண் டானேயக் கோ!3
கோட்டுடனே தலைப்பாகைக் கோலம் காட்டிக்
குலவுதமிழ் பாரதிபால் அன்பைக் காட்டி,
நாட்டிலுயர் சுப்ரமண்ய சிவாவின் பேச்சை
நாடிவந்தே போற்றுகின்ற நட்பைக் காட்டிக்
காட்டாட்சி வெள்ளையாரை விரட்டியோட்டிக்
கனிவுடனே தொழிலாளர் கூட்டம் கூட்டி,
வாட்டமிலா வாழ்வுதரக் கப்பல் ஓட்டும்
மாண்புடைய சிதம்பரத்தை வாழ்த்து வோமே!4
ஓமென்றே சொல்லும் ஒருமந் திரம்கூறிச்
சேமம்சேர் சீருலக நாதர்பால் -- பூமிபுகழ்
மைந்தனாய்த் தோன்றி வளர்ந்த சிதம்பரமென்
சிந்தையுள் நின்றார் செழித்து 5
செழித்திருந்த செல்வத்தின் சிறப்புத் தோன்ற
திருச்சியிலே கணபதியின் சட்டப் பள்ளி
வழிகாட்ட வழக்கறிஞர் பட்டம் பெற்றார்
வாதாடும் தொழிலாலே வருவாய் பெற்றார்
மொழித்திறத்தில் புலமை பெற்றே ஊரார் போற்ற
முதன்மையுறும் தலைவரென விளங்கலானார்.
இழிவுபெற்ற தொழிலாளர் உயர்வுக்காக
எழுச்சிமிகும் தொழிற்சங்கத் தலைமை பெற்றார்.6
பெற்ற விடுதலையைப் பேணாத மானிடர்காள்
கற்றுக்கொள் வீரன்னான் காவியத்தை -= முற்றும்
அறிவீர் வரலாற்றை, அப்போது தானே
வெறியூட்டும் வீரம் வரும்?7
வீரமிகும் பாரதியின் நட்பைப் பெற்றார்
விடுதலையை நாடிவளர் வேட்கை கொண்டார்
சாரமிகும் தர்மசங்க நெசவுச் சாலை
தனித்தசுதே சிப்பிரச்சா ரத்தின் சங்கம்
ஊரிலுரு வாக்கிமிக ஊக்கத் தோடே
உண்ணாமல் உறங்காமல் தொண்டு செய்தார்
யாருமவர் பின்சென்றார் ஆங்கி லேயர்
அஞ்சிடவே கப்பல்விட ஆலோ சித்தார்! 8
ஆர்வமுடை ஆசான் பெருமாளும் பாட்டியுடன்
சேர்ந்தே இதிகாசத் தேனமுதை - ஆரக்
கற்பித்தார்! ஆங்கிலத்தை கற்றார்நற் கல்விதரும்
பொற்புடைய பள்ளியிற் புக்கு. 9
புக்கவெள்ளைக் காரரரவர் புரிந்த தீங்கைப்
போக்கிடவே ஆங்கிலத்தில் புலமை பெற்றார்;
தக்கவராய்த் தொழிலாளர் சங்கம் கண்டே
தனிவேலை நிறுத்தத்தில் ஈடு பட்டார்;
மிக்கவெள்ளை தனைப்பணியச் செய்த போரால்
வேண்டுவன நிறைவேற, வியந்தார் நாட்டார்!
மக்களினம் வாழ்த்திடவே சந்திர பாலர்
வருகைதரப் பொதுக்கூட்டம் நடத்திவைத்தார்10!
வைத்த பணத்தையெலாம் வாரிச் சுருட்டிடவே
சைத்தானாய் வெள்ளை சதிசெய்தான்- எய்த்த
சுப்பலெலாம் துள்ளிக் குதித்தெழவே ஓட்டினார்
கப்பல்தனைத் தெற்குக் கடல்! 11
கடலின் அலைபோல மீண்டும் மீண்டும்
காதகராம் வெள்ளையர்கள் சூழ்ச்சி செய்தார்
மடங்கலை குகைக்குள்ளே அடக்கல் போலே
வ.உ.சி சிவா என்ற இருவர் மேலும்
தடைச் சட்டம் ஏவிவிட்டார் கலங்கிடாத
தன்மானச் சிங்கங்கள் மீறிச் சென்றார்
கடைசியிலே தீவுக்குள் இருப தாண்டு
காராக்கி ரகமென்றார்; வெகுண்டார் ஊரார்! 12
ஊரவரின் ஊக்கம் உலைக்குள்ளே வெந்நீராய்
சீறியே ஓங்கச் சிறைதன்னைப் -- பாரோர்
தகர்க்க வெளிப்பட்டார் சதியாளர் தோற்க
நகைத்ததே நெல்லை நகர்!13
நகராகும் கோவையுடன் கண்ண னூரும்
நல்லவராம் இருவரையும் சிறைக்குள் தாங்கிப்
புகழாரம் பெற்றனவாம் செக்கி ழுத்த
புனிதர்சிதம் பரத்தின்கரம் பட்ட தாலே ,
நகைபூத்த கண்ணனவன் குழலைப் போலே
நாதவெள்ளம் செக்கினிலும் பெருகிற் றம்மா!
பகைவரையே நடுங்க வைத்த தேச பக்தர்
பரம்பரையில் பிறத்தலும்நம் பாக்ய மன்றோ?14
மன்றாடும் பெம்மான் மகிமை விடத்தாலே
இன்றோ இவர்பெருமை செக்காலே - என்றும்
ஊராரைக் காப்பார் உடல்துன்பம் பாராரே
சீரார் சிதம்பரம்போல் செய்! 15
செய்தபிழை ஆஷின்மேல் திரும்ப வந்தே
சீறிவரும் துப்பாக்கி ரவையாய்ப் பாய்ந்தே
எய்தியதை என்வாஞ்சி மாமா செய்தார்
எதிர்வினைகள் அரசியலில் என்றும் உண்டாம்
மெய்யன்பர் முறையீட்டால் சிறைசெல் காலம்
மிகவிரைவில் ஆறாண்டாய்க் குறைந்த தம்மா!
ஐயன்சிதம் பரம்மீண்டும் வக்கீ லாகும்
அரும்வாய்ப்பை வாலிஸ்எனும் அன்பர் தந்தார்!16
தந்தவர்க்கே நன்றி தகுமென்றே தம்மகன்பேர்
அந்தவா லீஸ்வரனாய் ஆக்கினார் -- சொந்தம்
மதங்கடந் தென்றும் வளரும் எனவே
சிதம்பரம் செய்தார் சிறப்பு! 17
சிறந்தவரின் கப்பல்தொழில் செய்தா ரெல்லாம்
சீரழிந்தே கப்பல்தனை விற்று நன்றி
மறந்தாரே! என்செய்வேன் என்று மாழ்கி
மண்ணெண்ணெய் விற்றிட்டார் அரிசி விற்றார்
அறம்மாய்ந்தே மறம்ஓங்கி ஆண்மை நீங்கி
அறிவற்றே நாட்டினரும் அடிமை மோகத்
திறங்கிட்டார் இவர்நிலைமை என்றே ஓயும்?
சிதம்பரனார் வறுமையிலும் செம்மை கொண்டார்! 18
கொண்டதம் பேரறிவின் கொடையாய்த் தமிழ்நூல்கள்
அண்டம் புகழவே ஆக்கிட்டார் - மண்டும்
மிடியைஜேம்ஸ் ஆலன்நூல் மெய்ம்மை அறத்தை
வடித்தார் தமிழில் மகிழ்ந்து!19
மகிழ்ந்தே தம்மருமகனின் பாடல் தன்னை
மனைவியவள் பாடுவதைக் கேட்ட வாறே
புகுந்தார்நம் பாரதத்தாய் அடியின் நீழல்
பொன்னொளிரும் சுதந்திரத்தின் சுவை காணாமல்
தகுமோநம் சிதம்பரனார்க் கிந்தத் தாழ்வு?
தரணியிதைத் தாங்கிடுமோ? தமிழ்தோற் கும்மோ?
நகல்வேண்டா, நான்விரும்பும் நல்லோர்தம்மை
ஞாலத்தீர், மறவாதீர்; போற்றி வாழ்வீர்!20
கவியரங்கத் தலைமை எனும் சுமையை வைத்த
கவிவேழம் உள்ளிட்டோர்க் கென்வ ணக்கம்;
புவியரங்கில் என்பாட்டும் புகவைத் திட்ட
புகழ்சந்த வசந்தத்தார்க் கென்வ ணக்கம்
செவிமகிழ இதைமீண்டும் சொல்லிப் பார்த்தே
சிறப்பென்றே பொய்யுரைப்போர்க் கென்வ ணக்கம்;
அவிமனமும் ஆழ்புலமைத் திறமும் பெற்ற
ஆன்றோர்க்கும் வணக்கம்சொலி அமைகின் றேனே!
அடுத்த கவிஞரை எடுத்து ரைத்திடின்
படுத்த வரும்விரைந் தெழும்புவார்...
எடுத்த சொல்தொறும் விடுத்த பொருள்தரும்
மிடுக்கை எதிர்கொளக் கலங்குவார்
தொடுத்த தமிழமு தெடுத்த குவளையில்
கொடுத்த கவிதையுள் மயங்குவார்
விடுத்த தெளிவினை மடுத்த கஜமுகன்
அடிக்குள் அடிபல அடுக்குவார்
படைத்த கவிதையுள் மிடைந்த கருத்தெனப்
பரவிய எழுத்தவல் பொரியாகும்
பொலிந்த மனமெனப் பருத்த புஜமெனப்
பொதுளிய அசையப்ப மதுவாகும்
அடைத்த வரிகளுள் கொடுத்த விரிவினில்
அணிந்தசீர் சிறுமோ தகமாகும்
தடுத்த தளைகளுள் சிலைத்த ஒலிநயம்
கடித்திடும் சீடைதம் வகையாகும்
அடுத்த அடிகளில் கொடுத்த கவித்திறம்
செடித்திடும் அருகம்புல் லதுவாகும்
தொடுத்த தொடையதில் அடங்கும் இயல்திறம்
திதித்திடு சுழியத்தின் சுவையாகும்
படைத்த பாவகை மொழிந்த மொழிவளம்
கடித்திடும் கரும்பதன் சுவையாகும்
நடக்கும் வேழத்தின் தடத்தை அறிந்தநம்
இலந்தையின் கவிதைகள் நமைச்சாரும்.....
கவிவேழம் "பிடித்த"தனைக் கனவேகம் கொடுப்பதனைக்
செவிகொடுத்துக் கேட்பதுவும் விழிவிரித்துக் காண்பதுவும்
புவியோரின் பாக்கியமே, புலவோரின் போக்கியமே
கவிஞரெலாம் சேர்ந்திடுக கதித்தெழுந்தே அணிதிரள்க!
வருக கவி தருக !
வணக்கம்