ஞான வாசிட்டம் - 12

மோட்சத்தின் வாயிற் காவலர்கள்
நால்வர் என்றுரைத்த வசிட்டர்
மேலும் கூறினார்
அவர்தம் குணங்களையே..

1. பொறுமை (சாந்தி, அமைதி)

இனிய பொறுமையை கைக்கொண்டால்
ஆசையும் துன்பமும் அகன்று போகும்
சூரியன் வரவு கண்ட இருளதனைப் போலும் !

மரணமும் செல்வமும் மருளச்செய்யும்
கெட்ட போரும் எதுவும்..
பொறுமை உள்ளவர்தமை
தீண்டுதல் இயலாது ..
சாந்த குணம் உடையார்
தூயராவர் .. துன்பமிலாதர்
மேன்மைதரும் இக்குணத்தை
யாரும் கொள்ள ..எளிதாய்
மோட்சத்தின் உள் புகுவர்

2.தத்துவ (ஆன்ம) விசாரணை:

ஆன்ம விசாரணை ..
அற்பங்கள் ஆய்ந்திடும்
மேலானது யாதென்று தானாய் உணரும்
வீடு பேற்றை அடைய வழிவகுக்கும்
நான் யார் எனக் கேட்பதில் துவங்கும்
அறியாமை இருள் நோய்க்கு
ஔடதம் அதுவே ஆகும்!

3. பூரண சந்தோஷம்:

எதிர்பார்ப்புகள்
ஏதும் இன்றி இருத்தலால்
ஏமாற்றங்கள் இலாது
கிடைத்திடாதவற்றினால்
துயரம் கொள்ளாது
நன்மை தீமை யதனால்
விருப்பு வெறுப் பில்லாது
சமநிலை கொண்டிடும்
பூரண சந்தோஷ மனம்
இதற்கு புலன் நுகர்ச்சி இன்பம்
கொடிய விஷம் ஆகும்
இச்சிந்தை நிறை மானுடனை
வையமும் கொண்டாடும்..
மோட்ச லோகமும் வரவேற்கும்!

4. சாது சங்கம் (நல்லோர் இணக்கம்)

ஞானியர் தமை நாடும்
நல்லோர் இணக்கம்
குறையறிவை நீக்கும்
குற்றங்கள் தீர்க்கும்
மூலிகை நிறை அருவியில்
கங்கைக் கொப்பான நதியில்
குளித்திட நன்மைகள் விளையும்
அதுபோலவே..
ஞானியர் சேர்க்கை
நன்மையே பயக்கும்
நற்கதி அடைந்திட
வழியென ஆகும்!

இவை நான்கும் நாடி நற்பயன்
பெறுவதை தடுப்பது ஏதுமில்லை
என்பதே நிதர்சனமான உண்மை!

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (15-Mar-16, 5:08 pm)
பார்வை : 404

மேலே