அனல்

அனல்
===========================ருத்ரா இ,பரமசிவன்

காலைச்சூரியன்
கண்விழிக்கும்போதே
கனல் மழையோடு
சோம்பல் முறித்தான்.
அவன் விட்ட கொட்டாவியில்
பூவும் புல்லும்
பூண்டும் செடியும்
துவண்டு போயின.
மாநகரத்தின்
அல்லது
சொற்பிரள்ச்சியில்
மாநரகத்தின்
அந்து துண்டு துண்டு காட்சிகளுக்கு
சூரியன் "ஒளி ஒலிக்காட்சிகளும்"
நடத்திக்கொண்டிருந்தான்.
நெரிசல் மிக்க போக்குவரத்தில்
நரம்பு புடைக்க நுரை தள்ள தள்ள‌
நகரந்து கொண்டிருக்கும்
பார வண்டிகள் முதல்
சாட்லைட் மேப் பொருத்தப்பட்ட‌
வழ வழ மார்பிள் கார்கள் வரை
அந்த பெரிய சாலையின்
"தார்ப்பாலை வனத்தில்"
நாக்கு தள்ள ஓடிக்கொண்டிருந்தன.
ஏழெட்டு ராட்சத அனகொண்டாக்கள்
(மேம்பாலங்களின் விமானத்தோற்றம்)
நகரத்தையே
கவ்வி விழுங்க
முயன்று கொண்டிருந்தன!
அந்த "ப்ளாட் பாரத்தில்"
"கபாலி" கூரை போட‌
"பாகுபலி பார்ட் ரெண்டு"
சுவர் அமைக்க‌
இன்னும்
மகாநடிகர்களின்
முகங்கள்
சன்னலுக்கு வெட்டியது போக‌
முண்டமாய் நிற்கும்
சினிமா உருவங்கள் அமைத்த‌
படுதாவில் அமைந்தது
அந்த குடியிருப்பு.
நிஜமான வறுமையை
அண்டைகொடுத்து நிற்கும்
சினிமா நிழல்களின்
உடைந்த கட்அவுட்டுகளிலும்
சிரித்துக்கொண்டிருந்தன
சுவர் இல்லாத சித்திரங்கள்.
மெட்ரோவின் "ஜேசிபி"
எந்திரங்கள் கூட‌
ஒரு விசில் அடித்துவிட்டு
அங்கிருந்து ஓடிவிடும்.
டி.வி விளம்பரத்தில்
அவை ராட்சச பற்களைக்காட்டி
எக்காளமிட‌
அந்த வீடு
ஒரு பிரபலத்தின்
அடுக்கு மாடி வீடா என்ன?
அணைவாய்த்தேங்கிக்கிடக்கும்
கூவமே
யாரையும் அங்கே நெருங்க விடாது?
"சிந்து நதி மிசை" போல‌
இங்கும் கண்டிப்பாய்
படகு விடப்படும் என்று
ஏதோ ஒரு கட்சி பரபரப்பாய்
தன் தேர்தல் அறிக்கையை
அச்சிட்டுக்கொண்டிருக்கலாம்.
யார் கண்டது?
தேர்தல் கால பறக்கும் படைகள் கூட‌
தன் சடங்குகளை சம்பிரதாயங்களை
அங்கே அரங்கேற்றிக்கொண்டிருக்கலாம்.
அதையும் வேடிக்கை பார்க்க‌
இந்த சாக்கடை ஈக்களுக்கு
கொண்டாட்டம் தான்!
அந்த சாக்கடையோர கடைக்காரனின்
சில சில்லறைக்கரன்சிகளுக்கும்
கணக்கு இல்லையாம்.
அந்த துட்டும்
தேசிய கஜானவுக்குள்
ஜீரணம் ஆகி விடலாம்.
சுறு சுறுப்பான இயக்கம் தான்.
ஒரு பெரிய அரக்கத்தனமான‌
கருப்புப்பொருளாதரத்தின்
திமிங்கிலத்தின் முதுகில்
இந்த "பொம்மைக்கார்கள்"
வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தன!
சூரியன் உச்சிக்கு வந்து விட்டான்.
அவனுக்கே
வேர்வை தாங்க முடியவில்லை.
முடை நாற்றமெடுத்த‌
இந்த சமுதாய முரண்பாடுகளின்
அக்கினி ஆவி
அவனையே சுட்டெரித்தது போலும்.
அவன் வேக வேகமாக‌
அந்தியை நோக்கி
தன் ஏழுகுதிரைத் தேரை
விரைவாய் ஓட்டத்தொடங்கினான்.

=================================================

எழுதியவர் : ருத்ரா (18-Mar-16, 9:51 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : anal
பார்வை : 75

மேலே