அனுபவம் புதுமை

நானா இப்படி??

விட்டத்தில் விண்மீன்
கூட்டத்தைக் கண்டதில்லை..

ஜன்னலின் கம்பிவழி
நிலவினை ரசித்ததில்லை..

தீண்டிய காற்றினை
தென்றலாய் உணர்ந்ததில்லை..

தலையணையில் பூவாசம்
மோகினியின் பயமுமில்லை..

தெப்பக்குள மீன்களுக்கு
பொரியிட்ட பழக்கமில்லை..

தேநீரை ஆறவைத்து
அசைபோட்டு அருந்தியதில்லை..

கோழியிறகை கையில் சுற்றி
குழம்பிய சேதியில்லை..

பூக்களுக்கும் வலிக்குமென
புதுமையாய் நினைத்ததில்லை..

புல்வெளியில் பூச்சிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்தியதில்லை..

கவிதையெழுத முயன்று - அதன்
கிறுக்கலில் காதலை ருசித்ததில்லை..

தென்னந்தோப்பு மரத்திலெல்லாம்
உன்பெயரை செதுக்கிவைத்து
மழையில் நனையாமல்
கைக்குடை பிடித்ததில்லை..

மாக்கோலம் நீயும் போட - அதை
புகைப்படம் எடுக்கச்சொல்லி
எறும்புதனை நானும்
தூதாய் விட்டதில்லை..

நீராடி அள்ளிமுடித்த
கூந்தலோடு நீ சுற்றும்
பிள்ளையாரை நானும்கண்டு
பொறாமை கொண்டதில்லை..

அனுபவம் புதுமை-
அவளிடம் கண்டேன்;
அழகான வரிகள்-
அர்த்தம் கொண்டேன்..

எழுதியவர் : இனியகவி (25-Mar-16, 12:49 pm)
Tanglish : anupavam puthumai
பார்வை : 425

மேலே