அலைகளின் கலைகள்

எழுந்து விழுந்தது
வரைந்து செல்கின்றன
எண்ண முடியாத
ஓவியங்களை..

அழித்தழித்து
வரைவதில் தான்
அலைக்கரங்களுக்கு
ஆனந்தம்..

ஆழ்கடலின்
உள்ளுணர்வுகளை
ஒப்புவிக்க
அலைக்கரங்களுக்கு
மட்டுமே புரியும்..

கோடி காலங்களின்
தேக்கங்கள்
குதூகலமாய்
குமுறலாய்
கொந்தளிப்பாய்..

பார்வைக்குப் பரந்திருக்கும்
வெறும் நீர்ப்பரப்பு அதன்
அமைதியிலும் ஆர்ப்பரிப்பிலும்
அர்த்தங்கள் ஆயிரம்..

பௌர்ணமி நிலவின்
பரிபாஷைகள்
நுரைகள் சுமக்க
நட்சத்திரங்களின்
நர்த்தனங்களுக்குத்
தாள லயம் போடும்
அலைக்கரங்கள்..

ஆழிப் பேரலையாய்
அள்ளிச் சுருட்டிக்
கொள்ளும் ஊழிக்காலம்
வரும்வரை
அசைவற்றுக் கிடக்கும்
பூமியின் செவியில் சங்கீத
சாரல்களைத் தெளித்துக்
கொண்டேஇருக்கும்
இனிமையான
இரைச்சல்களாய்..

எழுதியவர் : சிவநாதன் (29-Mar-16, 8:01 am)
Tanglish : alaikalin kalaigal
பார்வை : 2302

மேலே