ப்ரதிலிபியின் யாதுமாகி நின்றாள் போட்டி

நிலாக் காலமே ஆயினும் வானில்
உலா வரும் வின்மீன் கூட்ட நடுவில்
வாரியலை விரித்துப் போட்டது போலே
தாரகை வாலுடன் தனியே தெரியினும்

இருளைச் சுருட்டி இதயத்தில் பயத்தை
உருளையாய் உருட்டி உசுப்பி எழுப்பும்
எரிமலை வெடிப்பும் சிதறும் குழம்பும்
அரிய காட்சிகளே அவற்றினும் மேலாய்

பருவ வயதுடை மங்கை ஒருத்தி
கருவம் இல்லாத கட்டுடல் மூடி
உருவம் ஒளித்தும் ஒளிர்ந்திட வந்தால்
உருகிடும் உள்ளம் நெஞ்சத்தைக் கிள்ளும்.

படைத்தவன் நன்றாய் படைத்தான் உலகை
உடைத்து அதையேழு நாளிலே படைத்தான்
கடைத்தேறா மானிடன் தன்னைக் கண்டவன்
கடைசியில் மகுடமாய் பெண்ணைப் படைத்தான்.

அதனால் தானோ என்னவோ என்றும்
உதவிடும் ஆணின் அறிவினை விடவும்
பெண்டிரின் உள்ளுணர்வுகள் எப்போதும்
மண்டையில் அடித்தது போல் சரியாகும்.

ஆடவர் அனைவரும் அதிகப் பிரசங்கிகள்
ஆயிரம் மொழிகளில் அழகுடன் சொல்வதை
அலங்காரப் பூச்சு எதுவுமிலாமல் பெண்
பெருமூச் சொன்றிலே சொல்லி விடுவாள்.

எது எது எப்பொருள் எங்கே உள்ளது
அது அது அப்பொருளை பெண்களே அறிவர்
அதனால் அதனை அறியா ஆண்கள்
முதல் நாள் தொட்டே அவளை வெறுப்பார்.

அவனியிலே உள்ள அனைத்து சொத்தும்
பவளமோ பட்டோ தங்கமோ வைரமோ
முத்தான பெண்கள் இன்றேல் பாழென
சத்தான வரலாறு கூறிடும் சான்று.

பிறப்பில் ஒருத்தி பெண் ஆவது இல்லை
சிறப்புகள் சீராய் பெறுவதும் இல்லை
உருமாறியும் பின் உருவாகியும் பெண்
உரமாகிறாள் நமது உலக வாழ்விற்கு

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (30-Mar-16, 12:01 pm)
பார்வை : 123

மேலே