ஞான வாசிட்டம் - 14

விடுதலை அடைவதில் தீவிரன்
ஆயினன் இராமன் ..
அவனுக்கு பிரபஞ்சம்
எனும் நான் உற்பத்தி ஆன
விதம் சொல்கிறார் வசிட்டர்:

துரிய ஞானம் பெறுதற் பொருட்டு
படைப்பிற்கும் முன்னதாய்
பிரமத்தினின்றும் பிரிக்க முடியாத
நிலையான உண்மை எனும் "சத்" தும்
பூரண அறிதலும் உணர்தலுமான " சித்" தும்
எல்லையற்ற "ஆனந்த " மும் ,
இணைந்தே நினைவாகி
அதன் திருவிளையாடலாய்
சைதன்யம் ஆகி
பிரபஞ்சம் உருவானது ..
அதுவே "நான்" என்பது !
பின் அது பிரம நிலையாகி
எல்லாம் பிரமம் என்றானது !

சைதன்யம் யாதென்பதை , உலகங்கள் உருவாகும் காரணம் என்னென்பதை
ஆகாயத்தின் மகனாம் ஞான விண்மகன் காதை மூலமாய் வசிட்டரும் உரைக்கிறார்:

சத்தியம், பிரம்மம்,
ஆன்மா, பரம்
என்றெல்லாம் விளங்கும்
ஆன்மா
வேறொன்றாக தெரிவதுபோல்
சீவன் என்றானது !

பாவனைகளால்
அது மனம் ஆகிறது !
அது..
நினைக்கின்ற வண்ணமெல்லாம்
உலகத்தை உண்டாக்கிட
இல்லாத மனத்தினால்
இந்த ஜகம் உண்டாகிட
அதனால் பந்தம் சேர்ந்திடவும்
மோட்சம் விலகிடவும்
வழியென்று காண்!

விதைக்குள் ஒளிந்த விருட்சம்
காண்பவனுக்குள்
காண்பன எல்லாம் அடக்கம்
காண்பது பொருள்கள் யாவிலும்
காண்பவன் அடக்கம்
அவனன்றி வேறொன்றுமில !

மறையுடையோர் குலத்துதித்து
அறமும், தவமும்ஞானமும் கொண்டிலங்கி
வாழ்வாங்கு வாழ்ந்த ஆகாசத்தின் பிள்ளை..
விண்மகன் தன்னை
காலனால் (Time ) கவர முடியவில்லை..
உலகினை விழுங்கும் காலன்
விண்மகன் வாசல் சேர
தீயெனத் தடுத்தது
விண்மகன் தன ஆன்ம ஒளி..
காலனில் இழுத்தல்
கனவாகிப் போய்விட
யமனிடம் சென்று யோசனை கேட்டான்
காலனவன்..

கர்மத்தால் உண்டானதை
கர்மத்தின் துணை கொண்டே அழிப்பாய்
என்ற எமனது வாக்கினை
ஏற்ற காலன்
வின்மகனின் முன் கர்மவினைகளை
தேடி ஓடினான்
காரணங்கள் யாதுமிலா
ஆகாசத்தின் மகனுக்கு
கர்மங்கள் ஏதுமிலை என்றே தெளிந்து
எமனிடம் காலன் வந்தான் ..

காரணங்கள் இல்லாதவன்
கர்மங்கள் யாது செய்வான்
கர்மங்கள் அவனுக்கிலை
உன் காரியம் நடைபெற
வாய்ப்பு ஏதும் உனக்கிலை
..
என்றனன் யமனுமே!

காரணமற்றுப் போனவன்
கர்மங்கள் செய்வதில்லை
என்றாகி ..
முதலும் முடிவுமின்றி
அவனே பிரம்மமும்
ஆகிறான்..

இனி மனத்தின் செயலும்
அது அழியும் விதமும்
ஆன்மாவின் இயல்பும் உரைப்பேன்..
என்றனர் வசிட்டருமே!

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (7-Apr-16, 9:08 am)
பார்வை : 460

மேலே