வள்ளுவம் வாழ்வதெங்கே
பொய்மையும் வாய்மை இடத்து புரைநீர்த்து
தனக்குமட்டும் நன்மை செய்யின் எண்ணி
தீமை அலாதுபல சொல்லி
எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும்
மெய்பொருள்தனை யறியாமல் மயங்கி
மனம் சென்ற இடத்தான் செல்லவிட்டு
நன்றின்பால் உய்யதா அறிவுடன்
செல்லிடத்து சினம் கொண்டு வளர்த்து
அல்லிடத்தில் முதுகை அழகாய் வளைத்து
நகையும் உவகையும் மறந்து
சுய அன்புடன்
எல்லாம் தமக்கு உரியவராக இருந்து
என்புதோல் போர்த்த உடலாய்
இன்புற்று வாழத்தான் துடிக்க
அருளில்லா உலகில்
பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லையென இசைந்து
ஈதல் இசைபட வாழ மறந்து
ஈன்றாள் பசி காணாதிருக்க
சான்றோர் பழிக்கும் வினைகளுடன்
முதியோர் இல்லம் சேர்த்து
அற்றால் அளவறிந்து உண்ணாமல்
பெற்ற பலநோய்களுடம்
அளவறியா ஆயிரம் மருந்துடன்
உண்ணற்க கள்ளை உணில்உண்க
அரசாங்க கஜானாவை நிரப்பி
இலவசப் பிச்சைகள் கொள்ள
வள்ளுவத்தை மெல்ல வழக்கொழித்து
வள்ளுவம் வாழ்தெங்கே? ஏட்டிலா ?
மனப்பாட செய்யுளிலா?
ஆயிரம றமுண்டு ஆயிரம் திறனுண்டு
ஆயினும் வாழ்விங்கு கேள்விக்குறியாய்
வள்ளுவம் வாழதான் அன்றி
வார்த்தைகளில் மட்டும் வாசம் செய்யல்ல
வள்ளுவன் தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டில்
வள்ளுவம் காணாதவன் தமிழனல்ல
வழக்கு ஒன்று வேண்டும்
வானுயரப் புகழுடன் வாழ வேண்டும்
- செல்வா
பி.கு: தினமணி கவிதைமனியில் வந்தது