இனிய பிறந்தநாள் வாழ்துகள் நண்பா - வினோதன்

இனிய பிறந்தநாள் வாழ்துகள் நண்பா



சித்திரையில் பிறந்த
கார்த்திகையே !

இரண்டாம் வகுப்பு
நுழைந்தவுடன்
இருதயம் புகுந்த
நட்பின் இமயமே !

வியர்வை மாலைகள்
நெற்றியை வட்டமிட
நாம் - விளையாடிய
பொழுதுகள் விலையற்றவை !

வீட்டுக் கணக்குகள்
சேர்ந்தே செய்தோம்,
நம்மை பிரிக்க விதி போட்ட
கணக்கு தெரியாமல் !

அய்யனார் குதிரையின்
நிழலில் உட்கார்ந்து
தூக்குச் சட்டி கருவுற்ற
சினை மீன் சுவைத்தோம் !

கம்மாய்த் தண்ணீரை
குனிந்து குடித்துவிட்டு
உற்சாக பானம்
குடித்ததை சிரிப்தோம் !

மாசி மக நாட்களில்
சாமியை - மாலையிட்டு
ஏமாற்றும் பொம்மையை
கைதட்டி ரசிப்தோம் !

நம் சண்டைகளின்
சாட்சியாய் - இன்றும்
என் பின்பக்க மண்டையில்
குன்றொன்று உண்டு !

வேறு பள்ளியில்
குடிபுகுந்த எந்தன்
அடி மனதில் - நீ
வாழ்ந்தே வந்தாய் !

பதினைந்து வருடங்கள்
ஓடிக் களைத்தபின்
ஆர்குட் உதவியால்
அன்பை மீட்டேன் !

அதே நெருக்கத்தை
உணர்ந்த பின்புதான்
அறிந்தேன் - அன்பு
எப்போதும் - வேலிக்கும்
வேலிடிட்டிகளுக்கும்
அப்பாற்பட்டது என்பதை !

நட்பின் இலக்கணம்
நீயாகவே அறிகிறேன் !
சூழ்நிலை சூறாவளிகள்
அசைக்க முடிவதில்லை
உன் நட்பின் ஆழத்தை !

தன்மானம் என்பதை
நெஞ்சிலேந்தி - வீர
நடை போடுமுன்னை
காந்திகள் விலை பேச
விட்டதேயில்லை நீ !

உன் பாத்திரம் அறிந்து
எல்லா முகங்களுக்கும்
புன்னகை பூசிவிடும்
நடுநிலை நாயகனே !

ஈன்ற பெற்றோரை
பெருமைப் படுத்த
உறுதி பூண்டு - சீறுகிறாய்
சிறுத்தைப் புலியாய் !

நம்பிக்கை - உன்
ஆகப்பெரிய சொத்து !
ஆகாயத்தின் அளவை
அலகாக கொண்டதது !

தடைக்கற்களை உடைத்து
வெற்றிச் சிலைகள்
செய்வதில் வல்லவன் நீ !
உன் உளி தீட்டி வை
நிறைய வெற்றி தேவை !

நான் நம்பும் கடவுளும்
நீ நம்பும் இயற்கையும்
உன்னுடனே இருக்கட்டும்,
உன் வழித் துணையாக !

கபடி வீரனான உன்னை
ரைடு விடப் போகும்
உன் இல்லாளை
விரைவில் கண்டுபிடி !
கண்டறிந்து கரம் சேர் !

இன்னொரு நானாகவே
பரிமளிக்கும் - வரம்
தாண்டிய வண்ணம் நீ !

வெற்றிக் களிப்பின்
உச்சாணிக் கொம்பில்
நீ உட்காரப் போகும்
நொடிகளை எதிர்நோக்கி !

இணைந்தே பயணிப்போம் !
இணை கோடுகளாய்
ஏனைய ஆறுலகமும் !

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா !

எழுதியவர் : வினோதன் (15-Apr-16, 4:49 pm)
பார்வை : 155

மேலே