மண்வாசனை

தென்படும் அருவியின் தீர்த்தத் துளிகள்
==தேன்தரும் பூக்களின் திவ்விய தரிசனம்
கன்றுடன் பசுவும் கவிக்குயில் இசையும்
==களைகளாய் வாழும் கற்சிலை ஓவியம்
குன்றிய நாகரீ கத்தின் வளர்ச்சி
==குன்றா வறுமை கொண்டிடும் எழுச்சி
ஒன்றிய கிராமத் தின்காற் றலையில்
==உலவிடும் பழமை கலந்தமண் வாசனை.

தெருக்களில் தினசரி திரிந்திடும் யாசகர்
==திருக்கரந் தனில்திரு வோடுடன் வறுமையின்
கருவினை உயிர்பெற வைத்திடும் வெறுமை
==கண்களில் பரிதா பத்தின் கோலம்
உருவகப் படுத்திடும் வகைவகை மனிதரில்
==உலவிடும் சின்னமாய் உலகினில் நம்மவர்
இருப்பதில் தருகிற அவமா னம்தனில்
==இயற்கையாய் கமழுதெம் மண்வா சனையே.

மஞ்சள் கைப்பை மனிதரைக் காண்கையில்
==மாநகர் உணரும் மண்வா சனைதனை
கொஞ்சமும் தயக்க மின்றி நாவது
==கூசா மல்தான் சொல்லிக் காட்டும்
அஞ்சல் அலுவல கம்தனில் முத்திரை
==ஓட்ட எச்சில் தடவிடக் கண்டால்
நெஞ்சை நிமிர்த்தி நீயே எங்கள்
==நிலத்தின் மண்வா சனைஎனும் பாரீர்.

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Apr-16, 2:37 am)
பார்வை : 133

மேலே