ரகசியம்

பள்ளி ஆண்டுவிழா...
பள்ளியிறுதி அரசுதேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு PROFICIENCY பரிசு வழங்கப்பட்டது. இந்த பள்ளியில் புதுமையா ஒரு PERFORMER பரிசும் அறிவிக்கபட்டிருந்தது. அது காலாண்டு தேர்வுமுதல் கடைசி ஆண்டு இறுதிதேர்வுக்குள் நல்ல முன்னேற்றம் காட்டி பெரும் மதிப்பெண் வித்தியாசத்தை காட்டிய மாணவ மாணவிகளுக்கு பிரத்யேக பரிசு.
இந்த பரிசை வென்ற அந்த மாணவன் ஊரின் பணக்காரனின் மகன். பள்ளியின் நிர்வாகியும் அவர் தான். தாயில்லா குழந்தை என்று செல்லமாக வளர்ந்தவன். சிறுவயது முதலே குறும்பும் சேட்டையும் அதிகம். சில வகுப்புகள் இரண்டு ஆண்டு படித்தும் கூட பாஸ் ஆகாமல் அப்பாவின் சிபாரிசால் அடுத்த வகுப்பிற்கு போனதுண்டு.... யாரும் அவனை அதட்டியதும் இல்லை கடிந்ததும் இல்லை. நினைத்ததை செய்வான்... சரி தப்பு என்று அவனுக்கு ஒன்றும் கிடையாது.
காலாண்டு தேர்வில் மூன்று பாடத்தில் தோல்வி... இரண்டில் இதோ அதோ என்று வெற்றி... ஆனால் அரசு தேர்வில் எண்பதேட்டு விழுக்காடு வாங்கி எல்லோரையும் ஆச்சர்யப் படுத்திவிட்டான். அவன் பெயர் அறிவிக்கப் பட்டதும் ...மேடையை நோக்கி நடந்தான்.
அவன் நடையில் ஒரு மாற்றம் தெரிந்தது.
அவன் மேடையில் ஏறி அந்த பரிசை வாங்கையில் அதிசயிக்காதவர்கள் இல்லை. இவனா? என்று யாவரும் திறந்த வாயை மூடவே இல்லை. அவன் தந்தைக்கோ பெருமை. ஓயாமல் கை தட்டிக்கொண்டே இருந்தார். கடைசியில் பேசுகையில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் எல்லார்க்கும் ஒரு தந்தையாய் குரல் தழுதழுக்க நன்றி கூறினார்.
அந்த மாணவன் தன் பரிசை எடுத்துக்கொண்டு நேரே அவன் கணக்கு டீச்சரிடம் வந்தான். அந்த பரிசை அவர் கையில் கொடுத்து...’ பர்ஸ்ட் சக்செச்ஸ்’ என்று தன் கட்டைவிரலை காட்டினான்.
அந்த ஆசிரியையோ புன்முறுவலோடு ‘ஆல் தி பெஸ்ட்’ என்றார்.
அந்த மாணவன் இந்த அளவிற்கு மாறியதற்கும் இந்த பரிசை பெறுமளவிற்கு தன்னை மாற்றிக்கொண்டதும் ஒரு ரகசியம். அந்த ரகசியம் அவனும் அந்த கணக்கு ஆசிரியை மட்டுமே அறிந்த ஒன்று.
..........................................

‘உடம்பு நெருப்பா கொதிக்குது இஸ்கூலுக்கு போக வேணாம் னா கேக்குரானா’’. கிழவி புலம்பினாள். ‘அப்படி ஒன்னும் அதிக ஜுரம் இல்லை படிக்கற புள்ளையை ஏன் நிறுத்தர... முடியாட்டி அவனே வந்துடுவான்’. அப்பா வகாலத்து வாங்கினார்.
எதையும் காதில் வாங்காது சீருடையை அணிந்துக்கொண்டு கிளம்பினான். படிப்பு-பள்ளி எல்லாம் ஒரு சாக்கு தான். அவன் அவளை பார்க்க வேண்டுமே. ஒரு நாள் பார்க்கவில்லை என்றாலும் தூக்கம் கொள்ளாதே. இன்று அவன் இதயத்தை எழுதி வைத்த கடிதத்தை அவளிடம் கொடுக்க வேண்டுமே. ஒருமுறை அந்த கடிதத்தை படித்துப் பார்த்தான். ஒரு பேனா எடுத்து, ‘”உடனடி பதிலுக்கு காத்திருக்கிறேன்” என்று கடைசியில் இருந்த வரியில் ‘உடனடி’ என்பதை அடித்துவிட்டான்.. “பதிலுக்கு காத்திருக்கிறேன்” ... ஒருமுறை படித்து பார்த்துக் கொண்டான். சட்டைப்பையில் வைத்துக்கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு விரைந்தான்.
அவள் அவனுடைய கனவு. அவளை பார்க்கையில் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு அவனுக்குள் ஏற்படும். ஒவ்வொரு முறை அவளை நினைக்கையிலும் மனது சிறகடித்து மெலிதாய் மேலே பறப்பதைப் போல உணர்வான். ஏன் இப்படி என்று தெரியவே இல்லை. இத்தனைக்கும் தனிமையில் பார்த்ததில்லை. கண்களும் கூட சந்தித்ததில்லை. இந்த உணர்வு எனக்குமட்டும் தானா இல்லை அவளுக்கும் உண்டா? அது கூட தெரியாது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் பள்ளியில் சேர்ந்தாள்.
எத்தனை முறை பார்த்தாலும் அன்று பூத்த ரோஜாப்பூவாய் தெரிந்தாள்.
சில நேரம் தன்னை தாண்டி செல்கையில் தென்றலாய் உணர்வான்.
பல நேரம் வகுப்பறையில் சூரியனை போல ஜொலித்து நிற்பாள்.
அவளை பார்த்துவிட்டால் கண் இமைக்கிறதா என்று கூட அவனுக்கு தெரியாது.
கடிதத்தை கொடுக்க வேண்டும், அது மட்டுமே அவன் மனதில் இருந்தது. அதன் பின் விளைவுகளை அவன் யோசிக்கவே இல்லை. பள்ளியை சேர்ந்ததும் நேரே சென்று கடிதம் வைத்திருந்த நோட்டுபுத்தகத்தை அவள் கையில் குடுத்தான். பதிலுக்கு எதிர்பாராது விருட்டென்று அவ்விடத்திலிருந்து அகன்றான்.
மறுநாள் கணக்கு ஆசிரியை அந்த மாணவனை உணவு இடைவேளையில் கூப்பிட்டு காலையில் கூடும் பிரார்த்தனை கூடத்திற்கு சென்றாள்.
நேராக விஷயத்தை பேசினாள்.
‘உங்க வீட்ல எத்தனை பேர் படிச்சவங்க?
தயங்கி தயங்கி மெதுவே யோசித்து சொன்னான். யாரும் இல்ல நான்தான் முதல்ல இவ்ளோ படிக்கறேன்.
ம்....உனக்கு படிச்சு என்னவாகனும்? டக்கென்று பதில் வந்தது.... வக்கீல்.
நீ லெட்டர்ல கேட்ட கேள்விக்கு பதில் இதுதான்.
அவன், ஒன்றும் புரியாமல் குழம்பினான்.
“என்மீது உனக்கு தனி ஈடுபாடு இருப்பது எனக்கு தெரியும். என் பக்கத்தில் வந்து நிற்பதும்... தூரத்திலிருந்து என்னை பார்ப்பதும்... பள்ளி விட்டு போகையில் என்னை பின்தொடருவதும்... எல்லாமே எனக்கு தெரியும். நான் உன் அக்கா மாதிரி அம்மா மாதிரி ன்னு சொல்ல வரல. நான் நான்தான். ஒரு கணக்கு ஆசிரியை. உன்னை எனக்கு பிடிக்கும், ஒரு மாணவனா மட்டும் பிடிக்கும். உன் வயதில் இப்படிபட்ட எண்ணங்கள் வருவது இயற்கை தான். ஆனா அதையே வாழ்க்கை ன்னு நெனைக்க கூடாது. இந்த வயது படிக்கற வயது. படித்து பட்டம் பெற்று சமூகத்தல ஒரு நல்ல மனிதனா வரணும். எனக்குகூட வக்கீல் ஆகணும் னு ஆசை ஆனா குடும்ப சூழல் ஆசிரியை ஆகிட்டேன். உன் திறமைக்கு நீ வக்கீலுக்கு படிக்கலாம். உன்னுள் இருக்கும் திறமையை நீதானே உணரனும். பணக்கார திமிர் என்று எல்லோரும் பேச விடலாமா? பிஞ்சுல பழுத்தது ன்னு ஊர் ஏச விடலாமா? உன்னை கேலி செய்தவர்களையும் ஒன்றுக்கும் உதவாதவன் ன்னு சொன்னவங்கள முன்னாடி நீ சாதித்து காட்ட வேண்டாமா? கல்விதான் ஒருவனை சீர்படுத்தும்... செம்மைபடுத்தும். படித்து பட்டம் வாங்கிட்டு வக்கீலா என் முன்னே வந்து நில்லு... அப்பவும் இதே நெனப்பு உன் மனசில இருந்தா அப்போ இதற்கான பதில நான் தரேன்’ என்றாள்.
‘நீ வாழ்க்கையில் சாதிக்கும் வரை இந்த விஷயம் உனக்கும் எனக்கும் இடையே ரகசியமாகவே இருக்கட்டும்’ என்று முடித்தாள்.
எழுந்து சென்று பாதி திறந்திருந்த கதவை முழுமையாக திறந்தாள்.
திரும்பி அந்த மாணவனை ஒருமுறை பார்த்தாள். வெளிச்சம் கண்கூசியது அவனுக்கு.... அவள் பின்னே ஒளி... வட்டமாய் அவனுக்கு தெரிந்தது. தன் வாழ்வின் லட்சியம் புரிந்தது.
மனதில் இதுவரை நெளிந்துக் கொண்டிருந்த பச்சைப்புழு இன்று பல வண்ணம் கொண்டு வண்ணத்து பூச்சியாய் சிறகடித்தது. புத்துணர்வு கொண்டவனாய்... எழுந்து நடந்தான்.
அவன் நடையில் ஒரு மாற்றம் தெரிந்தது.

எழுதியவர் : சுபா சுந்தர் (19-Apr-16, 7:54 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
Tanglish : ragasiyam
பார்வை : 646

மேலே