சோடியச் சூரியன்கள்

அந்த நேரத்தில்
பெரிய பெரிய வீதிகளும்
பெருச்சாளிகளின் வீடாகியிருந்தது
அங்கே நான் மட்டும்
நடந்து சென்று கொண்டிருந்தேன்
பெருசாளிகளுக்குள் ஏதோ சலனம்....
வீதியின் சந்திகளில்
ஆங்காங்கே
இரவுக்கு இரங்கலிடும்
சோடியச் சூரியன்கள் ....
அதற்குள்ளும் நடந்து
வெளியேறினேன்
எரியாத என் உடலுடனும்
எரிந்து கொண்டிருக்கும் மனதுடனும்....
வீதிகளின் வேறுச்சோடிப்பை
புறக்கணித்து தொடர்ந்தேன்....
அருகில் ஒரு நாய்
என்னை கடிக்க வருகிறதோ??
இல்லை, அது மனிதர்கள்
போல் இல்லை....
நான் நடந்தால்
நாயும் நடக்கிறது
நான் நின்றால் அதுவும்
நிற்கிறது....
புரியவில்லை
நாய்க்கு நான் துணையா?
எனக்கு அந்த நாய் துணையா??
தார் சாலையின் இருமைக்கு
ஜீவனாம்சம் அளித்திருக்கும்
வெள்ளை கோடுகளுடன்
நடையை தொடர்ந்தேன்
எதிரில் ஒரே ஒரு
கார் மட்டும்....
தெரியவில்லை ,
அதுவும் ஏதாவது
ஒரு இலக்கை நோக்கி
முன்னேறிக்கொண்டிருக்கலாம்.
ஆனால், என்னை போல் இல்லை
வீட்டுக்கு வந்த உறவினர்களுக்கு
பால் வாங்க,
பதினொன்றரை மணி இரவில்......