12 பிவி பாகம்-2

இரவு சாப்பாடு முடிந்து எல்லோரும் தூங்க சென்றனர். ரவி சாரை கெஞ்சி எப்படியோ மேல் பர்த் வாங்கி ஏறிவிட்டாள் பிவி. படுத்தாளே தவிர அவள் மனம் முழுதும் நாளை முதல் போகபோகும் இடங்களின் கனவு தான். அவளுக்கு எதிர் பர்த்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் வேதாவிடம் ரவி சார் ‘வேதா டேக் கேர் ஒப் பிவி’ என்று சொல்லிவிட்டு போனார்.

எதிரே இருந்த வேதாவிடம் பிவி பேச்சு கொடுத்தாள். அக்கா நாளைக்கு சீதல்கஞ் தானே போறோம் என்று கேட்டாள். வேதா "இல்லை பிவி. பர்ஸ்ட் மணாலி 2 நாள் அப்புறம் குலு வேளி 2 நாள் பிப்த் டே தான் சீதல்கஞ். அது லாஸ்ட் 2 டேஸ்”. ம்ம்ம் என்றவாறு பிவி தன் கற்பனையை தூண்டிவிட்டாள்.

குலு மணாலியை விட அவளை சீதல்கஞ் வெகுவாக கவர்ந்தது. அங்கே ஹைகிங் ஹில் க்ளைம்பிங் ராப்டிங் என்று பல சாகசங்கள் இருக்குமென்று ரவி சார் சொல்லியிருந்தார். அவள் சீதல்கஞ் கனவில் கண்ணயர்ந்து உறங்கிப்போனாள்.

மறு நாள் முழுதும் ரயிலில்.... இரவு டில்லி ரயில் நிலையம் இறங்கி சாப்பிட்டுவிட்டு பஸ் ஏறினர். இரவு முழுதும் பஸ் காலையில் பிவி கண் விழித்தபோது அந்த இயற்கை காட்சிகள் அவளை கண் சிமிட்ட விடவில்லை.

பனி படர்ந்த சிகரங்கள் வண்ணமயமான பூந்தோட்டங்கள் ஓடையாய் தொடங்கி ஆறாய் ஓடும் சிறு சிறு நீர்நிலைகள் ஆப்பிள் தோட்டங்கள் மீதி நிலங்களும் பச்சையாய் பசுமையாய் படர்ந்து இருந்தன. சில்லென்ற காற்றும் அந்தச் சூழலும் பிவிக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லோரும் தூங்கி கொண்டு பயணம் செய்ய அவள் மட்டும் பஸ் செல்லும் பாதை வழியே இயற்கையை ரசித்தவாறே பயணித்தாள்.

மனாலி 2 நாட்களில் எத்தனை இடங்கள்? சொலான் வேலி, ஹிடிம்பா கோயில், மனாலி சன்க்டியோரி, பிரிகு ஏரி என்று இயற்கையை ஒட்டு மொத்தமாய் ரம்மியமாய் ரசித்தனர். அங்கிருந்து குலு சாலை வழியாவே சென்றனர். அங்கும் வானமும் பூமியும் மெய்மறந்து சிரித்து கை கோர்த்து விளையாடிக்கொண்டிருந்தன. கசொல், நக்கர், சென்றுவிட்டு கடைசியில் கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க் சென்றனர். இதை விட சொர்க்கம் ஏதும் உண்டோ என்று நினைக்குமளவிற்கு இயற்கையின் படைப்புகள் ஓங்கி இருந்தன.

மற்ற பிள்ளைகளின் உற்சாகமும் பேச்சும் துள்ளலும் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. ஆனால் பிவி சீதல்கஞ் அனுபவங்களை எதிர்நோக்கி மட்டிலா உற்சாகத்துடன் காத்திருந்தாள்.

ஐந்தாம் நாள் விடியுமுன் சீதல்கஞ் பஸ் நிலையம் அடைந்தனர். தனிமையான ஊர் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை. பஸ் நிலையத்தை அடுத்து ஒரு பஜார் இருந்தது. அங்கு கடைகளும் சில பல சுற்றுலா பயணிகளும் இருந்தனர். குலு மணாலியை விட ஒதுக்கபுறமான ஒரு ஊர். ஆனால் அதே இயற்கை வளம் சிறு சிறு குன்றுகளும் ஏரிகளும் தோட்டங்களும் கண்ணை கவர்ந்தன. பெரிய வீடுகள் என்று எதுவும் இல்லை. இருக்கும் வீடுகளும் ஆங்காங்கே இருந்தன. ஒவ்வொரு வீட்டிற்கும் நடுவே தோட்டமும் நீர்நிலையும் ஏரிகளும் குன்றுகளுமே இருந்தன.

பஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்தார்கள். பிவி வானத்தை தொட முயற்சிக்கும் சிகரங்களை பார்த்தவாறே நடந்தாள். திடீரென்று பின்னிருந்து ஒரு பலமான கை அவளை பற்றியது. பற்றிய கை ஒரு ஆணுடையது. மேக்னா மேக்னா என்று ஏதோ முனகல் கேட்டது. திரும்பி பார்த்தாள், வெள்ளை தாடியுடன் ஒரு வயதானவர் பித்து பிடித்தவர்போல இருந்தார். அவர் வாயிலிருந்து ஒரே ஒரு சொல் மேக்னா என்பது மட்டும் தான் வந்தது. பிவி வியப்பாய் அவரை பார்த்தவாறு நின்றாள் ஆனால் ரவி சார் ஓடி வந்து அவரை விளக்கினார். பிவியை தனதருகே இழுத்துக் கொண்டார்.

இத்தனைக்குள் ஒரு நடுத்தர வயது கொண்டவர் ஓடி வந்தார். “சாரி சார். திஸ் இஸ் மை பாதர். ஹி லாஸ்ட் ஹிஸ் சென்செஸ் ஆப்டர் வி லாஸ்ட் அவர் கர்ல். வி ஆர் பிரோம் சூடபள்ளி இன் ஆந்திரா. திஸ் இஸ் மை டாட்டர்” என்று அவர் கையில் வைத்திருந்த போட்டோவை காட்டினார். பிவி எட்டி அதை பார்த்தாள். காணாமல் போனதாக சொல்லப்படும் பெண்ணின் போட்டோ. சின்ன பெண் தான் வெள்ளை கலர் ஸ்கிர்டும் ஊதா கலர் டாப்சும் அணிந்திருந்தாள். அந்த முகத்தையே பிவி பார்த்துக்கொண்டே இருந்தாள். அவர் மறுபடியும் “சாரி சாரி’ என்றவாறே தன் தந்தையை ஏதோ தெலுங்கு பாஷையில் பேசிக்கொண்டே அழைத்து சென்றார்.

“’பாவம் சின்ன பொண்ணு எங்கே போனாளோ என்ன ஆனாளோ” என்று யாரோ சொல்வது பிவி காதில் விழுந்தது. மெதுவாய் அவ்விடத்தை விட்டு எல்லோரும் கிளம்பினர்.
தொடரும்...

எழுதியவர் : சுபா சுந்தர் (26-Apr-16, 8:35 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
பார்வை : 109

மேலே