பிரபஞ்சம்
இப் பேரண்டத்தின்
பெரு ஒளி அது. இடையறாது
சுழன்று கொண்டும் எரிந்து
கொண்டும் இருந்ததது.
அவ்வப்போது வியர்த்து
வடிவது போலாகவும்
எச்சில் துப்பிக் கொள்வது
போலாகவும், மீன் தன் செதில்களை
உதிர்த்து வீசுவது போலாகவும்
தன் துகள்களை உதிர்த்துக்
கொண்டிருந்ததது...
ஆற்றலை பெயர்த்து மழையை
ஈர்க்க தொடங்கிய ஏதோ
ஓர் துகளொன்றின்
காய்ந்த நிலப்பரப்பில்
கசிய தொடங்கிய ஈரம்
எதையோ துளிர்க்கச் செய்தது..
எதையோ இருகச் செய்தது...
யாவற்றிலும் ஏதோ ஒன்று
முளைக்கவும் பூக்கவும்
காய்க்கவும் கனியவும்
உருப்பெறவும் உயிர்பெறவும்
தொடங்கியிருந்தன...
அவை சுவாசிக்க தொடங்கியிருந்தன;
ஓடத் தொடங்கியிருந்தன;
கத்தத் தொடங்கியிருந்தன;
சிறகடிக்கத் தொடங்கியிருந்தன;
வேட்டையாடத் தொடங்கியிருந்தன;
யாவற்றினும் மேலாக ஏதோ
ஒன்றில் விசேஷம் கண்ட
பிராணியொன்று தன்னிலை
உணர்த்தலின் கோட்பாடுகளில்
எவற்றிலும் தனித்துவம் கண்டிருந்த
பொழுதொன்றில்
அப்பெரு வெளியின் ஓர் பெரு
மரத்தின் ஒற்றை இலையின்
கூர்நுனியில் அமர்ந்திருந்த மீச்சிறு
கால்களை உடைய பூச்சியொன்று
அதன் இதழ்களில் சுரக்கும்
எச்சில் திராவகத்தால் அப்பெரு
மரத்தைஅரிக்கும் வல்லமை பொருந்தியிருந்தது...