தேனிலவு
தேனிலவு – சிறுகதை – சபீனா
---------
மெட்ராஸ் நகரத்தின் பரபரப்பான வேப்பேரி.தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் அமைத்து கொடுத்த அடுக்கு மாடி குடியிருப்பு .அது ஒரு சிறிய பிளாட்.ஒரே ஒரு படுக்கை அறையும்,சிறிய ஹாலும்,மிக சிறிய கிச்சென்னும் உள்ள 10 X 10 வீடு .இது தான் நம் கதை களம் .
அங்கே குடி இருக்கும் சுந்தரம்பாள்,ராஜரெத்னம் தம்பதியர்,இவர்களின் பிள்ளைகள் பிரேம்,பிரியா ….
இவர்களுடன் அந்த வீட்டு மருமகள் சத்யா…… அவளை பற்றி சொல்லாமல் கதைக்குள் நுழைய முடியாது .அவள் பெற்றோர் வரிசையாக மூன்று ஆண் குழந்தைகளுக்கு பின் ஆசை பட்டு,எட்டு வருடம் கழித்து தவம் இருந்து பெற்ற பிள்ளை.எட்டு ஆண்டுகள் கழித்து பிறந்த ஒரே பெண் வாரிசு.நடுத்தர வர்க்கம்தான் என்றாலும் இப்போது மூன்று அண்ணன்களும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டதால் இவள் கேட்டு யாரும் இதுவரை எதையும் இல்லை என்று சொன்னதில்லை . அவள் அண்ணிகளுக்கும் இவளையும்,இவள் செய்யும் குறும்புகளையும் ரொம்ப பிடிக்கும். இவள் வயதில் சிறியவள் என்பதாலும், வீட்டிலேயே முதன்முதலில் மேற்படிப்பு படிப்பவள் என்பதாலும் , ஹாஸ்டெலிலேயே இருந்து விட்டு விடுமுறைக்கு மட்டுமே வீட்டுக்கு வருவதாலும் எல்லாருக்குமே அத்தனை செல்லம் .
இனி கதைக்குள் போவோமா ?
அன்று காலை முதலே ,சென்னையின் பரபரப்புக்கு சற்றும் குறையாத மாமியாரின் பரபரப்பை பார்த்து கொண்டு தான் இருந்தாள் சத்யா .மாமனாரிடம் ” என்னங்க! பொண்ணு வர போறா,மச மசனு நின்னுகிட்டு இருக்கிங்க.போய் மல்லி பூ வாங்கிட்டு வந்து பிரிட்ஜெல போடுங்க , வித்து முடிச்சிட்டு கிளம்பிற போறா பூக்காரம்மா …..”
அடுத்து சமையலறையிலிருந்து குரல் கேட்டது, ” தோ பாரு….இப்போ தானே சொல்லிட்டு போனேன், வாழக்கா பஜ்ஜிக்கு மெலிசா சீவுனு .மாப்பிள்ளைக்கு மொத்தைமொத்தையா இருந்தா பிடிக்காதாம், அப்படியே முடிச்சிட்டு பால் கொழுக்கட்டை பண்ணிடு , பிரியா சொன்னா…அவருக்கு ரொம்ப பிடிக்கும்னு .”
டிவி பார்ப்பதும் , விரிப்பை சரி செய்வதும் , கிச்சென் உள்ளே போவதும் வருவதுமா இருந்தார். அவரால் ஒரு இடத்தில் உக்கார முடியவில்லை .
சற்று நேரம் கழித்து ” அம்மா முடுச்சிட்டேன், நைட்டுக்கு சப்பாத்தி குருமாவாம்மா ? என்ன பண்ணட்டும் ? வேலைக்காரி.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம், சாயங்காலம் காபி டிபன் மட்டும் முடுச்சிட்டு, உடனே கிளம்பி சினிமாக்கு போய்டுவாங்க, நைட்டுக்கு வெளியே பாத்துக்குறோம்னுட்டாங்க. நீ எப்பவும் போல இட்லி ஊத்திட்டு “ என்று சொல்லவும், மாமனார் பூ வங்கி கொண்டு உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.
” வந்துட்டிங்களா ! மாப்பிளைக்கு இந்த மாதம் தான் பிறந்த நாளாம்.பிரியா சொன்னா. புரஷவாக்கம் மதர்ஷா போய் ஒரு சூட் எடுக்கணும் . நம்ப வீட்டு மாப்பிள்ளை. நம்ப பொண்ணே அசந்து போற மாதிரி எடுக்கணும் , வெல எவ்ளோனாலும் பரவாயில்லை . அப்படியே இந்த ப்ரியாவுக்கும் இரண்டு ஜீன் பான்ட் , இரண்டு மிடி ஸ்கர்ட்டும் , அதுக்கு டாப் சேர்த்து எடுக்கணும்”.
அவர் திரு திரு என்று விழித்த படியே….. “அதெல்லாம் அவ போடுவாளா ? அதுவும் இல்லாம இப்போ தானே கல்யாணம் எடுத்தோம் ? திரும்பவும் எதுக்கு இப்போ இவ்வளோ செலவு ? புரிஞ்சு தான் பேசுறியா ?”
அதற்கு அவள் , “ஏன் சொல்றேன்னா மாப்பிள்ளைக்கு மாடர்ன் டிரஸ் தான் புடுச்சி இருக்காம். உங்க பொண்ணு தான் சொன்னா. அதுவும் இல்லாம அடுத்த வாரத்துல அவங்க கிளம்பி ஹனி மூன் போறங்களாம் ஊட்டிக்கு சின்ன சிறுசுங்க.நாலு இடம் போவாங்க ,வருவாங்க.ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டி அங்க இங்கனு.இதெல்லாம் இந்த காலத்து பசங்களுக்கு சகஜம் தானே . இப்போ சந்தோசமா இருக்காம எப்போ சந்தோசமா இருக்க போறாங்க ? இதுக்கு போயி கணக்கு பாத்துட்டு ….நம்ப பொண்ணுக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறோம். நமக்கு இருக்கறதோ ஒரே பொண்ணு. போய்ட்டு போகுது விடுங்க . ஒவ்வொரு மாசமும் ஒரொரு செலவு வந்து கிட்டு தானே இருக்கு. இதுல மிச்சம் பிடித்து தான் கோடிஸ்வரர் ஆக போறோமா ? அவளுக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறோம் சொல்லுங்க .அவ சந்தோசம் தான் நமக்கு முக்கியம் “ என முடித்தாள்.
“நீ சொன்னா எல்லாம் சரியாய் தான் இருக்கும் ” என்று ஆட்டோ பிடிக்க சென்றார் ராஜரெத்னம் .
பார்த்துகொண்டு இருந்தசத்யாவுக்கு சிரிப்பதா ? அழுவதா என்றே புரியவில்லை.
அவள் தன் ஐந்து மாத குழந்தையை எடுத்து கொண்டு குளிப்பாட்ட சென்றாள்.
குளிப்பாட்ட குளிப்பாட்ட நினைவுகள் பின் சென்றன.
மூன்று வருடங்களுக்கு முன் ,
சத்யாவுக்கு நேற்று தான் திருமணம் முடிந்து இருந்தது. புதுத் தாலியின் பொலிவோடு சேர்த்து முகமும் மின்னியது .மகிழ்ச்சியின் மிச்சங்கள் முகத்தில் ஒட்டி கொண்டு இருந்தது.முந்தைய இரவில் கணவன் “ மிடி,டாப் ல குஷ்பு மாத்ரி இருக்கே …. ” என காதோரத்தில் கிசுகிசுத்ததை எண்ணி சிரித்த படியே வெளியே வந்தவளை மாமியார் அழைத்தார்.” சத்யா வா இங்கே.நேத்து ராத்திரி புடைவைல தானே உள்ள போனே.இது என்ன …கந்தர கோலம் ….தலையணைக்கு உறை போட்டு விட்ட மாதிரி ….” திடுக்கிட்டாள் சத்யா.”இல்ல அத்தே. இதே போட்டு பழகிட்டேனா…….”
“என்னத்த பழக்கமோ போ, அதெல்லாம் உங்க வீட்டோடு விட்டுடு .உங்க அம்மா இதெல்லாம் சொல்லி குடுத்து வளர்கல போலிருக்கு . இந்த காலனில எங்களுக்குன்னு ஒரு பேரு இருக்கு.சரி .. சரி.. போய் துணிய துவச்சி போடு…. “
ஒன்றும் புரியவில்லை சத்யாவுக்கு
கல்யாணம் ஆனா மறு நாளேவா ? . மீண்டும் குரல் கேட்டது ” உங்க புருஷன் துணி தான் , என்ன யோசனை ,வாங்க இங்க ” இது நாத்தனார் பிரியாவின் குரல் . துணி துவைத்தே பழக்கமில்லை. இது வரை காலேஜ் , ஹாஸ்டல் , லாண்டரி என்று இருந்தவள் .தான் தன் வீட்டில் செல்ல மகள் என்றலும் , இனி வேலை செய்து தானே ஆக வேண்டும் மணமாகி விட்டதல்லவா என்று தனக்கு தானே சமாதானம் சொல்லி கொண்டு துவைக்க ஆரம்பித்தாள். மொட்டை மாடியில் துணி காய போட போனவளுக்கு உச்சி வெயில் சூடு மண்டையிலும் குதிகாலிலும் தாக்கியது . அதே நேரத்தில் மனதுக்குள் சூடாய் ஒரு கேள்வி. ” மொத நாளேவா இப்படி சொல்வாங்க ? “.
திருமணத்துக்கு ஊரிலிருந்து வந்து இருந்த நெருங்கிய உறவினர் கூட்டம் இன்னும் வீட்டில் மிச்சமிருந்தது . அதில் ஒரு புது மண தம்பதியர் . இவர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன் தான் அவர்களுக்கு திருமணம் ஆனதாம். சுந்தரம்பாளின் அக்கா மகள் .
தன் அக்கா மகளையும் , மருமகனையும் உள்ளங்கையில் வைத்து தாங்கினார் சுந்தரம்பாள் . புது துணி என்ன ? புது கொலுசு என்ன ? என சீராட்டி பாராட்டியதோடு நில்லாமல் ,ஒரு படி மேலே போய் ஒரு வாடகை டாக்ஸியை புக் செய்து ,அவர்களை மகாபலிபுரம் அனுப்பி வைத்தாள். கடைசி நேரம் வரை காத்து இருந்தாள் சத்யா, நம்மையும் அவர்களோடு சேர்த்து கிளம்ப சொல்வார்களோ ? என்று.
ஆனால் அந்த வீட்டில் யாரும் இவளை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.ஏன்?அவள் கணவனே கூட அதை பெரிதாய் எடுத்து கொள்ளவில்லை.ஆனால் இவளுக்கு மட்டும் ஏனோ ஏமாற்றமாய் இருந்தது.”ஏன் நாங்க எல்லாம் புதுசா கல்யாணம் ஆனவங்க இல்லையோ ? இல்ல நாங்க ஏறினா அம்பசிடர் நகராதா ? பொறுக்க மாட்டாமல், கணவனிடம் கேட்டே விட்டாள் .
“யேய் ! என்ன நீ?அவங்க எல்லாம் எப்போவாவது ஊருலருந்து வீட்டு விசேஷத்துக்கு வரவங்க”,நம்ப அப்படியா ? இங்க,இதே மெட்ராஸ்ல தான் இருக்க போறோம் , மகாபலிபுரம் எங்கயும் ஓடிடாது . அப்பறமா பாத்துக்கலாம்” என்றான் பிரேம் .
அன்றே தானா வர வேண்டும் அந்த மூன்று நாட்கள் .ஒரே வயிற்று வலி. ஊர் சுற்றிய கூட்டம் வேறு வந்து விட்டிருந்தது.
மாமியார் ” சத்யா . எல்லாருக்கும் தோசை ஊற்று ” . ” அத்தே ! “ எனக்கு கொஞ்சம் முடியல”என்றாள். பதிலில் தேள் கொட்டியது .
“ புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு எல்லாம் இதே வேலை . ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லி தட்டி கழிக்கணும். புள்ளைய பெத்துட்டா மட்டும் போதாது , நல்ல பழக்க வழக்கம் சொல்லி குடுத்து வளக்கணும் , எப்படியோ எல்லோருமா சேந்து நம்ப தலைல கட்டிடாங்க ” என்றாள்.
அதற்கு மேல் ஏதும்தோன்றாது , உடனே எல்லாருக்கும் தோசை ஊத்த ஆரம்பித்தாள் .ஊத்தும் போது நிற்க கூட முடியவில்லை. முடித்து விட்டு கட்டிலில் வந்து அமர்ந்தாள்.
பெட் ரூமில் ஒரே ஒரு கட்டிலுக்கு மட்டுமே இடம் இருக்கும். அதை தான் இவர்களுக்கு தாராளமாக விட்டு தந்து இருந்தார்கள் அந்த வீட்டு பெரியவர்கள். ஆனாலும் அனைவருடைய படுக்கை விரிப்பு, தலையணை எல்லாமே அந்த கட்டிலில் தான் இருக்கும். அவர்கள் அதை எடுத்து சென்றால் தான் , இவர்கள் படுக்க இடம் கிடைக்கும். வெளியே புது மாப்பிளை பெண்ணோடு கும்பலே கேலியும் கிண்டலுமாய் சிரித்து விளையாடியபடி இருந்தது. இப்போது எல்லாம் படுப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அந்த கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள் சத்யா.
பிரேமுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, “ பிரியா ! அண்ணிக்கு படுக்கணும் ….பெட்ஷீட் எடுத்துட்டு போயேன் . பதில் வந்தது . ” உங்க பொண்டாட்டி அவசரத்துக்கு எல்லாம் நாங்க படுக்க முடியாது, எங்களுக்கு எப்போ படுக்கணுமோ அப்போ தான் எடுக்க முடியும் “ சுரீர் என்ற பதிலில் சுருண்டு தான் போனாள். அந்த வீட்டு பெரியவர்கள் யாரும் அதை கண்டு கொண்டது போல தெரியவில்லை.ஒருவழியாக ஓய்த்து கொடுத்தார்கள் . படுத்த படியே ” யாருக்கு அவசரம் ? எதற்கு அவசரம் ? ” என்று மனதுக்குள் பொருமி கொண்டு இருந்தவளிடம் கணவன் ,
” செல்ல குட்டி! மூட் அவுட் ஆ? என்றான்.” இல்லையே “ என்றாள் .” உங்க வீடு சிஸ்டம் வேற.இங்க வேற.அவங்க அப்படி தான் சொல்லி கிட்டு இருப்பாங்க . நீ ஒண்ணும் கண்டுக்காதே. போக போக எல்லாம் சரியாயிடும்.அத விடு . இப்போ உனக்கு ஒரு குட் நியூஸ்.நாளை மறுநாள் நாம கொடைக்கானல் போறோம் . அங்க போய்….தனியா…ஜாலியா….எந்த டிஸ்டர்பும் இல்லாம……….ஏதேதோ பேசிய படியே , நெருங்கி வந்தான் . காது கூசியது அவன் பேச்சில்லா ? இல்லை மூச்சிலா? கட்டி அணைத்த போது கண் சொருகி போனாள் . கொடைக்கானல் வந்தது . படகுக் குழாம். கணவனோடு ஒரே ஷால் போர்த்தியபடி இவள். கையில் பாப் கான். எடுத்து இவள் ஊட்ட…அப்படியே நடக்கையில் ஐஸ் கிரீம் வண்டிக்காரன்…. மணி சத்தம். ….
சத்தம் கேட்டது, மாமியார் சத்தம், “சத்யா …சத்யா ….பால்காரன் பெல் அடிக்குறது காதுல விழல ஐந்து மணிக்கு மேல நல்ல குடும்பத்து பொண்ணு தூங்குவளா?…’” துள்ளி எழும்பியவளுக்கோ தூக்கி வாரி போட்டது ” ச்சே ..கனவா ?” ….கதவைத் திறந்து பால் வாங்கி வைத்து விட்டு குளிக்க போனாள். விருந்தாளிகள் எல்லோரும் ஊருக்கு கிளம்பி கொண்டு இருந்தார்கள் .அவர்கள் போனதும் , பிரேம் சமையலறையில் தன் அம்மாவிடம் கெஞ்சுவது கேட்டது
” அம்மா ப்ளீஸ் மா. நான் அவ கிட்டே சொல்லிட்டேனே , ஹனி மூன் கூட்டி கிட்டு போறேன்னு நாலு நாள் இல்லைல்ல…..மூணு நாள் மா . போய்ட்டு வந்துடுறோம். ” .அம்மாவிடமிருந்து பதில் வந்தது “ ஏன்டா சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா ? நம்ப குடும்பத்துல இது எல்லாம் பழக்கம் கிடையாது. அதும் இல்லாம இப்போ தான் இவ்ளோ செலவு செஞ்சி கல்யாணம் எடுத்து இருக்கு . இப்போ எதுக்கு இது வேற அனாவசிய செலவு. நானும் உங்க அப்பாவும் இப்படி எல்லாமா போனோம் ? இன்னிக்கு நாங்க நல்ல இல்ல ?. அவனோ விடாது ” அம்மா உங்க காலம் வேற, இதெல்லாம் ஒரு செலவா ? ” என …” ஏன்டா , நீ சம்பாதிச்சு குடுக்குற தைரியத்துல அம்மாவை எதிர்த்து பேசுறியா ? நீ குடுத்த பணம் மொத்தமும் கல்யாண செலவுக்கே சரியாய் போச்சி , இனி நீ அடுத்த மாசம் சம்பளம் வாங்கின தான் …. .இதுல ஹனி மூன் ….அது …இது.…னுகிட்டு …. எரிச்சலான பிரேம் ,”சரி…சரி… நான் எங்கயும் போல சரியா ? என்றபடி விலகினான்.
முகம் வாடி போனது பிரேமுக்கு .குளியலறையில் கேட்டு கொண்டு இருந்த சத்யாவுக்கு கண்ணீர் முட்டியது,அழுது தீர்த்தாள் .வெளியே வந்தவள் கணவன் முகத்தை பார்க்க தவறவில்லை . பாவமாக இருந்தது.
இன்னொரு நாள் திடீரென ,வெளியே போய் வந்த பிரேம் அழைத்தான் “சத்யா,கிளம்பு சிக்கிரம் ….காமராஜ் ஹால்ல, மியூசிக் அகெடமி ப்ரோக்ராம் . என் பிரண்ட் டிக்கெட் குடுத்தான் , என்றவன் அம்மாவிடம் போய் ” அம்மா , ஆட்டோவுக்கு பணம் குடும்மா” . ” ஏன்டா , இங்க இருக்க தேனம் பேட்டைக்கு எதுக்கு ஆட்டோ ? அப்படியே பஸ் புடுச்சா போய் இறங்கிடலாம். “ என அதற்க்கு மேல் பேசாமல் , ரெடி ஆகி வந்த சத்யாவை கூட்டி கொண்டு , பஸ்க்கு காத்திருந்து, ஸ்ட்ரைட் பஸ் கிடைக்கததால் , இரண்டு பஸ் மாறி, ஒரு வழியா போய் சேர்ந்த போது ப்ரோக்ராம் முடிவுக்கு வந்து இருந்தது . மீண்டும் அதே பஸ் பயணம் செய்து வீடு திரும்பினர்.
இப்படியே நாட்கள் நகர்ந்தன ……
அவளுக்கு பிறந்த நாள் வந்தது . பச்சை பட்டு சேலை அவள் அம்மா எடுத்து கொடுத்தது புதிதாய் இருந்தது . ஆனால் அதற்க்கு மாட்சிங் ப்ளவுஸ் எடுத்து தைக்க டைம் இல்லாமல் வந்து விட்டாள். கணவனை அழைத்தாள் ,” பிரேம் , பர்த் டேக்கு புது புடவை இருக்கு , ஆனா மாட்சிங் ப்ளவுஸ் தான் இல்லை , போய் எடுக்கலாமா ?.” ” ஐயோ, என் கிட்ட காசு இல்ல அம்மா கிட்ட போய் வாங்கிட்டு வரேன் ” என்றான் .
அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது , இந்த காலத்தில் இப்படி ஒரு மகனா ? தான் சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் அம்மாவிடம் கொடுத்து விட்டு, சின்ன சின்ன செலவுகளுக்கும் அம்மாவின் கையை எதிர் பார்க்கும் இவன் நல்ல மகன் என்று பூரித்து போவதா ? இல்லை இப்படி ஒன்றோனுற்றுக்கும் அம்மாவிடம் கேட்டு அந்தம்மா முடியாது என மறுத்ததும் என்னிடம் வந்து தலை குனித்து போகிறானே என்று வேதனை படுவதா என்று புரியவில்லை. எதிர் பார்த்த படியே,அவன் அம்மாவின் பதில் கேட்டது ” ஏன்டா ! கல்யாணமாகி புருஷன் வீட்டுக்கு வர பொண்ணு.தனக்கு தேவையான ப்ளவுஸ் கூடவா எடுத்து வர மாட்டா ? இது எல்லாம் கூடவா இங்க வந்து எடுத்து தைப்பாங்க ? ஏற்கனவே கல்யாணத்துக்கு இவளுக்கு எடுத்த பட்டு தான் வில ஜாஸ்தி , பத்தாததுக்கு நிச்சய பட்டு வேற …..என்னமோ போ ” என்றது கேட்டது.
அதற்கு மேல் அந்த ப்ளவுஸ் தேவையே இல்லை என்று தோன்றியது “ ஏங்க ! ப்ளவுஸ் கிடைச்சிருச்சி “என்றாள்.அவள் கையில் கருப்பு ப்ளவுஸ். எல்லாவற்றுக்கும் மேட்ச் ஆகுமே.
பிறந்த நாளுக்கு முந்தைய நாள் . அவன் அம்மாவிடம் கேட்டான். ” அம்மா , நாளைக்கு சத்யா பர்த் டே இல்ல,”பூவெல்லாம் கேட்டு பார் ” படம் போய்ட்டு ஹோட்டெல சாப்டுட்டு வந்துடுறோம் “.
அம்மா சொன்னாள் ” ஹோட்டல் சாப்பாடு எல்லாம் நல்லது கிடையாது. சூர்யா படம் தானே.அது பிரியா கூட பாக்கனும்னு சொல்லிட்டு இருந்தா ,நான் அப்பா கிட்டே சொல்லி எல்லோருக்குமா சேர்த்து டிக்கெட் எடுக்க சொல்றேன் என்றாள். இனி சரிபடாது என்று விட்டுவிட்டான் .
மறுநாள் விடிந்தது . ” ஹாப்பி பர்த் டே செல்ல குட்டி , சீக்கிரம் கிளம்பு , சினிமா போறோம், மெதுவாக சொன்னான் ” .எழும்பியவளிடம் ” யார் கிட்டவும் சொல்லாதே “. சொல்லாம எப்படி ? அவள் . நான் ஏற்கனவே அம்மா கிட்டே கோயிலுக்கு போறோம்னு சொல்லிட்டேன் . ஒருவழியாக சினிமா தியேட்டர் வந்து சேர்ந்து உட்கார்ந்தால் ,அங்கே படம் பார்க்க விட வில்லை . நொடிக்கு ஒரு தரம் “ போய்டலாமா ? அம்மா ஏன் லேட்? கோயிலுக்கு போய்ட்டு வர இவ்ளோ நேரமானு கேப்பாங்க ? ” ..கடைசியில் இடைவேளை வந்ததும் எழுப்பி கூட்டி கொண்டு வந்து விட்டன். சத்யாவுக்கு எரிச்சலாக வந்தது .
எதுக்கு என்ன இங்க கூட்டி கொண்டு வந்தீங்க ? நான் நிம்மதியா வீட்டிலேயே இருந்து இருப்பேனே என்றாள் ….
வாசலில் கார் சத்தம் கேட்டது. பின்னோக்கிய நினைவலையிலிருந்து மீண்ட சத்யா இப்போது குழந்தையை குளிப்பாட்டி முடித்து இருந்தாள்
குழந்தையை எடுத்து , துடைத்து , பவுடர் பூசும் போது , பிரியா வந்து விட்டாள் . மாமியாரின் உபசரிப்பு , மகளின் புகுந்த வீட்டு புராணம் , எல்லாம் காதில் விழுந்தது .
இவளும் போய் நலம் விசாரித்தாள். பிரியாவின் கணவன் குழந்தையை வாங்கி கொண்டார்.
பஜ்ஜி , பாயசம் எல்லாம் சாப்பிட்டு விட்டு கிளம்பி விட்டார்கள் சினிமாவுக்கு .போனவர்கள் 11 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தார்கள் . இவள் தான் போய் கதவை திறந்து விட்டாள் . இப்போது முறை அவர்களுக்கு . அந்த பெட் ரூம் அவர்களுடையது .அனைவரும் ஹாலில் தான் படுத்திருந்தார்கள்.கதவு திறக்கும் ஓசை கேட்டு எழுந்த குழந்தை அதன் பின் இரவு முழுவதும் தூங்கவும் இல்லை . இவளையும் தூங்க விடவில்லை.
காலை மணி 9 .30 ஆகி விட்டது . குழந்தைக்கு மருந்து கொடுக்க வேண்டும் . மருந்து பெட் ரூம் ஷெல்பில் இருக்கிறது . கதவு இன்னும் திறந்த பாடில்லை. தட்டவா ? வேணாமா ? என்று யோசித்தபடி , கதவை நெருங்கியவளுக்கு , தட்டி நிறுத்தியது மாமியாரின் குரல் .
” ஏய் , உனக்கு இங்கிதம் தெரியாதா ? புதுசா கல்யாணம் ஆனவங்க ? மெதுவா தான் எழும்பி வரட்டுமே ? இங்க என்ன குடியா மூழ்கி போகுது ? எல்லாம் உனக்கு சொல்லி தரணுமா ? என்று போதிக்க ஆரம்பித்தார் .
அவ்விடம் விட்டு நகர்ந்து தன் வேலையை தொடர்ந்தாள் . அவளுக்கு இது ஒன்றும் புதிதல்லவே ?
சிறிது நேரம் கழித்து, பிரியா ட்ரான்ஸ்பரென்ட் நைட் ட்ரஸில் மொபைலில் யாருக்கோ வழி சொல்லியபடி வெளி வர …
அவளை பார்க்க வந்த பிரெண்ட் கைனடிக் ஹோண்டாவை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தாள். ” என்னடி பிரியா , எப்படி இருக்கே , கல்யாணத்துக்கு தான் வர முடியல. அதுவும் இல்லாம மேடம் ஹனி மூன் வேற கிளம்பிட்டு இருக்கீங்க , ரொம்ப பிஸி போல , உன்ன இப்போ விட்டா பிடிக்க முடியாது, பை தி வே இதெல்லாம் நீ போட்டு நான் பாத்ததே இல்லையே , எனி ஹவ் , நல்ல இருக்கு ! கலக்குறே ! என்றாள்
அப்போது தான் வெளியே வந்த மாமியார் “வாம்மா அனிதா! எப்படி இருக்கே ? பிரியா…. ஐயோ என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. அனிதா சொன்னது சரி தான் ” என்றாள் .
பிரியா ” இது என்கேஜிமென்ட் முடுச்சிட்டுஅவர் சிங்கபூர் போயிருந்தபோவே எனக்காக வாங்கி வச்சி இருந்தாரு “
தலையணைக்கு உறை போட்டு கொண்டு இருந்த சத்யா நிமிர்ந்து பார்த்தாள்,நைட்டி அழகாக தான் இருந்தது. ஆனால் அத்தனையும் தெரிந்தது. குளித்து விட்டு வந்த பிரேம் குழந்தை விடாமல் அழும் சத்தம் கேட்டு ,” சத்யா ! குழந்தே ! அழுகுது பாரு, காதுல விழல ” என்றான் .
சத்யா மனதுக்குள் , குழந்த சத்தமா அழுறதுனால உங்களுக்கு கேட்டது . சத்தமே இல்லாம இங்க நான் ஒருத்தி அழுறது உங்களுக்கு புரியவே இல்லையா ? என்று நினைத்த படியே ” அது விடிய விடிய அழுது அழுது உயிரை எடுக்குது . நான் என்ன செய்யட்டும் ? ” என்றாள் .
திரும்ப பிரேம் ,” என்ன பொறுப்பில்லாத பதில்!ஒரு நல்ல அம்மாவா நடந்துக்க முயற்சி பண்ணு ” என்றான்.
” இந்த பதில் எனக்கு மட்டும் தானா பிரேம் ? “, நுனி நாக்கு
வரை வந்து விட்ட கேள்வியை கேட்க நினைத்து கேட்காமலே மரத்து போன உணர்ச்சிகளுடன் மரமாகி நின்றாள் சத்யா.
..சபீனா ..
நன்றி ;மூன்றாம் கோணம்