நம்பிக்கை
பேச ஆரம்பித்து
இடையிலே நிறுத்திக்
கொண்ட மழையின்
உரையாடலில்
மௌனமாகக்
கரைந்து
கொண்டிருந்தது
சாலையோர
ஓவியனின்
பாதி முடிக்கப்பட்ட
ஓவியம் ஒன்று.
பாய்ந்தோடும்
வெள்ளத்தில்
கலைந்து
சென்றுகொண்டிருந்த
ஓவியத்தின்
வர்ணங்களோடு
தொலைந்து
கொண்டிருந்தன
அவன் கனவுகளும்
கற்பனைகளும்..
நனைவதற்கஞ்சி
நிழல் தேடிய
மனிதர்களின்
மீள் வருகையை
எதிர் பார்க்காது
மழை நீரால்
மட்டும்
நிரம்பியிருக்கும்
சில்லறைத்
தட்டைச் சரித்து
கொட்டி விட்டு
மறுபடியும்
வரையத்தொடங்கும்
மாற்றுத் திறனாளி
ஓவியனின்
விரல்கள் இல்லாத
வெறும்
கைகளில்
இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறது
நம்பிக்கை
எனும் ஆயுதம்.