அம்மா-மகளிர் தின கவிதை
அம்மா உலகின்
முதல் இறை.
அவளின்றி
சன்னிதானம் எது?
ஏட்டில் சொன்னாலும்
எழுதிப் படித்தாலும்
புனிதங்கள்
தொழுகையில் தான்
மகிமை பெறும்.
மனதை தொடும்.
தாய்யெனும்
புனிதத்தை
தொழாதவன்
தீதுயென
தள்ளப்படுவான்...!
இக் கவிதை
நிலவுக்கு
மேகங்கள் கூடி
நடத்தும் அன்பு
சீண்டல் போல;
வானத்திற்கு
தென்றல்
தீட்டும்
வர்ண ஒத்திகை போல;
நானும்
அம்மாவும்
முந்திரி தோப்பு
வேலியில் கற்றாழை
இரவு நேர வண்டின்
"கீச்" ஓசை
அம்மா தனியாக
வீட்டு வாசலில்
காத்திருப்பாள்....!
தூரத்தில் சைக்கிள்
வரும் ஓசைக் கேட்டு;
திடுக்கிட்டு அவள்
பார்க்கும் பார்வையில்
பாசம் மின்னலென
ஒளிக் காட்டும்...!
மவராசன் வந்துட்டான்
என அவள் எழ
அருகில் படுத்து இருந்த
நாய் வாலாட்டி;
மனிதர்களை விட
நான் நன்றி என
சொல்லும்..!
தினமும் அம்மாவுக்கு
இது வாடிக்கை.
ஆனால் சலித்ததில்லை
சங்கடப்பட்டதில்லை
இரவு இரண்டு
மணிக்கு மேல்
சூடாக உணவிட்டு,
கை விசிறியில் தாலாட்டி,
என் தலை கோதி மகிழும்.
அம்மவின் விழி மட்டும்
ஏதையோ கேட்டும்...!
கருகமணி தொங்கல்
சுருக்கு பையில்
வங்கி நடத்தினாள்.
வட்டி இல்லா
கடன் எனக்கு,
எப்பொழுதும்
கடன் தள்ளுபடிதான்...!
இன்று
அம்மா
இருமி கொண்டிருக்கிறாள்..!
வாயில் எட்டிப் பார்க்கும்
எச்சிலை யாரோ துடைக்கின்றனர்...
அவளை சந்திப்பது
மாதத்தில்
ஒரு முறைதான்
முதியோர் இல்லத்தில்
பணம் கட்டும் போது...
குடும்ப உறவுகள்
விரிவடையும் போது
தாய்மைகள்
வலிகளாகி
விலகி விடுகின்றன.
இப்போழுதும்
அம்மா விழிகள்
எதையோ தேடுகிறது .....
கடந்த காலம் போல
அம்மா எதையோ கேட்கிறாள்..!
அம்மா......!
அழைத்தேன்.
திரும்பினாள்
விழியில்.நீர்......
அது எதையோ
கேட்டது...!
கரம் பற்றினேன்...
மகனே ஒரு நிமிடம்
அம்மாவிடம் பேசு
ஆசையாய் இருக்கிறது
என்றாள்...
அருகில் அமர்ந்து
அம்மா தலையை
திருப்பினேன்
அம்மா....
பேசாமலே......
போய் விட்டாள்....!
அம்மா....?
நாஞ்சில் இன்பா
9566274503-91