முள் வேலிக்குள் முல்லை மொட்டு
செங்காட்டுப் பூமியிலே
செம்மண் பறக்கும் காற்றினிலே
பூவுக்குள்ளே நீ
தேன் துளியாய் பிறந்தவள்.....
அழகான வீட்டுக்குள்ளே
அதிலொருக் கூட்டுக்குள்ளே
சின்னக் கிளியாக நீ வளர்ந்தவள்.....
துள்ளித் திரியும் பருவ வயசுதான்
பசும் பால் போல
உன் மனசுதான்...
என் நெஞ்சில் மலர்ந்த
அன்றில் பறவைதான்...
அனலில் மெழுகாய் தினம் வாடுதே......
செங்காட்டுப் பூமியிலே
செம்மண் பறக்கும் காற்றினிலே.....
மாங்கொழுந்தாக இருந்தாய் நீ அப்போது...
காய்ந்த சருகாய் ஆனதென்ன இப்போது...
பஞ்சனையில் துயில் எழுந்த மேனியோ?...
கட்டாந்தரையில் காற்றின்றி உறங்குதே.....
தங்கம் தீயில் உருகி ஒளிருது
என் தங்கையோ?... தீக்கிடையில் நித்தம் வேகுதே...
காம்பறுந்த முல்லை மொட்டாய்
வேதனை வெயிலில் வதங்கி வாழுதே......
பார்த்து என் நெஞ்சம் பதறுது
உணர்வின்றி உள்ளுக்குள்ளேயே இதயம் சாகுது......
செங்காட்டுப் பூமியிலே
செம்மண் பறக்கும் காற்றினிலே....
வானவில் நிறம் போல
வாழ்ந்து வந்த உன் வாழ்க்கை
சாயம் போன சேலைப் போல
வேலி முள்ளில் சிக்கிடுச்சே......
சொந்த இரத்தம் அங்கே
சொந்தப் பந்தங்கள் உறிஞ்சிக் குடிக்குது...
உள் உணர்வுகளை உரசி உரசி
பாவிகள் நெஞ்சம் குளிர்க் காயுது......
மனசுக்குள்ளே அழும் மயிலே
உன் சோகத்தில் என் தேகம் உறையுதே......
செங்காட்டுப் பூமியிலே
செம்மண் பறக்கும் காற்றினிலே.....