ஒரு நிமிடக்கதை - டாஸ்மாக்

''டேய்! இந்த மாத கடைசியோடு,'டாஸ்மாக்' இருக்காது. அ.தி.மு.க., - தி.மு.க., அல்லது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், 'டாஸ்மாக்'கை மூடிவிடுவர். வா நாம இன்றைக்கு நன்றாக குடித்துவிட்டு, குடிப்பதை நிறுத்தி விடுவோம்,'' என்று டாஸ்மாக் சென்றனர்,

நண்பர்கள், 'நடுத்தெரு' நாகராஜனும், பிச்சையப்பனும். நல்ல போதையேறிய நிலையில், இருவரும் தட்டுத்தடுமாறி நடந்து சென்று ஒரு விஞ்ஞானியின் வீட்டுக்குள் தெரியாமல் நுழைந்து விட்டனர். அங்கிருந்த, 'டைம் மிஷினை' பார்த்ததும், இருவருக்கும் குஷியாகிவிட்டது.அதை சோதித்து பார்க்க நினைத்து, இருவரும் அதில், ஏறிக்கொள்கின்றனர். அவர்கள் நேராகச்சென்றது, 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள். அங்கிருந்த, 'டிவி'யை போட்டு பார்க்கின்றனர்.

'டிவி'யில், 'தமிழக சட்டசபைக்கு நடக்க உள்ள தேர்தலில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளன' என்ற செய்தி ஒளிபரப்பானது.

நண்பர்களுக்கு துாக்கிவாரிப்போட்டது. 'ஏன்டா, 2016லயும் இதைத்தானே சொன்னார்கள். அப்போ மதுவிலக்கு வரவில்லையா?' என்று தங்களுக்குள் கேள்வி கேட்டனர்.'சரி, என்ன தான் நடந்தது என்பதை பார்ப்பாமே' என, மீண்டும் டைம் மிஷினில் ஏறி, 2016 மே மாத இறுதிக்கு வந்தனர். எதிரே இருந்த, 'டிவி'யை போட்டு பார்த்தனர்.'பக்கத்து மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திராவில் மதுவிலக்கு இல்லாததாலும்; தமிழக, குடி'மகன்கள் அந்த மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதை தடுக்கும் பொருட்டும்;

மாநிலத்தின் மோசமான நிதி நிலையைக் கருத்தில் கொண்டும்' ஆயிரக்கணக்கான டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றும், அவர்களுக்கு மாற்றுப்பணிக்கு ஏற்பாடு செய்யும் வரை, தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியம் இல்லை.

'இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வரை, டாஸ்மாக் மது விற்பனை தொடரும். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், அரசுக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தரும் அறிக்கையின் அடிப்படையில், மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து ஆராயப்படும்' என, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்ட உள்ளதாக, 'டிவி'யில் அறிவித்தனர். 'பூரண மதுவிலக்கும் வரவில்லை;படிப்படியாகவும் வரவில்லை.

அப்போது யார் தான் ஆட்சிக்கு வந்தனர்?' என்று நடுத்தெருவுக்கும், பிச்சையப்பனுக்கும் சந்தேகம் ஏற்பட்டது.டைம் மிஷினில் ஏறி, 2016 மே, 19ம் தேதிக்கு செல்ல முயன்றபோது, மின்சாரம் துண்டிப்பாகி, புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்தனர்.

அப்போது தெருவில், பிரசார வாகனங்களில் ஒலித்தன - 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், பூரண மதுவிலக்குதான் முதல் கையெழுத்து; நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்!'வெறுப்படைந்த நண்பர்கள், இறங்கிய போதையை ஏற்றிக் கொள்ள மீண்டும் டாஸ்மாக்குக்குள் நுழைந்தனர்

🍸 🍺 🍷

எழுதியவர் : செல்வமணி (11-May-16, 8:29 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 267

மேலே