இன்றைய அரசியல் விழிப்பு உணர்வு கருத்த்துக்கள் தொகுப்பு
தொடர்ந்து தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு பெரிய வேறுபாடுகள் இல்லை. காங்கிரஸ், பா.ஜ.க இரண்டும் மதவாத மற்றும் வர்ணசிரம கொள்கைகளை கொண்டிருந்தப்போதிலும் மாநில கட்சிகளான தி.மு.க மற்றும் அதிமுக போன்ற கட்சிகளில் அத்தகைய மதவாத, வர்ணாசிரம கொள்கைகள் நேரடியாக இல்லையென்றாலும் சாதிய ஓடுக்குமுறைகள் தலைவிரித்தாடுகின்றன.
ம.தி.மு.க சரியான அரசியல் தலைமையில்லாததால் தட்டுத்தடுமாறி சரியான நேரத்தில் சரியான வேலையை செய்ய முடியாமல் செல்வாக்கிழந்துள்ளது. பா.ம.க சந்தர்பவாத அரசியலில் சிக்கி சின்னபின்னமாகிவிட்டது. தாழ்த்தப்பட்டவர்களின்
உரிமையை மீட்டெடுக்கப் புறப்பட்ட இயக்கம் வி.சி, ஆனால் அதுவே இன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானதாக கருதப்படும் நிலையில் உள்ளது.
அரசியல் கட்சிகளின் நிலைமை இப்படி இருக்க தமிழர்களுக்காக போராடுகிறோம் என சொல்லிக்கொண்டிருக்கும் அத்துனை தமிழ்தேசிய அமைப்புகளும் தனித்தனி சித்தாந்தத்தை கடைப்பிடித்து வருகின்றதோடு வரட்டு பிடிவாதம்பேசி தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றன.
இவர்களின் இருப்பு சமுதாயத்தில் இவ்வாறாக உள்ள நிலையில், பெரும்பான்மையான மக்கள் எப்படி உள்ளார்கள் என்றால். தமிழன் என்ற உணர்வு கிஞ்சிதம் அற்ற தன்னை ஒரு இந்திய தேசிய பற்றாளனாகவும், இந்திய தேசியத்தை தாங்கி பிடிக்கக்கூடியவர்களாவும் காட்டிக்கொள்வதுடன், பார்ப்பனியப் பண்பாட்டை ஒட்டுமொத்த இந்தியாவின் பண்பாடாக கருதிக்கொண்டு, அந்த பண்பாட்டினை கடைப்பிடிக்கவும் தங்களையும் பார்ப்பனர்கள் போல காட்டிக்கொள்ளவும் சந்தர்ப்பங்களை எதிர் நோக்கியுள்ளார்கள். ஆங்கிலத்திலே கல்வி கற்கிறார்கள், ஆனால் சிந்திப்பதோ தாய்மொழியில். நம் காலத்திலே வாழ்ந்துக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறுசுகள் கூட தாய்மொழியிலே பேசுவதைக் கேவலமான விடயமாகவே கருதுகிறார்கள், அவர்களுக்கு தாய்மொழியிலே எழுதவும், எழுத்துக்கூட்டி படிக்கத்தெரியாது என்பதும் இங்கு நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
அன்னியர்களும், வெள்ளையர்களும் சுரண்டியதுப்போக மீதமுள்ள நம் தேசிய வளங்களை இந்தியர் என்ற பெயரிலே வடநாட்டவரும் இந்திய ஆளும் வர்கத்தைச்சேர்ந்த ஆதிக்க வர்க்கங்களும், மதவாத சக்திகளும் இந்திய நிலப்பரப்பில் தன்னை இந்தியன் என்று பறைச்சாற்றிக்கொண்டு கணக்கில்லா சொத்துக்களை குவித்துக்கொண்டிருக்கும் இந்திய ஏகாதிபத்தியவாதிகளும், முதலாளிகளும் நம் தாய்மண்ணை தொடர்ந்து நமக்கு தெரிந்தும் நமக்கு தெரியாமலும் கொள்ளை அடித்துக் கொண்டிருப்பதை நாம் உணர்ந்தும் உணராதநிலையிலே இருக்கின்றோம்.
திராவிடநாடு, தனித்தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு, மொழிவாரி மாநிலம், பெண்ணுரிமை, இடஒதுக்கீடு, தன்மானம், சுயமரியாதை, பகுத்தறிவு கருத்துகள், சாதி மத எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, தனியார்மய எதிர்ப்பு மற்றும் பண்ணை(ஜமீந்தார்) எதிர்ப்பு, விவசாயிக்கான உரிமைப்போராட்டம் இப்படி பல்வேறு கட்டங்களில் வரலாற்றில் தமிழர்கள் தங்களுடைய அடையாளங்களை தவறாமல் பதிவுசெய்தவர்கள். இந்தப் போராட்டங்களையே மூலதனமாக மாற்றி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளே தமிழர்களின் இன்றைய நிலைக்குப் பெரிதும் காரணமாக இருக்கின்றார்கள். அதே வேலையில் தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் அல்லது தமிழர்களின் உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் அமைப்புகளும் சரியான நேரத்திலே, சரியான வேலையை செய்யத்தவறியதே முதன்மைக்காரணமாகவும் இங்கு நாம் பார்க்கவேண்டியுள்ளது. (உதரணமாக தமிழக அரசை வேலைவாங்கும் ஆற்றல் அன்று பெரியாருக்கு இருந்தது, அவருக்குப்பின் அதுப்போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததாக கூட நாம் எங்கும் காணமுடியாது)
தமிழ்தேசிய வளங்களைப் காப்பது, மண், நீர்(கடல், ஏரிகள் மற்றும் ஆறுகள்), காடுகள், தாவரங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் உயிரினங்கள்(கால்நடைகள்)பெரும்பான்மையான வளங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலே தான் உள்ளது. அதிலிருந்து பெறக்கூடிய வருமானங்கள் எல்லாம் மைய அரசுக்கு சென்றுக்கொண்டிருக்கின்ற அவலத்தை நாம் கண்டும் கணாமல் இருக்கின்றோம். மேலும் தமிழ்நாட்டின் தேசிய வளங்கள் பன்நாட்டு நிறுவனங்களுக்கு மலிவான விலைக்கு விற்கப்பட்டுகொண்டிருப்பதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். ஏன் உச்சநீதிமன்றத்தீர்பை அவமதித்த அண்டைமாநிலங்களை தட்டிக்கேட்க முடியாத நிலையிலே தமிழக அரசு இன்றும் உள்ளது.
அப்படி என்றால் நாம் எதனை கொண்டு இவற்றையெல்லாம் தடுக்கப்போகிறோம்.
நாம் இந்தியர்கள் அல்ல, நாம் 64 ஆண்டுகளாத்தான் இந்தியன் என்ற பட்டம் சுமந்துக்கொண்டிருக்கின்றோம் என கூச்சல் இட்டால் போதுமா?எப்படி தேசியம் என்ற சொல் 18 ஆம் நூற்றாண்டிலே உருவாகி அதன் பின்பு இயந்திரபுரட்சியால் தொழிற்புரட்சி உருவாகி வர்க்கப்போராட்டங்களாக மாறி அதன் பின்பு பல்வேறு தேசிய இனங்களுக்கான நாடுகள் உலகில் தோன்றியதோ, அதுபோலவே வரலாற்றிப்போக்கிலே தமிழ்நாடும் தனிநாடாகும் என காத்திருக்கப்போகிறோமா?
அல்லது தமிழ்நாட்டில் தமிழ்தேசியத் தேவையை ஒட்டி நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் கூர்மழிந்த ஜனநாயக போராட்டத்தையும் மட்டும் தொடர்ந்துக்கொண்டு இருக்க போகிறோமோ அல்லது மாற்றுப்போராட்ட வடிவங்களையும் நாம் கையில் ஏந்தப்போகிறோமா?
மக்களை திரட்டி ,மக்கள் போராட்டங்கள் பெருமளவில் நடத்துவதன் மூலமாகவே மாற்றங்களை பெறமுடியும் .இன்று கூடங்குளம் மக்கள் போராட்டம் ,முல்லை பெரியாருக்காக மக்கள் நடத்தும் போராட்டம் ஒரு புதிய வரலாற்றினை எழுதுகின்றன .
நாமோ எப்போதும் போல யாரவது வந்து நம்மை காப்பாற்றி விடமாட்டார்களா ?என்றபடி இன்னும் கனவுலகை விட்டு வெளியே வரமுடியாமல் ,காலத்தை கடத்திக்கொண்டு ….யாரும் சரியில்லை என்று விமர்சனம் செய்து கொண்டு ,அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு ……………….
கு.கண்ணன்