ஐடியும் - நிதர்சன உண்மையும் ஒரு சாமானியனின் குரல்
மடிப்பு கலையாத சட்டை, கை நிறைய சம்பளம், கிரெடிட் கார்டு பத்தாததுக்கு பிகரு - இவ்ளோ இருக்கு. வாழ்க்கையை நல்லா என்ஜாய் பண்றீங்கடானு ஊர் பக்கம் போனாலே நண்பர் வட்டம் இதைதான் சொல்வாய்ங்க. ஆனால் உண்மை என்னான்னு சொன்னா கூட நம்ப மாட்டாய்ங்க!
'ஐடில வேலை பாக்குற, ஒரு பொண்ண அறிமுகபடுத்திவைனு, உயிர் நண்பன் உயிரை வாங்குவான். நமக்கே வக்கில்லங்கறது தான் உண்மை. 'என்னப்பா தீபாவளி ஊக்கத்தொகை எவ்ளோ தருவாங்கனு?' அம்மா மிரட்டுவாங்க. 'என்னடா நேத்து சேர்ந்த அவனுக்கு 12,000. நீ போயி 2 வருஷம் ஆச்சி இன்னும் 14,500ங்றனு' அப்பா கேட்டு நோகடிப்பர். பாவம், அவருக்கு எங்க தெரிய போகுது, appraisal முறையெல்லாம். அப்படி என்னதான் நடக்குது இங்க?
முதல்ல IT & BPOனு ரெண்டு இருக்குனு தெரிஞ்சிக்கணும். ரெண்டுமே ஏறக்குறைய ஒண்ணுதான். நீங்க நினைக்குற மாதிரி கை நிறைய சம்பளம்லாம் இல்லை. 'வேலையில்லா பட்டதாரி' படத்துல தனுசுக்கு முதல் மாத சம்பளம் 50,000னு சொன்னப்ப எனக்கு சிரிப்புதான் வந்துச்சு. TCS, CTS அதுமாதிரி MNC கம்பெனிலயே அதிகபட்சமா 12,000தான் கிடைக்கும். கொஞ்சம் சின்ன கம்பெனிலாம் ரொம்ப மோசம் 6,000 முதல் 8,000 தான் கிடைக்கும். பேருக்குதான் 8 மணி நேர வேலை. உண்மையில் 10 மணி நேரத்தை கூட தாண்டிடும். இங்க உங்க நேரத்தை கணக்கிட தனியா ஒரு 'மென்பொருளே' இருக்கு. ஒவ்வொரு நிமிசத்துக்கும் ஒரு தடவை 1னு டைப் பண்ணி என்டர் தட்டனும். 9 மணி நேரத்துக்கு 540 தடவை கரெக்ட்டா ரெகார்ட் இருக்கனும். இல்லனா, அன்னைக்கே மேனேஜரோட மீட்டிங் தான்.
நம்ம ப்ராஜெக்ட்ல யூஎஸ் ஹாலிடே மட்டும்னு சொல்வாங்க. 'இந்திய சுதந்திர தினம்' அன்னைக்கு எங்களுக்கு சுதந்திரம் கிடையாது. அதே மாதிரி, கண்டிப்பாக 'அமெரிக்க சுதந்திர தினம்' அன்னைக்கும் அலுவலகம் உண்டு. வருடத்திற்கு 45 நாள் விடுமுறை எடுக்கலாம்னு சொல்வாங்க. ஆனால், விடுமுறை எடுத்தால் கண்டிப்பாக appraisalல செஞ்சிடுவாங்க. வாரத்துக்கு ஒரு தடவை மீட்டிங் வச்சி, நல்ல வேலை செஞ்சிங்கனு ஒரு 'டைரி மில்க்' கொடுப்பாங்க. அந்த ஒரு சாக்லெட் வாங்க மொத்த கூட்டமும் யோசனை இல்லாம மாங்கு மாங்குன்னு வேலை செய்வோம். அந்த அளவுக்கு, போட்டி மனப்பான்மை வளந்திடும். பள்ளி, கல்லூரி மாதிரிலாம் நட்பை எதிர்பார்க்க முடியாது. அதையும் மீறி சிலருக்கு அமைஞ்சா அபூர்வம் தான்.
அப்புறம் முக்கியமா பப்புக்கு போயிருக்கியா? ஷாப்பிங் மால்ல அழகான பொண்ணுங்கலாம் வருமே, சத்யம் தியேட்டர்ல Couple சீட்ல படம் பார்த்து இருக்கியானு இன்னபிற கேள்வி கேட்டு நம்ம ஆசையையும் தூண்டுவாங்க. வார இறுதி நாட்கள்ல சத்தியமா வீட்டுல அழுக்கு துணிதான் துவைப்போம். இந்த மாதிரி பாக்கியம்லாம் நமக்கு அமைஞ்சதே இல்லை.
முக்கியமா ஐடில வேலை பார்த்த, கண்டிப்பா அவனுக்கு பெண்தோழி இருப்பான்னு எல்லோரும் நினைப்பாங்க. ஆனா அதுல துளியும் உண்மை கிடையாது. பிகரு இல்லன்னு சொல்ற ஐடி பசங்கள்ட, 'ஏன் மச்சி, உனக்கு காதல்ல ஆர்வம் இல்லையான்னு' கேட்டு பாருங்க. 'இல்ல மச்சி வீட்டுல 'காதல் கல்யாணம்' ஒத்துக்க மாட்டாங்க'. நமக்கு லவ்வுல ஆர்வம் இல்லை. ஐடி பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்வாங்க. ஆனால், ஒன்னுத்துக்கும் வக்கில்லைங்கறது தான் நிதர்சன உண்மை. முடிஞ்சா 2 வருசத்துக்குள்ள யாரையாது லவ் பண்ணிடனும். இல்லேன்னா, ஜூனியர் பொண்ணுங்க எல்லாம் 'அண்ணா, ஒரு டவுட்டுனு' வந்து கடுப்பேத்தும். அப்பத்தான் நமக்கு தெரியும், நமக்கு கல்யாணம் ஆகுற வயசாச்சுன்னு.
மத்தவங்க நினைக்குற மாதிரி ஐடில பொண்ணுங்க எல்லாம் மோசம் இல்லை பாஸ். விடுதில தங்கிட்டு, அங்க தர கேவலமான உணவ சாப்புடுறவங்கள நான் பாத்து இருக்கேன். MTCல போன 20ரூபாய் மிச்சம்னு கூட்ட நெரிசல்ல வியர்வையோட போற பொண்ணுங்கள நீங்க இப்பவும் சென்னை மாநகர்ல பார்க்கலாம்.
இப்போ மறுபடியும் சம்பளத்துக்கு வருவோம். ஏற்கனவே சொன்ன மாதிரி கல்லூரி நட்பெல்லாம் இங்க எதிர் பாக்க முடியாது.மொத்தமா 4 பேரு டீ குடிக்க போனாலும், சரியா அவன் அவன் குடிச்ச டீக்குதான் காசு கொடுப்பாங்க. 12,000 வச்சிக்கிட்டு சென்னை மாதிரியான பெருநகரத்தில் வாழ்றதுலாம் கஷ்டம்தான். மாச கடைசில கடன் வாங்காம பொழப்ப ஓட்ட முடியாது. சம்பளம் வந்த முதல் வாரம் கண்டிப்பா பிரியாணி, கடைசி வாரம் தயிர் சாதம்தான். சில நேரம் டீ, பன் சாப்ட்டு கூட பொழப்ப ஓட்ட வேண்டியது இருக்கும். பேருக்குதான் ஆப்பிள், Samsung மொபைல், சத்யம் தியேட்டர்ல சினிமானு பொழப்பு ஓடும். இது எல்லாமே கிரெடிட் கார்டு இ.எம்.ஐல வந்து நிக்கிறப்பதான் கழுத்த நெரிக்கும். இத, சரிகட்ட அடுத்தகட்ட நடவடிக்கையா பேங்க்ல லோனுக்கு லோலோனு அலையணும். இதெல்லாம் அடைச்சிட்டு கல்யாணம் பண்றப்ப சத்தியமா முடி நரைச்சிடும்.
அப்புறம் சொந்த ஊருக்கு போறதுக்குள்ள அவ்ளோதான். கண்டிப்பா டிக்கெட் கிடைக்காது. புக் பண்ணி ஊருக்கு போலாம்னு இருந்தா, கண்டிப்பா அன்னைக்குதான் 'வீக் எண்டு' சப்போர்ட்டுனு மேனேஜர் கூப்டுவாங்க. ஆம்னி பஸ்ல சென்னை TO திருச்சிக்கு அசல்ட்டா Rs.800 கேட்பான். அட போங்கண்ணா, ரொம்ப அதிகம் அண்ணானு சொன்னா, 'சரி தம்பி, சீட் இல்லை. கீழ உக்காந்துக்கோ. டிக்கெட் Rs.350னு' சொல்வார். ஏற்கனவே உக்காந்து இருக்குறவன் கால் நம்ம மேல படும். நம்ம எதும் சொல்லாட்டியும், அவன் நம்மள ஒரு ஜந்து மாதிரி பார்ப்பான். இது மாதிரி அசிங்கப்பட்டு, அல்லல் பட்டு, ஒரு வழியா சொந்த ஊரு போன சொர்க்கம் மாதிரி. 'எப்படி இருக்க தம்பினு' அம்மா கேட்டா, 'ரொம்ப நல்லா இருக்கேனு' பொய் தான் சொல்வோம்.
வீட்ல கறி குழம்புல உப்பு இல்லைன்னு சண்டை போட்டவங்க எல்லாம் சென்னைல ஒரு வருஷம் இருந்துட்டு வீட்டுக்கு போன சாம்பார், ரசமே அமிர்தமா இருக்கும். அந்த ஒரு வருஷம் அம்மா பாசம் அதிகமாயிடும்ங்கறது வேறு கதை. இன்னும் அப்பரைசல், டீம் மீட்டிங், வெளிநாட்டு வாழ்க்கை, ரேட்டிங் நடைமுறை பத்திலாம் எழுதுனா, நீங்களே கண் கலந்குவீங்க.
இதெல்லாம் மீறி, போடா உனக்கு என்னப்பா? ஐடில வேலை பாக்குற ஒரு பொண்ண கூடவா நீ லவ் பண்ணமா இருப்பனு கேக்கும்போது, 'நான் எங்கடா திரிஷா கூட வாழ்ந்தேன்னுதான்' நினைக்க தோணும்!